×

நொளம்பூர் கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்த காவல் குழுவினரை நேரில் அழைத்து பாராட்டி, சான்றிதழ் வழங்கினார் காவல் ஆணையாளர்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், V-7 நொளம்பூர் காவல் நிலைய எல்லையில், ஜெகன் என்பவரை கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகளை கைது செய்த திருமங்கலம் சரக உதவி ஆணையாளர் தலைமையிலான காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களை இன்று (27.12.2023) நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.

சென்னை, நொளம்பூர், டாக்டர் குருசாமி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த ஜெகன், என்பவர் முகப்பேர், ரெட்டிப்பாளையத்தில் மீன் வியாபாரம் செய்து வந்தார். கடந்த 05.09.2023 அன்று ஜெகன் மேற்படி மீன் கடையில் இருந்தபோது, அங்கு வந்த நபர்கள் ஜெகனை கத்தியால் தாக்கி கொலை செய்துவிட்டு, காரில் ஏறி தப்பிச் சென்றன. இது குறித்து ஜெகனின் மனைவி கல்பனா கொடுத்த புகாரின்பேரில் V-7 நொளம்பூர் காவல் நிலையத்தில் கொலை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

மேற்படி கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய, திருமங்கலம் சரக உதவி ஆணையாளர் B.வரதராஜன் மேற்பார்வையில், V-7 நொளம்பூர் காவல் நிலைய சட்டம், ஒழுங்கு காவல் ஆய்வாளர் ஜார்ஜ் பொன் மில்லர், குற்றப்பிரிவு ஆய்வாளர் விஜயகாந்த் (தற்போது M-3 புழல் கா.நி.,), V-5 திருமங்கலம் காவல் நிலைய சட்டம், ஒழுங்கு காவல் ஆய்வாளர் சூரியலிங்கம், ஆகியோர் தலைமையில், உதவி ஆய்வாளர்கள் மனோஜ்குமார், கல்வியரசன், ரமேஷ், சிறப்பு உதவி ஆய்வாளர் ரவி, தலைமைக் காவலர்கள் ராஜகோபால், சரவணன், முதல்நிலைக் காவலர்கள் வினோத்குமார், சந்தான மகாலிங்கம், பரத், பவுன்ராஜ், ரபீக் அகமது, ரவிச்சந்திரன் மற்றும் அக்னிராஜ் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினர் விசாரணையில், 2015ம் ஆண்டு, திருவாரூர் மாவட்டத்தில் கோயில் திருவிழாவின்போது, ஜெகன் தரப்பினருக்கும், மந்திரமூர்த்தி தரப்பினருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக இருந்த முன்விரோதம் காரணத்தால், மந்திரமூர்த்தி தரப்பினர் ஜெகனை கொலை செய்தது தெரியவந்தது. தனிப்படையினர் பல்வேறு இடங்களில் தீவிர விசாரணை மற்றும் தேடுதலில் ஈடுபட்டு, மேற்படி கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் .சக்கரை , மகேஷ், மந்திரமூர்த்தி, சீனிவாசன், நிர்மல்குமார் ஆகிய 5 நபர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்திய 1 கார் மற்றும் 2 கத்திகள் பறிமுதல் செய்தனர்.

மேலும் முக்கிய குற்றவாளியான மாரி (எ) ஆழிக்குடி மாரி என்பவரை பிடிக்க, தனிப்படைகள், ஆந்திர மாநிலம் சென்று தீவிர விசாரணை செய்ததில், எதிரி மாரி ஒடிசா மாநிலத்தில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. அதன்பேரில், தனிப்படை காவல் குழுவினர் ஒடிசா மாநிலம் சென்று ஒடிசா மாநில காவல்துறை ஒத்துழைப்புடன் ஒடிசா மாநிலம், மல்கங்கிரி மாவட்டம், சுன்னம்கோய் கிராமத்தில் உள்ள மலை உச்சியில் பதுங்கியிருந்த மாரி (எ) மாரிமுத்து (எ) ஆலிக்குடி மாரி என்பவரை நேற்று (26.12.2023) கைது செய்து அவரிடமிருந்து 1 கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

The post நொளம்பூர் கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்த காவல் குழுவினரை நேரில் அழைத்து பாராட்டி, சான்றிதழ் வழங்கினார் காவல் ஆணையாளர் appeared first on Dinakaran.

Tags : Commissioner of Police ,Nolampur ,Chennai Metropolitan Police ,Commissioner ,Sandeep Rai Rathore ,Jagan ,V-7 ,
× RELATED மோப்ப நாய் பிரிவிற்கு புதிதாக...