×

ரூ.40 லட்சம் லஞ்சம் விவகாரத்தில் 35 பேருக்கு தொடர்பு, 75 பேர் பட்டியல் சிக்கிய நிலையில் மூத்த அதிகாரிகளை காப்பாற்ற அங்கித் திவாரி மீது திடீர் வழக்கு? கஸ்டடி என்ற பெயரில் டெல்லி அழைத்து செல்ல திட்டம்

மதுரை: ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கி கைதான விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக கூறப்படும் மூத்த அதிகாரிகளை காப்பாற்ற கைதான அங்கித் திவாரி மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து உள்ளது. மத்தியப்பிரதேசம் போபாலை சேர்ந்தவர் அங்கித் திவாரி (32). மதுரை அமலாக்கத்துறை அலுவலக விசாரணை அதிகாரி. இவர், திண்டுக்கல் அரசு டாக்டர் சுரேஷ்பாபு மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் மேல் விசாரணை நடத்தாமல் இருக்க, இரு தவணைகளில் ரூ.40 லட்சம் லஞ்சம் பெற்றார். கடந்த 1ம் தேதி 2வது கட்டமாக ரூ.20 லட்சம் பெற சென்றபோது, திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கையும், களவுமாக கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் மூத்த அதிகாரிகளுக்கு இதில் பங்கு உள்ளதாக வாக்குமூலம் அளித்து உள்ளார். இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார், அவர் பணிபுரிந்த மதுரை மண்டல அலுவலகத்தில் பல மணி நேரம் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். இச்சோதனைக்கு சென்றபோது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்தவர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை. சுமார் ஒரு மணி நேரத்துக்கு பின் அனுமதித்தனர். அப்போது அங்கித் திவாரி அறையில் சோதனை நடத்த எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து பூட்டை உடைத்துதான் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அளித்த புகாரின்பேரில், மதுரை அமலாக்கத்துறை அலுவலக உதவி இயக்குனர் பிரிஜிஸ்ட் பெனிவால் உள்ளிட்ட அன்றைக்கு பணியில் இருந்தவர்கள் மீது தல்லாகுளம் போலீசார் வழக்கு பதிந்தனர். இதற்கு போட்டியாக மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் அத்துமீறி 35 பேர் நுழைந்து, சோதனை நடத்தி சட்டவிரோதமாக ஆவணங்களை திருடிச் சென்றதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் மீது கடந்த டிச.3ல் சென்னை டிஜிபி அலுவலகத்தில், அமலாக்கத்துறை உதவி இயக்குநர் பிரிஜிஸ்ட் பெனிவால் புகார் செய்தார். தொடர்ந்து ஒரு நினைவூட்டல் மனுவும் வழங்கினார். இம்மனுக்கள் விசாரணைக்கென மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதுதொடர்பாக விசாரணைக்கு வந்து உரிய விளக்கம் அளிக்கக் கோரி நேரில் ஒருமுறை, பதிவுத்தபாலில் இருமுறை என அமலாக்கத்துறை உதவி இயக்குநர் பிரிஜிஸ்ட் பெனிவாலுக்கு போலீசார் சம்மன் வழங்கி அழைத்திருந்தனர்.

உதவி இயக்குநர் பிரிஜிஸ்ட் பெனிவால் ஆஜராகாத நிலையில், அமலாக்கத்துறை உதவி இயக்குநர் அதுல் குப்தா, தல்லாகுளம் உதவி கமிஷனர் சம்பத்திற்கு அனுப்பிய கடிதத்தில், ‘‘போலீசார் அனுப்பிய சம்மனில், அலுவலக முத்திரை, அதிகாரி பெயர் இல்லை. எங்கள் மனு மீது விசாரிக்க ஆஜராகும்படி கூறப்பட்டிருந்தாலும், புகார் தொடர்பான முறையான விபரங்கள் இல்லை. டிச.1ல் மதுரை அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் எனக்கூறி, பலர் அலுவலகத்தின் கதவை உடைத்து, அத்துமீறி நுழைந்து முக்கிய ஆவணங்களை திருடிச் சென்றதாக தமிழக டிஜிபிக்கு மனு அளித்து, 16ம் தேதி மீண்டும் நினைவூட்டல் கடிதமும் தரப்பட்டது. எவ்வித அவகாசமுமின்றி அமலாக்கத்துறைக்கு தல்லாகுளம் போலீசார் சம்மன் அனுப்பியது, துறையின் செயல்பாட்டை இயல்பாக முடக்குவது போல் உள்ளது. மேலும், சட்டப்பிரிவு 160ன் கீழ் விசாரணை நடத்த வேண்டிய அளவுக்கு என்ன அவசியம் ஏற்பட்டுள்ளது என்ற கேள்வியும் எழுகிறது.

