×

தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்: தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள், தொண்டர்கள் அஞ்சலி

சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த்(71). சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே நேற்று காலை உயிரிழந்தார். அவரது மறைவால் தேமுதிக தொண்டர்கள், சினிமா ரசிகர்கள், திரையுலகினர் கதறி அழுது தங்கள் இறுதி அஞ்சலியை செலுத்தினர். அவரது உடல் நல்லடக்கம் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் இன்று மாலை நடைபெறுகிறது. தமிழ் திரையுலகம் ஏராளமான அரசியல் தலைவர்களை கொடுத்திருக்கிறது. அந்த வகையில் விஜயகாந்த் தனிச்சிறப்பு மிக்கவர். திரைப்படங்களில் பேசும் வசனங்களை அவர் மக்கள் மத்தியிலும் பேசியதே இந்த சிறப்புக்கு காரணம். இந்த சூழ்நிலையில் அவர் தேமுதிக எனும் கட்சியை உருவாக்கினார். கட்சி தொடங்கிய ஒரே ஆண்டில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்றத்திலும் நுழைந்தார். சிறந்த எம்எல்ஏவாகவும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவராகவும் வெற்றிகரமாக செயல்பட்டார். இந்த நிலையில் அவருக்கு அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதற்காக அவர் வெளிநாடு சென்று சிகிச்சை பெற்றார். பெரிய அளவில் பலன் இல்லை. அதன்பிறகு நேரடி அரசியலில் இருந்து ஒதுங்கி அறிக்கை வாயிலாக மட்டுமே அரசியல் செய்து வந்தார். அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 2020ல் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற விஜயகாந்த் அதில் இருந்து மீண்டார். அவ்வப்போது கட்சி அலுவலகம் வந்து தொண்டர்களை சந்தித்து வந்தார்.

இதை தொடர்ந்து அவருக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவால் சில ஆண்டுகளாக வீட்டிலேயே ஓய்வில் இருந்து வந்தார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால், அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று பரிசோதனைகளை மேற்கொண்டு வந்தார். வீட்டில் ஓய்வில் இருந்த விஜயகாந்துக்கு இருமல், காய்ச்சல், சளி தொந்தரவுகள் ஏற்பட்டதால் கடந்த மாதம் 18ம் தேதி சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் (ஐசியு) அனுமதிக்கப்பட்ட அவருக்கு சில நேரங்களில் சுயமாக சுவாசிப்பதில் சிரமம் இருந்ததால் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. நுரையீரல் நிபுணர்கள் அவரை கண்காணித்து சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து, உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதால், மருத்துவமனையில் இருந்து கிட்டதட்ட 23 நாட்கள் சிகிச்சைக்குப் பின் கடந்த 12ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதற்கு இடைப்பட்ட காலத்தில் விஜயகாந்த் உடல்நிலை பற்றி பல்வேறு விதமான வதந்திகள் பரவ தொடங்கியது. தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சத்தைப் போக்க மியாட் மருத்துவமனை, தேமுதிக தலைமைக்கழகம் சார்பில் விஜயகாந்த் உடல்நிலை குறித்த தகவல்களை வெளியிட்டு வந்தனர். தொடர்ந்து விஜயகாந்த் மனைவி பிரேமலதா கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் விஜயகாந்த் பூரண உடல்நலத்துடன் இருப்பதாகவும், வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார். இதனையடுத்து,கடந்த 14ம் தேதி நடைபெற்ற தேமுதிக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்திற்கு விஜயகாந்த் அழைத்து வரப்பட்டார். அவரின் நிலை கண்டு தொண்டர்களும், பொதுமக்களும் நிலைகுலைந்து போயினர்.

விஜயகாந்த் மீண்டும் பழைய நிலைக்கு வர வேண்டும் என கண் கலங்கியபடி தெரிவித்தனர். இந்நிலையில், கடந்த 26ம்தேதி செவ்வாய்க்கிழமை விஜயகாந்த் மீண்டும் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது தேமுதிக சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் வழக்கமான மருத்துவப் பரிசோதனை என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று அதிகாலை அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்படுவதாக தேமுதிக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் காலை 6.10 மணிக்கு பிரிந்தது. அவரது மறைவு தொடர்பாக மியாட் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், ‘நிமோனியா (நுரையீரல் அழற்சி) காரணமாக அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த விஜயகாந்துக்கு மருத்துவப் பணியாளர்களின் கடின முயற்சி இருந்தபோதிலும் காலமானார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் பரவியதும், சினிமா உலகத்தை சேர்ந்த கலைஞர்கள், ரசிகர்கள், தேமுதிக தொண்டர்கள் சோகத்தில் மூழ்கினர்.

