×

சமூக நலன், மகளிர் உரிமைத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 994 பயனாளிகளுக்கு ₹8.5 கோடி மதிப்பில் 8 கிராம் தாலிக்கு தங்கம், திருமண நிதியுதவி: அமைச்சர் காந்தி வழங்கினார்

திருவள்ளூர், டிச. 28: திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் 962 பயனாளிகளுக்கும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 32 பயனாளிகளக்கும் என மொத்தம் 994 பயனாளிகளுக்கு 8 கிராம் தாலிக்கு தங்கம் மற்றும் நிதி உதவிகளை வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) என்.ஓ.சுகபுத்ரா தலைமை தாங்கினார். திருவள்ளூர் எம்பி முனைவர் கே.ஜெயக்குமார், எம்எல்ஏ க்கள் திருவள்ளூர் வி.ஜி.ராஜேந்திரன், பொன்னேரி துரைசந்திரசேகர் மாவட்ட ஊராட்சி, திட்டக்குழுத் தலைவர் கே.வி.ஜி.உமா மகேஸ்வரி, ஒன்றிய குழுத் தலைவர் ஜெயசிலி ஜெயபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட சமூக நல அலுவலர் ரா.சுமதி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.

விழாவில் கைத்தறி மற்றும் தூணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது,
முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் வழியில் நல்லாட்சி நடத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 திருமண நிதியுதவித் திட்டங்களிலும் திருமண நிதியுதவியாக பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பு பயின்று தேர்ச்சிப் பெற்ற பெண்ணிற்கு திருமண நிதியுதவியாக ரூ.50 ஆயிரம் மற்றும் திருமாங்கல்யம் செய்வதற்காக 22 காரட் கொண்ட 8 கிராம் தங்கம் மற்றும் 10ம் வகுப்பு பயின்று தேர்ச்சிப் பெற்ற பெண்ணிற்கு திருமண நிதியுதவியாக ₹25 ஆயிரத்துடன் திருமாங்கல்யம் செய்வதற்காக 22 காரட் கொண்ட 8 கிராம் தங்கம் வழங்கப்பட்டு வருகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் 4,128 பயனாளிகளுக்கு ₹15 கோடியே 32 லட்சம் மதிப்பில் 33 கிலோ கிராம் தங்க நாணயங்கள் மற்றும் ₹15 கோடியே 39 லட்சம் மதிப்பிலான திருமண நிதியுதவித் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டு 4,128 பயனாளிகளுக்கும் நேரடியாக அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. அதேபோலே, 2023 – 2024ம் நிதியாண்டிற்கு திருவள்ளூர் மாவட்டத்தில் 962 பயனாளிகளுக்கு 8 கிராம் தங்க நாணயத்துடன் கூடிய நிதி ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. 2023 – 2024ம் நிதியாண்டிற்கு திருவள்ளூர் மாவட்டத்தில் 962 பயனாளிகளுக்கு ₹4 கோடியே 60 லட்சம் மதிப்பில் 7.7 கிலோ கிராம் தங்க நாணயங்கள் மற்றும் ₹3 கோடியே 70 லட்சம் மதிப்பில் திருமண நிதியுதவித் தொகையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 2022-2023ம் ஆண்டிற்கு 15 லட்சத்து 10 ஆயிரத்து 400 மதிப்பில் 8 கிராம் தங்க நாணயம் 32 பயனாளிகளுக்கு தற்போது வழங்கப்படுகிறது. மொத்தமாக 994 பேருக்கு தாலிக்குத் தங்கம் மற்றும் திருமண நிதியுதவியாக 8 கோடியே 45 லட்சத்து 10 ஆயிரத்து 400 ரூபாய் தற்போது வழங்கப்படுகிறது.

இந்திய அளவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழ்நாடு முதல்வர் எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை செய்து வருகிறார். அரசு அலுவலகங்களை மக்கள் தேடிச் சென்ற நிலை மாறி மக்களைத்தேடி அரசு அலுவலர்கள் நேரில் சென்று மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தின் மூலம், அவர்களுடைய கோரிக்கைகளை 30 நாட்களுக்குள் நிறைவேற்றித்தர முதல்வர் ஆணையிட்டுள்ளார். இவ்வாறு அவர் பேசினார். இதில் ஒன்றிய செயலாளர்கள் கூளூர் ராஜேந்திரன், மகாலிங்கம், ரமேஷ், அரிகிருஷ்ணன், நகர செயலாளர் ரவிச்சந்திரன், முன்னாள் நகர மன்ற தலைவர் பொன்பாண்டியன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் மோதிலால், ஆணழகன் திலீபன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

The post சமூக நலன், மகளிர் உரிமைத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 994 பயனாளிகளுக்கு ₹8.5 கோடி மதிப்பில் 8 கிராம் தாலிக்கு தங்கம், திருமண நிதியுதவி: அமைச்சர் காந்தி வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Social Welfare, ,Women's Rights Department, ,Disabled Persons' Welfare Department ,Minister ,Gandhi ,Tiruvallur ,Thiruvallur District Government Medical College ,Social Welfare and ,Women's Rights Department ,Social Welfare, Women's Rights Department, Persons with Disabilities Welfare Department ,Dinakaran ,
× RELATED கள்ளக்குறிச்சி சமூக நலத்துறையில்...