×

நிர்மலா சீதாராமன் அற்ப அரசியல் செய்கிறார்: திருமாவளவன் குற்றச்சாட்டு

கேடிசி நகர்: ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அற்ப அரசியல் நடத்துவதை நிறுத்தி விட்டு தமிழகத்திற்கு கூடுதல் வெள்ள நிவாரண நிதி ஒதுக்க வேண்டும் என்று நெல்லையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறினார். தென்மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் நேற்று பார்வையிட்டார். நெல்லையில் வண்ணார்பேட்டை, வெள்ளக்கோயில், வீரராகவபுரம், குருந்தடையார்புரம் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். பாதிக்கப்பட்ட சுமார் 1000 பேருக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

பின்னர் அவர் அளித்த பேட்டி: தமிழக முதல்வர், பிரதமரை சந்தித்து பாதிக்கப்பட்ட பகுதியை தேசிய பேரிடர் பாதிப்பு பகுதியாக அறிவிக்க வேண்டும் என்றும், ரூ.21 ஆயிரம் கோடி நிவாரணம் வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். ஆனால் ஒன்றிய அரசு வழக்கமாக ஒதுக்கக் கூடிய ரூ.900 கோடி நிதி மட்டுமே ஒதுக்கியுள்ளது. கூடுதல் நிதி ஒதுக்கவில்லை. கூடுதல் நிதி ஒதுக்குவதற்கு ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெருவெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என்று கூறியிருப்பது ஏற்புடையதல்ல. அவர் மாநில அரசை விமர்சிப்பதை நிறுத்தி விட்டு தமிழக மக்களின் மேல் அக்கறை கொண்டு கூடுதல் நிதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் அற்ப அரசியல் நடத்துவதை நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post நிர்மலா சீதாராமன் அற்ப அரசியல் செய்கிறார்: திருமாவளவன் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Nirmala Sitharaman ,Thirumavalavan ,KDC Nagar ,Union Finance Minister ,Tamil Nadu ,
× RELATED அனைத்து வகை பால் கேன்களுக்கும் 12%...