×

5 நாட்களுக்கு முன்பே வானிலையை கணித்து கூற இயலாது: ஒன்றிய புவி அறிவியல் துறைச் செயலாளர் எம்.ரவிச்சந்திரன் தகவல்

டெல்லி: தூத்துக்குடியில் அதிக மழைப்பொழிவு குறித்து முன்னறிவிப்பு செய்தாலும் 5 நாட்களுக்கு முன்பே எதையும் கணித்து கூற இயலாது என்று ஒன்றிய புவி அறிவியல் துறைச் செயலாளர் எம்.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் மழை முன்னறிவிப்பு குறித்து வானிலை மையம் சரியான கணிப்பை வெளியிட தவறிவிட்டதாக தமிழக அரசு குற்றம் சாட்டியிருந்த நிலையில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுப்பு தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில் ஒரே நாளில் 90 செ.மீ. மழைப்பொழிவை எவரும் எதிர்பார்த்ததில்லை என்று ஒன்றிய புவி அறிவியல் துறைச் செயலாளர் எம்.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். டெல்லியில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 150 வது ஆண்டை முன்னிட்டு புதிய இலச்சினையை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எம்.ரவிச்சந்திரன்; காயல்பட்டினத்தில் பெய்தது போல் ஒரு மழையை எந்த ஒரு நாட்டின் வானிலை முன்னறிவிப்பு வழிமுறையாலும் கணிக்க முடியாது என்றும் 24 மணி நேரத்திற்கு முன்னதாகவே தான் வானிலையில் இத்தகைய மாற்றம் ஏற்பட்டு இவ்வளவு மழை பெய்யும் என்றும் விளக்கம் அளித்தார்.

வானிலை முறைகளில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி மேலும் புரிந்துகொள்ள வேண்டிய அவசியத்தை மேற்கோள் காட்டிய அவர், அதை செய்ய மேம்பட்ட கணினி அமைப்புகளை நிறுவவோம் என்றும் கூறினார். இதன் மூலம் உயர் தெளிவு திறன் கொண்ட கணிப்புகளை வழங்க முடியும் என ரவிச்சந்திரன் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு; மேம்பட்ட வானிலை முன்னறிவிப்புக்கு கூடுதல் வானிலை ஆய்வு மையங்கள் தேவை நிலவுவதாக குறிப்பிட்டுள்ளார்.

The post 5 நாட்களுக்கு முன்பே வானிலையை கணித்து கூற இயலாது: ஒன்றிய புவி அறிவியல் துறைச் செயலாளர் எம்.ரவிச்சந்திரன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Secretary of the ,Department ,of ,Geosciences ,of the Union M. Ravichandran ,Delhi ,Tuticorin ,Department of Geosciences of the ,Union ,M. Ravichandran ,
× RELATED அங்கீகாரம் இல்லா மனை பத்திரப்பதிவு : பதில் தர ஆணை