×

தாமிரபரணி ஆற்றில் கரைபுரண்ட வெள்ளத்தில் செங்கல் சூளைகள் நீரில் மூழ்கியதால் 25 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிப்பு

ஏரல்: தாமிரபரணி ஆற்றில் கரைபுரண்ட வெள்ளத்தில் ஏரல் பகுதியில் 50க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் தண்ணீரில் மூழ்கி பல கோடி மதிப்புள்ள செங்கல்கள் மற்றும் செங்கல் அறுவடை செய்யும் மிஷின்கள் சேதமடைந்துள்ளன. மேலும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் இருந்து முக்காணி செல்லும் மெயின் ரோட்டில் ஏரல் புதுமனை அம்மாள் தோப்பு, வாழவல்லான், உமரிக்காடு, முக்காணி பகுதிகளிலும் மாவடிபண்ணை, தென்திருப்பேரை, ஆழ்வார்திருநகரி, ஆழ்வார்தோப்பு உள்ளிட்ட பகுதிகளிலும் 50க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன.

இங்கு உற்பத்தியாகும் செங்கல்கள், தூத்துக்குடி மாவட்டம் மட்டுமின்றி நெல்லை உட்பட பிற மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த சூளைகளில் செங்கல் அறுக்கும் தொழில், செங்கலை வேக வைப்பது உட்பட பணிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும், செங்கல் சூளைகளுக்கு விறகு கொண்டு வருவது, செங்கலை வாகனத்தில் எடுத்து செல்வது என மறைமுகமாக 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் வேலை செய்து வருகின்றனர். தொழிலாளர்கள் அனைவரும் பெரும்பாலும் அங்கேயே குடும்பத்துடன் தங்கியிருந்து வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தாமிரபரணி ஆற்றில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ஊருக்குள் புகுந்ததால் இப்பகுதியில் உள்ள செங்கல் சூளைகள் தண்ணீர் மூழ்கி அறுத்து வைக்கப்பட்டிருந்த லட்சக்கணக்கான பச்சை செங்கல் தண்ணீரில் கரைந்து போனது. மேலும் செங்கல் அறுவடை செய்யும் மிஷின்கள், செங்கல் ஏற்றிச் செல்வதற்கு நிறுத்தப்பட்டிருந்த மினி லாரிகள், டிராக்டர்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டும், தண்ணீரில் மூழ்கியும் சேதமடைந்துள்ளன. இதனால் செங்கல் உற்பத்தி செய்பவர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து உள்ளனர். இவர்கள் மீண்டும் இந்த தொழிலை தொடங்க ரூ.பல லட்சம் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவர்கள் இந்த வேலையை தொடங்கினால்தான் இதனை நம்பியுள்ள 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கும் வேலை கிடைக்கும்.

எனவே அரசு இத்தொழிலை செய்து வருபவர்களுக்கு வட்டியில்லாத கடன் வசதியும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டும், வேலையை இழந்து தவிக்கும் தொழிலாளிகளுக்கு நிவாரணமும் வழங்கிட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post தாமிரபரணி ஆற்றில் கரைபுரண்ட வெள்ளத்தில் செங்கல் சூளைகள் நீரில் மூழ்கியதால் 25 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamiraparani river ,Eral ,Tamirabarani river ,Dinakaran ,
× RELATED அருமனையில் ஆற்றில் மூழ்கி முதியவர் பலி: குளிக்க சென்றபோது பரிதாபம்