×

தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி..!!

சென்னை: தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார். தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் (71) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த விஜயகாந்த் காலை 6.10 மணிக்கு காலமானார். விஜயகாந்தின் இறுதி மரியாதை நாளை மாலை 4.45 மணிக்கு கோயம்பேட்டில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலுக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஆயிரக்கணக்கான தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன், காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ, இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், டி.ராஜேந்தர், நடிகர் கவுண்டமணி, கவிஞர் வைரமுத்து, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை, வி.கே.சசிகலா உள்ளிட்டோர் விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். அந்த வகையில்,

விஜயகாந்த் மறைவு: எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி: தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து நேரில் அஞ்சலி செலுத்தினார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார், சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

திருச்சி சிவா: திரை வானில் ஆயிரம் நட்சத்திரங்கள், அதில் கேப்டன் விஜயகாந்த் ஒரு துருவ நட்சத்திரம் என திருச்சி சிவா எம்.பி. இரங்கல் தெரிவித்துள்ளார். அரசியலில் விஜயகாந்த்-ன் பயணம் தனிச்சுவடு பதித்ததும், பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியதையும் யாரும் மறுக்க முடியாது. என் மீது ஆழ்ந்த அன்புகொண்டவர்; படப்பிடிப்புக்காக டெல்லி வரும்போது என் வீட்டில் தங்கி சென்ற நாட்கள் நிழலாடுகின்றன. நலமடைந்து மருத்துவமனையிலிருந்து வருவார் என காத்திருந்து காத்திருந்து ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. விஜயகாந்த் மறைவு திரையுலக்குக்கு, அரசியல் களத்துக்கு அன்புள்ளங்களை தேடுவோருக்கு ஒரு பேரிழப்பு என்று திருச்சி சிவா தெரிவித்திருக்கிறார்.

இயக்குநர் லிங்குசாமி: மக்களின் கண்ணீரை உணர்ந்தவர் கேப்டன் விஜயகாந்த் என இயக்குநர் லிங்குசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இதயத்திலிருந்தே எல்லா முடிவுகளையும் எடுப்பவர்; எதிரே நிற்பவர் பசி அறிந்தவர் விஜயகாந்த் என்று குறிப்பிட்டுள்ளார்.

மதுரை ஆதீனம் இரங்கல்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவையொட்டி மதுரை ஆதீனம் இரங்கல் தெரிவித்துள்ளார். விஜயகாந்த் மறைவு பேரிழப்பு; அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன். நடிகர் விஜயகாந்த் நல்ல மனிதர்; மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைத்தவர் என்று மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.

The post தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி..!! appeared first on Dinakaran.

Tags : Edapadi Palanisami ,Vijayakanth ,Demudika ,Chennai ,Edappadi Palanisami ,Demutika Institute ,Vijayakant ,Miad Hospital ,Dinakaran ,
× RELATED எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தயாநிதி...