×

கடக ராசி: வண்ணங்களும் எண்ணங்களும்

ராசிகளின் வண்ணங்கள் நமக்கு வழிகாட்டும் என்ற சிந்தனையின் அடிப்படையில் சில சூட்சமங்களை அறிந்துகொள்வோம். வண்ணங்கள் என்பது ஒளி பிரதிபலிப்பின் மற்றொரு பிரதி பிம்பங்கள். ஒளியே உலகமாகவும் ஒளியே காட்சியாகவும் உள்ளது என்பதற்கு நவகிரகங்களே சாட்சியாகும். ஒளியின் வெவ்வேறு வண்ண வடிவங்களாக நவகிரகங்களும் உள்ளன. வண்ணத்தை காண்பதற்கு, உணர்வதற்கு மனதிற்கும் கண்களுக்கும் சில நுட்பமான அறிவு இருந்தால் மட்டுமே அதனை உணரவும் விளக்கவும் முடியும்.

கடக ராசி: காலபுருஷனின் நான்காவது ராசியாக உள்ளது என்பது கேந்திர பாவத்தை உணர்த்துகிறது. எனவே, காலபுருஷ சக்கரத்தின் முக்கிய அங்கமாக கடகம் உள்ளது என்பதை நினைவில் கொள்வோம். காலத்தை இயக்கும் பாவங்களில் கடகமும் பங்கு பெறுகிறது. கடகம் என்பது நீர்நிலை பாவமாகும். இந்த நீர் நிலைக்கு ராசிக்காரர்களுக்கு வெண்மை என்ற வண்ணம் பிரதானம் என்பதை நினைவில் கொள்க.

இவர்கள் எவருடனும் இணைந்து வெற்றியை நோக்கி பயணிக்கும் திண்ணம் உள்ளவர்கள். இந்த வெண்மை வண்ணத்தை நீங்கள் திங்கட்கிழமை பயன்படுத்தும் போது நல்ல பலன்கள் உண்டாக்கும். அடுத்து கேந்திர பாவகமாக உங்களுக்கு வருவது துலாம் ராசியாகும். இந்த ராசியின் அதிபதி சுக்கிரனாக வருகிறார். இவரே உங்களுக்கு பதிேனாராம் அதிபதியாகவும் (11ம்) உள்ளார். எனவே, இதற்கு உகந்த வண்ணமாக பிங்க் என்ற இளஞ்சிவப்பு வண்ணமாக உள்ளது. ஆகவே, உங்கள் வாகனம் மற்றும் வீட்டில் பிங்க் நிறத்தை பயன்படுத்துவதால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் உண்டு.

கடகத்திற்கு சப்தம ஸ்தனத்தின் 7ம் அதிபதியாகவும், எட்டாம் இடத்தின் அதிபதியாகவும் சனி பகவான் உள்ளார். எனவே, திருமண விஷயத்தில் சரியான முடிவு எடுக்க வேண்டும். உங்களுக்கும் துணைக்கும் மிகுந்த வயது வித்தியாசங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. நீல நிற வண்ணத்தை இப்பொழுது பயன்படுத்துவதை தவிர்த்துவிடுங்கள். கோட்சாரத்தில் 8ம் இடத்தின் அதிபதி வலிமையாக இருப்பதால் உங்களால் முடிந்த அளவு வறுமையின் கோரப்பிடியில் இருப்பவர்களுக்கும் ஊனமுற்றவர்களுக்கும் உதவி செய்யுங்கள்.

உங்களுக்கு பத்தாம் அதிபதியாக செவ்வாய் இருக்கிறார். எனவே, பெரும்பான்மையான நபர்கள் இக்கால கட்டத்தில் ஐ.டி துறையில் அல்லது டெக்னிக்கல் பணியாற்றும் வாய்ப்புகள் அதிகம். எப்பொழுதெல்லாம் கோட்சாரத்தில் செவ்வாய் பாதிக்கப்படுகிறதோ, அக்காலகட்டத்தில் சிவப்புநிற வண்ணத்தை தவிர்த்துவிடுங்கள். இப்பொழுது உங்களுக்கு மின்சாரத்தாலோ வேறு ஏதேனும் காரணத்தாலோ உங்கள் வேலையில் அதிகளவு பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஆகவே, சுப்ரமணியரை அல்லது மணிகண்ட சுவாமியை வழிபாடு செய்யுங்கள். அதற்கான தீர்வுகள் உண்டாகும்.

உங்களுக்கு எதிர்மறையான வண்ணங்களை நீங்கள் தவிர்ப்பதோடு அந்த வண்ணத்திற்குரிய வஸ்துகளை தானம் செய்யுங்கள். குறிப்பாக, இப்பொழுது கோட்சாரத்தில் நீலம் அஷ்டம ஸ்தானத்தில் வலிமையாக உள்ளதால் நீலநிற உடைகளை தானம் செய்யுங்கள். குழந்தைகளுக்கு நீல நிற பள்ளிச் சீருடை வாங்கிக் கொடுங்கள். ரோட்டில் நடைபாதையில் படுத்திருக்கும் நபர்களுக்கு பெட்ஷீட் அல்லது டவல் வாங்கிக் கொடுங்கள். இது உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எதிர்மறை ஆற்றலை தூரமாகக் கொண்டு சென்றுவிடும்.

உங்களின் ராசிக்கு ஆறாம் அதிபதியாகவும் ஒன்பதாம் அதிபதியாகவும் வியாழ பகவான் இருக்கிறார். அவர் தற்பொழுது வக்ரகதியில் இருக்கிறார். ஆகவே, வேலை செய்யும் இடத்தில் மஞ்சள் நிற வண்ணம் சில மாற்றங்களை ஏற்படுத்தும் ஆற்றல்களை உங்களுக்கு கொண்டு வரும். அவ்வாறு பயன்படுத்தும் மஞ்சள் வண்ணம், எதிர்பாராத வாய்ப்புகளையோ அல்லது அதிர்ஷ்ட சிந்தனைகளையோ ஏற்படுத்தி பெரியமாற்றங்களை ஏற்படுத்தும்.

உங்களின் திறமைகள் வெளிப்பட பிங்க் வண்ணம் சிறந்ததாக இருக்கும். உங்களின் பெண் நண்பர்களுக்கு இந்த வண்ணத்தில் ஏதேனும் பரிசு கொடுங்கள் மாற்றங்கள் உங்களை தேடி வரும் என்பதில் மாற்றம் இல்லை. வண்ணங்கள் ஆற்றல்களின் உறைவிடங்கள். அதுவும், ஒரு வகை மாற்றத்தை இவ்வுலகில் ஏற்படுத்திக்கொண்டே இருக்கும். அந்த மாற்றத்தை உணர்வோம் நேர்மறை ஆற்றலுடன் வெற்றி பெறுவோம்.

தொகுப்பு: சிவகணேசன்

The post கடக ராசி: வண்ணங்களும் எண்ணங்களும் appeared first on Dinakaran.

Tags :
× RELATED வெற்றி தரும் வெற்றிலை மாலை வழிபாடு!