×

பிரதமர் மோடியின் ரஷ்ய வருகை மகிழ்ச்சி அளிக்கிறது; அதிபர் புதின்

மாஸ்கோ: பிரதமர் மோடியின் ரஷ்ய வருகை மகிழ்ச்சி அளிக்கிறது என்று ரஷ்ய அதிபர் புதின் கூறினார். ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் 5 நாள் சுற்றுப்பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். மாஸ்கோ சென்றடைந்த அவருக்கு அந்நாட்டின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு ரஷ்யாவின் வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவுடன் இரு தரப்பு விவகாரங்கள் பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் ரஷ்யா- இந்தியா இடையிலான ஒத்துழைப்பு, வடக்கு- தெற்கு இடையிலான சர்வதேச போக்குவரத்து உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து நேற்று வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை மாஸ்கோவில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, பிரதமர் நரேந்திர மோடியை ரஷ்யாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். மேலும், தற்போதைய அனைத்து விவகாரங்களையும் விவாதிக்கவும், இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான கண்ணோட்டத்தை பற்றி பேசவும் வாய்ப்பளிப்பதாக புதின் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது எக்ஸ் வலைதளத்தில், ‘ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்ததில் பெருமை அடைகிறேன். பிரதமர் நரேந்திர மோடியின் அன்பான வாழ்த்துக்களை அவரிடம் தெரிவித்து தனிப்பட்ட செய்தியை பகிர்ந்து கொண்டேன். அமைச்சர்கள் மந்துரோவ், லாவ்ரோவ் ஆகியோருடன் நடத்திய கலந்துரையாடல்கள் அதிபர் புதினிடம் தெரிவிக்கப்பட்டது. இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் மேலும் முன்னேற்றங்கள் குறித்த வழிகாட்டுதலை அவர் பாராட்டினார்” என்று பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் பிரதமர் மோடி ரஷ்யாவிற்கு வருகை தருவது குறித்து மகிழ்ச்சியடைவதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கருடன் நடந்த சந்திப்பின் போது, ‘எங்கள் நண்பரான பிரதமர் மோடியை ரஷ்யாவில் பார்ப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைவோம். பிரதமர் மோடியின் பயணத்தின் போது, நாங்கள் அனைத்து தொடர்புடைய, தற்போதைய பிரச்னைகள் குறித்து விவாதிக்க முடியும், ரஷ்ய மற்றும் இந்திய உறவின் வாய்ப்புகள் குறித்து பேச முடியும்’ என்று புதின் கூறினார்.

The post பிரதமர் மோடியின் ரஷ்ய வருகை மகிழ்ச்சி அளிக்கிறது; அதிபர் புதின் appeared first on Dinakaran.

Tags : PM ,Modi ,Russia ,President Putin ,Moscow ,President ,Putin ,Union External Affairs Minister ,Jaishankar ,Dinakaran ,
× RELATED பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு பிற்பகலில் விசாரணை..!!