×

சட்டவிரோத பண பரிமாற்றம் செய்ததாக மொரிஷியஸ் தூதரக அதிகாரி, 2 தொழிலதிபர் வீடுகளில் ரெய்டு: முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை

சென்னை: இந்தியாவில் இருந்து மொரிஷியஸ் நாட்டிற்கு சட்டவிரோதமாக பல கோடி ரூபாய் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சென்னையில் 3 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். குறிப்பாக, அடையார் பெசன்ட் நகரில் உள்ள மொரிஷியஸ் நாட்டின் துணை தூதரக அதிகாரி ஒருவரின் வீட்டில் நேற்று காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வழக்கு தொடர்பாக பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்ட்டதாக கூறப்படுகிறது. அதேபோல், ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியில் வசித்து வரும் பங்குசந்தை வர்த்தகம் செய்து வரும் தொழிலதிபரான கணேஷ் என்பவர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

மேலும், கொளத்தூர் சிவபார்வதி நகரில் வசித்து வரும் ரியல் எஸ்டேட் தொழிலதிபரான முத்து என்பவரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் சட்டவிரோதமாக பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வமாக எத்தனை கோடி ரூபாய் சட்டவிரோதமாக பணம் மொரிஷியஸ் நாட்டில் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்த தகவல்களை அதிகாரிகள் தெரிவிக்க மறுத்துவிட்டனர். சட்டவிரோத பணம் பரிமாற்றம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக மொரிஷியஸ் நாட்டின் தூதரக அதிகாரி ஒருவர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post சட்டவிரோத பண பரிமாற்றம் செய்ததாக மொரிஷியஸ் தூதரக அதிகாரி, 2 தொழிலதிபர் வீடுகளில் ரெய்டு: முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,India ,Mauritius ,Consulate ,General ,Adyar Besant Nagar ,Dinakaran ,
× RELATED களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில்...