×

அமேதியில் ராகுல் தோற்றதற்கு ஓட்டுப்பதிவு இயந்திரம் தான் காரணம்: ‘இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ்’ தலைவர் பேட்டி

லண்டன்: அமேதி தொகுதியில் ராகுல்காந்தி தோற்றதக்கு ஓட்டுப்பதிவு இயந்திரம் தான் காரணம் என்று ‘இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ்’ தலைவர் பேட்டியளித்துள்ளார். வெளிநாடுவாழ் இந்தியர்கள் நலனுக்கான காங்கிரஸ் கட்சியின் அமைப்பாக செயல்படும், ‘இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ்’ தலைவர் சாம் பிட்ரோடா, தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘ராமர் கோயில் குடமுழுக்கு குறித்து அதிகம் பேசப்படுகிறது. மதம் என்பது மிகவும் தனிப்பட்ட விஷயம், அதை தேசியமயமாக்கக் கூடாது. அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்த கூடாது. நாட்டின் உண்மையான பிரச்னை ராமர் கோயிலா அல்லது வேலையின்மை, பணவீக்கமா? எப்போதாவது கோயிலுக்கு சென்றால் பரவாயில்லை.

நாட்டின் பிரதமர் ஒருவர் (மோடி) தனது முழு நேரத்தையும் கோயில்களில் செலவிடுவது கவலையளிக்கிறது. அவர் பள்ளிகள், நூலகங்கள், அறிவியல் நிறுவனங்களுக்குச் செல்ல வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த கேள்விகளை, காங்கிரஸ் மற்றும் ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்தாண்டு நடக்கும் லோக்சபா தேர்தல் நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து, ராகுல் காந்தியிடம் பேசியுள்ளேன். ராகுல் காந்தி அமேதி தொகுதியில் தோற்றதற்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களே காரணம்.

இந்தியாவில் ஜனநாயகம் பலவீனமாகிவிட்டதை பார்க்க முடிகிறது. நாட்டின் பிரதமர் ஒருவர், கடந்த 10 ஆண்டுகளாக செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தவில்லை. ‘இந்தியா’ கூட்டணியில் பிரதமர் பதவிக்கு திறமையான பலர் உள்ளனர். சிலர் கண்ணுக்குத் தெரிகிறார்கள், சிலர் இன்னும் தெரியவில்லை. ராகுல் காந்தி சிறந்த அறிவாளி; கட்சியை திறம்பட வழிநடத்தும் திறன் கொண்டவர்’ என்றார்.

The post அமேதியில் ராகுல் தோற்றதற்கு ஓட்டுப்பதிவு இயந்திரம் தான் காரணம்: ‘இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ்’ தலைவர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Rahul ,Amethi ,Indian Overseas Congress' ,London ,Indian Overseas Congress ,Rakulganti ,Amethi Rahul ,
× RELATED அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் யார்..? இன்று முடிவு