போபால்: மத்திய பிரதேசத்தில் டிப்பர் லாரி-பஸ் மோதிய விபத்தில் விபத்தில் 13 பேர் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் குனா பகுதியில் நேற்றிரவு டிப்பர் லாரி மீது பயணிகள் பஸ் நேருக்கு நேர் மோதியது. இதில் பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் அலறி துடித்தனர். சிறிது நேரத்தில் இரு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தது. பஸ்சில் இருந்த பயணிகள் அலறி துடித்தனர். ஜன்னல் மற்றும் படிக்கட்டு வழியாக சிலர் வெளியே தாவி குதித்தனர். இந்த சம்பவத்தை பார்த்ததும் அவ்வழியாக வந்தவர்கள் அதிர்ச்சியடைந்து காப்பாற்ற முயன்றனர்.
தகவலறிந்து போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தீயணைப்பு படை வீரர்கள், தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்துக்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் 13 பேர் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். 17 பேர் காயமடைந்தனர். இதை குனா மாவட்ட கலெக்டர் தருண் ரதி உறுதி செய்துள்ளார். காயமடைந்த 17 பேர் குனா மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில் உயிரிழந்தவர்களின் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்தவர்களை அடையாளம் காண டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 உதவியும் வழங்கப்படும் என்றும் அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் அறிவித்துள்ளார்.
The post ம.பி.யில் டிப்பர் லாரி- பஸ் மோதல்: 13 பேர் உடல் கருகி பரிதாப பலி appeared first on Dinakaran.