×

கிராமப்புறங்களில் கூட்டுறவு சங்கங்களை மேலும் வலுவாக்க முயற்சி: பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: கிராமப்புற வாழ்க்கையின் வலுவான அங்கமாக கூட்டுறவு சங்கங்களை மாற்ற ஒன்றிய அரசு முயற்சித்து வருவதாக பிரதமர் மோடி கூறினார். விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா பயனாளிகளுடன் பிரதமர் மோடி நேற்று நடத்திய கலந்துரையாடலில் பேசியதாவது: கடந்த 10 ஆண்டுகளில் ஒன்றிய அரசின் நலத்திட்டங்களால் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் மாற்றம் பிறந்துள்ளது. அத்திட்டங்களால் தைரியம் பெற்றுள்ளனர். திருப்தி அடைந்துள்ளனர். பலரது கனவு நனவாகி உள்ளது. அவர்களின் தன்னம்பிக்கையை பார்ப்பது மிகுந்த மனநிறைவை அளிக்கிறது. இந்த யாத்திரையின் மூலம் ஏழைகளுக்கான அரசின் மருத்துவ காப்பீடு திட்டமான ‘ஆயுஷ்மான்’ மருத்துவ அட்டை 1 கோடி பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 1.25 கோடி பேர் மருத்துவ பரிசோதனை பெற்றுள்ளனர். 70 லட்சத்துக்கும் அதிகமானோர் காசநோய் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதுவே முந்தைய ஆட்சிக் காலத்தின் நிலைமை இப்போது இருந்திருந்தால், இந்த திட்டங்களின் பயனாளிகள் அரசு அலுவலகங்களுக்கு ஏறி இறங்கியே நம்பிக்கையை இழந்திருப்பார்கள். அரசு சலுகைகளை பெற இப்போது லஞ்சம் தரத் தேவையில்லை. அதிகாரிகளின் உறவினர்கள் மட்டுமே பலனடைந்த நடைமுறைகள் ஒழிக்கப்பட்டுள்ளன. நான் உங்கள் குடும்பத்தில் ஒருவனைப் போன்றவன். எனவே யாருடைய தயவும் உங்களுக்கு தேவையில்லை.
கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் நாடு முழுவதும் 10 கோடி பெண்கள் சுய உதவிக் குழுக்களில் சேர்ந்துள்ளனர்.

வங்கிகள் மூலம் அவர்களுக்கு ரூ.7.5 லட்சம் கோடி கடன் தரப்பட்டுள்ளது. 2 கோடி பெண்களை லட்சாதிபதி ஆக்குவதே எனது கனவு. விவசாயிகளுக்கு உதவ லட்சக்கணக்கான சேமிப்பு கிடங்களை அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், கூட்டுறவு சங்கங்களை கிராமப்புற வாழ்க்கையின் வலுவான அங்கமாக மாற்றும் முயற்சியும் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக பால் மற்றும் சர்க்கரை உற்பத்தி துறைகளைத் தொடர்ந்து இப்போது விவசாயம் மற்றும் மீன்வளம் போன்ற துறைகளிலும் பெருமளவில் கூட்டுறவு சங்கங்கள் அதிகரிக்கப்படுகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.

* பிரதமர் அலுவலகத்தில் மாணவர்கள் சுற்றுலா
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தனது இல்லத்தை பள்ளி மாணவர்கள் சுற்றிப்பார்த்து மகிழ்ந்த வீடியோவை பிரதமர் மோடி டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் மாணவர்கள், ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நடக்கும் மாநாட்டு அறை, பிரதமரின் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் சென்று சுற்றிக் காண்பிக்கப்பட்டனர். பிரதமருடன் கலந்துரையாடிய அவர்கள் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துப் பாடலை பாடினார். முடிவில் மாணவர்கள் தம்ஸ்-அப் செய்ததன் மூலம் தனது அலுவலகம் இறுதித் தேர்தவில் வெற்றி பெற்று விட்டதாக பிரதமர் மோடி டிவிட் செய்துள்ளார்.

The post கிராமப்புறங்களில் கூட்டுறவு சங்கங்களை மேலும் வலுவாக்க முயற்சி: பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.

Tags : PM Modi ,New Delhi ,Modi ,Union Government ,Viksit Bharat Sankalp ,Yatra ,Union ,
× RELATED ராஜஸ்தான் பிரசாரத்தில் வெறுப்பு...