×

காற்றில் கரைந்தது கருப்பு நிலா.. சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!: விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் சோனு சூட், சிரஞ்சீவி இரங்கல்..!!

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் (71) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். நாளை மாலை 4.30மணிக்கு சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. விஜயகாந்த்துக்கு இறுதி அஞ்சலி செலுத்த தமிழகமெங்குமிருந்து தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். கொடுத்து கொடுத்து சிவந்த கரத்திற்கு சொந்தக்கரார் விஜயகாந்த் என திரையுலகினர் நெகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். விஜயகாந்த் வீட்டிற்கு சென்ற யாரும் பசியோடு வெளியே வந்தது இல்லை என்றும் திரையுலகினர் புகழாரம் சூட்டியுள்ளனர். விஜயகாந்த் மறைவுக்கு திரையுலகினர் மட்டுமின்றி அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது இரங்கலை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில்,

கிரண் ரிஜிஜூ: அரசியல் தலைவராக பொதுச்சேவையில் விஜயகாந்த் காட்டிய அர்ப்பணிப்பு வியக்க வைத்தது.

நடிகர் சோனு சூட்: கள்ளழகர் படத்தில் விஜயகாந்த் உடன் இணைந்து நடித்தது காலத்தால் அழியாத பரிசு.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி: கட்சியின் பெயரில்கூட திராவிட உணர்வை பதித்தவர் விஜயகாந்த். வெள்ளை உள்ளம் கொண்டு கருப்பு வைரமாகவே வாழ்ந்தவர்; சிறந்த மனிதர் என்ற பெருமைக்குரியவர் விஜயகாந்த்.

விஜயகாந்த் மறைவுக்கு பெப்சி கண்ணீர் அஞ்சலி: விஜயகாந்த் மறைவுக்கு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனமான பெப்சி கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளது. திரை தொழிலாளர்கள், உதவி இயக்குநர்கள், நாளைய இயக்குநர்கள் நல்ல நிலையை அடையும்வரை அவர்களின் பசியை போக்கியவர். நாளை திரைப்படத் துறையில் அனைத்து பணிகளை நிறுத்தி வைப்பதாக பெப்சி அறிவித்துள்ளது.

நடிகர் சிரஞ்சீவி உருக்கம்: விஜயகாந்த் மறைந்த செய்தியை அறிந்து இதயம் நொறுங்கிப் போனதாக நடிகர் சிரஞ்சீவி உருக்கமாக தெரிவித்துள்ளார். சிறந்த பண்பாளர், பன்முகத் திறமை கொண்டவர், புத்திக்கூர்மையான அரசியல்வாதி விஜயகாந்த். நேரடியாக தெலுங்கு படங்களில் நடிக்காவிட்டாலும் தெலுங்கு ரசிகர்களால் மிகவும் விரும்பப்பட்டவர் விஜயகாந்த். நமது அன்பான கேப்டன் நம்மிடம் வெகு சீக்கிரத்தில் ஈடு செய்ய முடியாத வெற்றிடத்தை விட்டுச் சென்றுவிட்டார் என்று நடிகர் சிரஞ்சீவி வேதனை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு திரைப்படக் கல்லூரி: ‘விஜயகாந்த் என்பவர் நடிகர் அல்ல, அவர் திரைப்படக் கல்லூரி மாணவர்களின் காட்ஃபாதர்’. ஊமை விழிகள் படம் மூலம் எண்ணற்ற திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு வாழ்க்கை தந்த மகா கலைஞன். ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் விஜயகாந்தை மனதார போற்றும் என்று தமிழ்நாடு திரைப்படக் கல்லூரி இரங்கல் தெரிவித்துள்ளது.

The post காற்றில் கரைந்தது கருப்பு நிலா.. சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!: விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் சோனு சூட், சிரஞ்சீவி இரங்கல்..!! appeared first on Dinakaran.

Tags : Sonu ,Chiranjeevi ,Vijayakanth ,Chennai ,DMD ,Demudika ,Coimbatore, Chennai ,Tamil Nadu ,
× RELATED கொலை, கொள்ளை உள்பட 21 வழக்குகள்:...