×

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி


சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில வருடங்களாகவே பல்வேறு உடல்நலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் பொது நிகழ்ச்சி, கட்சி பொது கூட்டங்கள் என எந்த நிகழ்வுகளிலும் அவர் கலந்து கொள்ளாமல் வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில் விஜயகாந்த் கடந்த மாதம் 18ம் தேதியன்று சளி, இருமல் மற்றும் தொண்டை வலி போன்ற பிரச்னைகளால் மருத்துவ பரிசோதனைக்காக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சளி மற்றும் இருமல் அதிகமாக இருப்பதால் சுவாசிக்க செயற்கை சுவாசம் அளித்தனர்.

பின்னர், விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாகவும், அவரை நுரையீரல் நிபுணர்கள் கண்காணித்து சிகிச்சை அளித்து வருவதாகவும், அவருக்கு முழுவதுமாக ஆக்சிஜன் உதவியுடன் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் என்றும் தகவல் வெளியானது. மேலும், அவரது உடல்நிலை மோசமாக இருப்பது போன்ற வதந்திகள் கிளம்பியது. இதனால் கடந்த நவம்பர் 23ம் தேதி மியாட் மருத்துவமனை தரப்பிலிருந்து விஜயகாந்த் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும், அவர் மருத்துவ சிகிச்சைக்கு நன்றாக ஒத்துழைப்பதாகவும் அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதன் பின்னர் சிகிச்சை முடிந்து இம்மாதம் 11ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தேமுதிக செயற்குழு, பொதுகுழு கூட்டங்களிலும் கலந்து கொண்டார். இந்நிலையில், நேற்றிரவு மீண்டும் விஜயகாந்த் மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து தேமுதிக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் 15 நாட்களுக்கு பிறகு வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் பூரண உடல் நலத்துடன் இருக்கிறார். பரிசோதனை முடிந்தப் பின், நாளை வீடு திரும்புவார். இவ்வாறு தேமுதிக தலைமை அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

The post தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.

Tags : DMDK ,Vijayakanth ,Chennai ,DMV ,Dinakaran ,
× RELATED காவலர்கள் மீது தாக்குதலுக்கு தேமுதிக கண்டனம்