முத்துப்பேட்டை, டிச.28: முத்துப்பேட்டை காவல் உட்கோட்ட பகுதியில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிய டிஎஸ்பி ராஜா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். முத்துப்பேட்டை டிஎஸ்பியாக இருந்த விவேகானந்தன் இடம் மாற்றம் பெற்று சென்னைக்கு சென்றதையடுத்து முத்துப்பேட்டை புதிய டிஎஸ்பியாக ராமநாதபுரத்தில் பணியாற்றிய ராஜா சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில் முத்துப்பேட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவகத்திற்கு வந்த ராஜா டிஎஸ்பியாக பொறுப்பேற்றுக்கொண்டார்.அவருக்கு முத்துப்பேட்டை சரகத்தில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்.இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட காவல்துறையினர் பூங்கொத்து, சால்வை, பழங்கள் கொடுத்து வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.
தொடர்ந்து புதிய டிஎஸ்பி ராஜா செய்தியாளர்களிடம் கூறுகையில், முத்துப்பேட்டை சரகத்திற்கு உட்பட்ட முத்துப்பேட்டை, எடையூர், பெருகவாழ்ந்தான், கலப்பால், திருக்களார் ஆகிய காவல் சரகம் பகுதியில் கஞ்சா, கள்ளச்சாராயம் உள்ளிட்ட போதை பொருட்கள், மணல் கடத்தல் திருட்டு, கொலை கொள்ளை கட்டப்பஞ்சாயத்து, பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேநேரத்தில் சட்டம் ஒழுங்கை பேணி பாதுகாக்கவும், சாலை விபத்துக்களை குறைக்கவும், போக்குவரத்து நெரிசலை சீரமைக்கவும், குற்றங்களை தடுக்கவும், நடந்த குற்ற சம்பவங்களில் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும், போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே இணக்கமான உறவை ஏற்படுத்துவதற்கும் துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
The post முத்துப்பேட்டை காவல் உட்கோட்ட பகுதியில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் புதிய டிஎஸ்பி எச்சரிக்கை appeared first on Dinakaran.