மருத்துவமனையில் இருந்து விஜயகாந்த் உடல் ஒப்படைக்கப்பட்ட பின்னர் ஆம்புலன்சில் ஏற்றப்பட்டது. பின்னர் போலீஸ் வாகனம் பின்னால் அணிவகுக்க ஆம்புலன்ஸ் பாதுகாப்போடு சென்றது. அதற்கு முன்பே சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டில் தொண்டர்கள் குவிந்து அவரின் உடலை காண காத்து இருந்தனர். விஜயகாந்த் உடல் வந்ததும், அதை பார்த்து தலையில் அடித்துக் கொண்டு அழுதனர். கண்ணீர் விட்டு கதறினர். விஜயகாந்த் உடல் வந்த ஆம்புலன்ஸை சுற்றிக்கொள்ள அவர்கள் முயன்றாலும் போலீசார் தடுத்து ஆம்புலன்ஸை வீட்டு வாசல் உள்ளே வரை செல்லும் வகையில் கொண்டு சென்றனர். இதன் மூலம் நேரடியாக வீட்டின் முன் பக்கம் விஜயகாந்த் உடல் கொண்டு வரப்பட்டது. அந்த நேரத்தில் வீட்டை சுற்றி நின்று விஜயகாந்த் தொண்டர்கள், ரசிகர்கள் கோஷமிட்டு கதறி அழுதனர். இதையடுத்து, அவருக்கு கருப்பு கண்ணாடி, வாட்ச் அணிவிக்கப்பட்டு பட்டு வேட்டி சட்டை உடுத்தப்பட்டது. பின்னர் அவரது உடல் சிறிது நேரம் அங்கு வைக்கப்பட்டு தொடர்ந்து கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்திற்குகொண்டு செல்லப்பட்டது.

சாலிகிராமம் வீட்டிலிருந்து கோயம்பேட்டுக்கு செல்ல 4 கி.மீ. இருந்த நிலையில் அந்த தூரத்தை கடக்க 4 மணி நேரம் ஆனது. மக்கள் வெள்ளத்தில் நீந்தி விஜயகாந்தின் உடல் கட்சி அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு கண்களில் கருப்பு கண்ணாடி, முகத்தில் மாஸ்க் அணிந்து வேட்டி சட்டையில் விஜயகாந்த் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அவரது கழுத்தில் கட்சி துண்டும் இருந்தது. வழக்கமாக இந்த கெட்டப்பில் தான் விஜயகாந்த் கட்சி அலுவலகத்துக்கு வருவதுண்டு. அதே போன்று தான் இன்றும் அவருடைய உடல் கொண்டு வரப்பட்டது. ப்ரீசர் பாக்ஸில் இருந்த ஸ்டீல் தலையணையில் விஜயகாந்த் தலை வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அந்த பாக்ஸை எடுத்துவிட்டு மஞ்சள் நிறத்தில் தலையணையை அவரது தலைக்கு வைத்தனர். அப்போது தொண்டர்களும் அவருடைய மனைவி, மகன்களும் கண்ணீர் வடித்தனர். இதையடுத்து, அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர், நடிகைகள், திரையுலக பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

முன்னதாக, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டுக்கு நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி, விஜயகாந்தின் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.45 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. அப்போது, அவரது இறுதி சடங்கு அரசு அறிவித்தபடி, முழு அரசு மரியாதையுடன் நடைபெற உள்ளது. அவரது மறைவையொட்டி, விஜயகாந்த் வீட்டிலும், கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திலும் தேமுதிக கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது. கட்சி அலுவலகத்தில் நேற்று காலை முதல் விடிய விடிய பொதுமக்கள் விஜயகாந்த்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய வண்ணம் இருந்தனர். அங்கு கூடுதல் கமிஷனர் அஸ்ரா கார்க் தலைமையில் விரிவான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தீவுத்திடலில் அஞ்சலிக்கு ஏற்பாடு

கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் கூட்டம் அதிகமாக கூடுவதால், இன்று காலை 6 மணிக்கு அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக தீவுத்திடல் கொண்டு செல்லப்படுகிறது. பகல் 1 மணி வரை அங்கு வைக்கப்படுகிறது. அதன்பின்னர் பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக ஊர்வலமாக மீண்டும் கோயம்பேடு கட்சி அலுவலகம் கொண்டு வரப்பட்டு, அங்கு மாலை 4.45 மணிக்கு உடல் அடக்கம் செய்யப்படுவதாக தேமுதிக கட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி, ராகுல் இரங்கல்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, தனது டிவிட்டர் பதிவில், ‘விஜயகாந்த மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. தமிழ் திரையுலகின் ஜாம்பவான் விஜயகாந்தின் நடிப்பு பலரின் இதயங்களை கவர்ந்தது. பொது சேவையில் ஈடுபட்டு கொண்டிருந்த விஜயகாந்தின் மறைவு வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. அதை நிரப்புவது கடினம். விஜயகாந்துடனான எனது நினைவுகளை அன்புடன் நினைவு கூறுகிறேன்’ என தெரிவித்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோரும் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.

The post தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்: தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள், தொண்டர்கள் அஞ்சலி appeared first on Dinakaran.

Tags : Demutika ,Vijayakanth ,Chennai ,Chennai Miad Hospital ,Temutika ,
× RELATED விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது