- மாட்டுப்பொங்கல்
- மயிலாடுதுறை
- மயிலாடுதுறை மாவட்டம்
- கொல்லிமலை
- ஆனைக்காரன்சத்திரம் ஊராட்சி
- மேவலல்லம்
- திருவிழா
- பொங்கல்
- தின மலர்
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அடுத்த ஆணைக்காரன்சத்திரம் ஊராட்சியில் மேலவல்லம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்காக அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மூன்று மாதங்கள் நெட்டி மாலை தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மாட்டு பொங்கலன்று கால்நடைகளுக்கு கட்டி வழிபடுவதற்காக நெட்டி மாலை பயன்படுகிறது. இதற்காக கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டம் மற்றும் புதுச்சேரி மாநிலத்துக்கு சென்று அங்குள்ள நீர்நிலைகளில் வளர்ந்து படர்ந்து கிடக்கும் நெட்டித்தக்கை என்ற கொடிகளை பறித்து வருகின்றனர். கொடியில் உள்ள இலைகள் நீக்கப்பட்டு வெயிலில் உலர வைக்கின்றனர். சில நாட்கள் வெயிலில் உலர்ந்த நெட்டித்தக்கைகளின் மேல் உள்ள தோல் நீக்கி தண்டு பகுதிகளை துண்டு துண்டாக நறுக்கி சாயம் கலந்து நெட்டி மாலைகள் தயாரிக்கப்படுகிறது.
ஒற்றை மாலை, இரட்டை மாலை, ரோசாப்பூ மாலை உள்ளிட்ட அழகிய கண்ணை கவரும் வண்ண, வண்ண நிறங்களில் நெட்டி மாலைகள் தயாரிக்கப்படுகிறது. இங்கு தயாரிக்கும் நெட்டி மாலைகளை சிதம்பரம், சீர்காழி, கடலூர், கும்பகோணம், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து வாங்கி செல்கின்றனர். மேலும் கொள்ளிடம், சிதம்பரம், கடலூர், காட்டுமன்னார்குடி, சீர்காழி, கும்பகோணம், மயிலாடுதுறை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு இருசக்கர வாகனங்களில் எடுத்து சென்று உற்பத்தியாளர்கள் விற்று வருகின்றனர். பொங்கல் விழாவுக்கு ஒரு வாரத்துக்கு முன் நெட்டி மாலை வியாபாரம் ஆரம்பித்து மாட்டு பொங்கலன்று நிறைவடையும். இதுகுறித்து நெட்டி மாலை தயாரிப்பில் ஈடுபட்டு வருபவர்கள் கூறுகையில், ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்காக மேலவல்லம் கிராமமே நெட்டி மாலை தயாரிக்கும் பணியில் ஈடுபடும்.
இந்த கிராமத்தில் நெட்டி மாலை தயாரிப்பு பணி பாரம்பரியமாக நடந்து வருகிறது. இது முழுக்க முழுக்க இயற்கையோடு கலந்த ஒன்றாகும். ரசாயன கலவை கிடையாது. இந்த தொழிலுக்காக அரசு மானியத்துடன் வங்கி கடன் வழங்கினால் எங்களுக்கு பேருதவியாக இருக்கும் என்றனர்.
The post மாட்டுப்பொங்கல் அன்று கால்நடைகளுக்கு அணிவிக்கும் நெட்டி மாலை தயாரிப்பு மும்முரம் appeared first on Dinakaran.