×

தண்டையார்பேட்டை ஐஓசி நிறுவனத்தின் ஆயில் கழிவு டேங்க் வெடித்து ஒருவர் பலி: மற்றொருவர் கவலைக்கிடம்

சென்னை,: சென்னையில் ஐஓசி நிறுவனத்தின் ஆயில் கழிவு டேங்க் வெடித்து சிதறியதில் ஒருவர் தீப்பிடித்து உடல் கருகி பலியனார். மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை தண்டையார்பேட்டை பரமேஸ்வரன் நகர் பகுதியில் இந்தியன் ஆயில் நிறுவனம் உள்ளது. இங்கு நிரந்தர தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் என 500 பேர் பணிபுரிந்து வருகின்றனர். மணலி சிபிசிஎல் நிறுவனத்தில் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல், டீசல் ஆயில் ஆகியவை பைப் லைன் மூலம் தண்டையார்பேட்டை ஐஓசி நிறுவனத்திற்கு கொண்டு வரப்பட்டு டேங்கர் மூலம் சேமிக்கப்படுகிறது. பிறகு அங்கிருந்து கூட்ஸ் ரயில், லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில், விமானநிலையத்திற்கு கொண்டு செல்லும் பெட்ரோல் டேங்கர் பகுதியில் தனியார் ஒப்பந்த நிறுவனமான மேனுவல் கொரியா என்ற நிறுவனத்தில் வேலை பார்க்கும் நான்கு ஊழியர்கள் வெல்டிங் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது திடீரென நெருப்பு பக்கத்தில் உள்ள வேஸ்ட் ஆயில் டேங்கில் பட்டு அந்த டேங்க் வெடித்து தீப்பற்றி எரிய தொடங்கியது.

இதில், அங்கு வேலை பார்த்த பெருமாள் என்ற ஊழியர் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே கரிக்கட்டையாக கீழே விழுந்தார். மேலும் உடன் வேலை பார்த்த சரவணன், பன்னீர் ஆகியோருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. உடனடியாக சம்பவம் குறித்து தீயணைப்பு நிலையத்திற்கும் ஆர்.கே. நகர் காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர்.சம்பவ இடத்திற்கு ராயபுரம், கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, எஸ்பிளனேடு, வியாசர்பாடி உள்ளிட்ட பகுதியிலிருந்து 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகளில் 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீருடன் கெமிக்கல் கலந்து தீயை அணைத்தனர். இந்த விபத்து ஏற்பட்டபோது டேங்கர் வெடித்த சத்தம் கேட்டு, சுற்று வட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் பதற்றம் அடைந்தனர். வீட்டுக்குள்ளிருந்து அனைவரும் வெளியே ஓடி வந்து என்ன, ஏதோ என அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சக்திவேல், உதவி ஆணையர் இளங்கோவன், ஆய்வாளர் பூசைதுரை ஆகியோர் வந்து விசாரணை நடத்தினர். உடல் கருகி பலியான பெருமாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், 40 சதவீதம் தீக்காயம் பட்ட சரவணன் மற்றும் எலக்ட்ரீசியன் வேலை பார்த்த டில்லிபாபுவிற்கு கண்ணில் காயம் பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சரவணன் அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இதை தொடர்ந்து தண்டையார்பேட்டை தாசில்தார் பரமராஜ் சம்பவ இடத்தை பார்வையிட்டு அதிகாரிகளிடமும் உயிரிழந்த குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்தினார். \ேலும் சென்னை மாநகராட்சி 4வது மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன், மாநகராட்சி மண்டல அதிகாரி விஸ்வநாதன் சம்பவ இடத்திற்கு சென்று விபத்து குறித்து உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரியிடம் கூறினார்.

தீ விபத்தில் உயிரிழந்த தண்டையார்பேட்டை பரமேஸ்வரன் நகரை சேர்ந்தவர் பெருமாள் (50), இவர் வெல்டிங் வேலை செய்து வந்தார். இவருக்கு சசி (45) என்ற மனைவி பிரகாஷ் என்ற மகன் லோகேஸ்வரி என்ற மகள் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்த சரவணன் (50). இவருக்கு தமிழ்ச்செல்வி (35) என்ற மனைவி காந்த், தனுஷ் என்ற 2 மகன்கள் உள்ளனர். இதுகுறித்து ஆர்.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க ஐஓசி நிறுவனம் அருகே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இச்சம்பவம் தண்டையார்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தீ விபத்து குறித்து தகவல் வெளியானதும், பொதுமக்கள் மற்றும் ஊழியர்களின் உறவினர்கள் ஐஓசி முன்பு கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் வந்து அவர்களை சமரசப்படுத்தினர்.

ரூ.5 லட்சம் நிதி: உயிரிழந்த பெருமாள் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று ஐஓசி நிறுவனம் அறிவித்துள்ளது.

The post தண்டையார்பேட்டை ஐஓசி நிறுவனத்தின் ஆயில் கழிவு டேங்க் வெடித்து ஒருவர் பலி: மற்றொருவர் கவலைக்கிடம் appeared first on Dinakaran.

Tags : Thandaiyarpet ,IOC ,CHENNAI ,Thandaiyarpeti ,Dinakaran ,
× RELATED பூக்கடை பகுதியில் பரபரப்பு...