டிஜிபி மற்றும் மதுரை போலீஸ் கமிஷனரின் கடிதங்களின் நகல்கள், விசாரணைக்கு அமலாக்கத்துறையில் இருந்து யார் ஆஜராக வேண்டும்? எந்த ஆவணங்கள் தேவைப்படுகிறது என்பனவற்றுடன், தேவையான கால அவகாசத்தையும் குறிப்பிட்டு, மீண்டும் சம்மன் அனுப்பினால், முழு ஒத்துழைப்பு வழங்குகிறோம்’’ எனத்தெரிவித்திருந்தார். இந்த கடிதம் மதுரை போலீசாருக்கு அதிர்ச்சியைத் தந்துள்ளது. உரிய விளக்கத்துடன், கால அவகாசமும் வழங்கி நேரில் சென்றும், பதிவுத் தபாலிலும் சம்மன் வழங்கியும், ஆஜராகாமல் இழுத்தடிக்கும் முயற்சியாகவே இந்த பதில் கடிதம் அமைந்திருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் கைதான அங்கித் திவாரி ஜாமீன் கோரி மதுரை ஐகோர்ட் கிளை தாக்கல் செய்யப்பட்ட மனு மீது விசாரணையின்போது, ‘அங்கித் திவாரி மீதான பல்வேறு குற்றச்சாட்டுகள், ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளன. அங்கித் திவாரி லஞ்சம் பெற்ற சம்பவத்தில் 35க்கும் மேற்பட்ட மூத்த உயரதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளது.

அடுத்தக்கட்டமாக பணம் வசூலிக்க வேண்டிய 75க்கும் மேற்பட்டோரின் பட்டியல் கம்ப்யூட்டரில் இருந்தும் கைப்பற்றப்பட்டுள்ளது’ என்று தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். ஐகோர்ட் கிளை நீதிபதியும், ‘இந்த விவகாரத்தில் மேலும் பல உயரதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது தெரியவருகிறது. எனவே, அவர்களிடமும் விசாரணை நடத்த வேண்டியது அவசியம். எனவே, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்யப்படுகிறது’ என தெரிவித்தார். நீதிமன்றத்திலேயே இந்த லஞ்சம் பெற்ற வழக்கில் உயரதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கும் தகவல் வெட்ட வெளிச்சமான நிலையில், இதிலிருந்து பலரையும் தப்பிக்க வைக்கும் நோக்கில் லஞ்ச ஒழிப்புத்துறையின் நடவடிக்கைகள் மீது அமலாக்கத்துறை புகார் தெரிவித்துள்ளது. இந்நிலையில், லஞ்சம் வாங்கி கைதான அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மீது அமலாக்கத்துறையே கடந்த சில நாட்களுக்கு ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கே அமலாக்கத்துறை உயரதிகாரிகளை காப்பாற்ற போடப்பட்ட வழக்கு என்று அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.

தற்போது அமலாக்கத்துறை சார்பில் பதியப்பட்டுள்ள வழக்கை டெல்லிக்கு மாற்றி, வழக்கில் தொடர்புடைய அங்கித் திவாரி, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோரை விசாரணைக்கென டெல்லிக்கு அழைத்து, வழக்கினை நீர்த்துப்போகச் செய்வதற்கான காரியத்தில் அமலாக்கத்துறை கூடுதல் கவனம் காட்டி வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. அங்கித் திவாரி லஞ்சம் பெற்ற சம்பவத்தில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் நிகழ்ந்திருப்பது, உயரதிகாரிகள் தொடர்பு இருப்பது, அடுத்த கட்டமாக பணம் வசூலிப்பதற்கான பட்டியல் கம்ப்யூட்டரில் பெறப்பட்டிருப்பது என புகார்கள் இருக்கும் நிலையில், விசாரணைக்கான சம்மனில் விளக்கமாக இல்லை என்ற உப்புச்சப்பான காரணத்தை அமலாக்கத்துறை கூறி வருகிறது. எனவே, இந்த வழக்கில் இருந்து உயரதிகாரிகளை தப்ப வைக்கவே அங்கித் திவாரி மீது வழக்கு மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசாரை அலைக்கழிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் நடப்பது தெளிவாக தெரிய வந்துள்ளது.

The post ரூ.40 லட்சம் லஞ்சம் விவகாரத்தில் 35 பேருக்கு தொடர்பு, 75 பேர் பட்டியல் சிக்கிய நிலையில் மூத்த அதிகாரிகளை காப்பாற்ற அங்கித் திவாரி மீது திடீர் வழக்கு? கஸ்டடி என்ற பெயரில் டெல்லி அழைத்து செல்ல திட்டம் appeared first on Dinakaran.

Tags : Ankit Tiwari ,Delhi ,Madurai ,Enforcement Directorate ,Bhopal, Madhya Pradesh ,Madurai Enforcement Department Office ,Dinakaran ,
× RELATED தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி...