×

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ரூ.171 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (27.12.2023) சென்னை, கலைவாணர் அரங்கில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் நடைபெற்ற விழாவில், 32.95 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடங்கள், விடுதிகள் மற்றும் சமுதாயநலக்கூடத்தை திறந்து வைத்து, ரூ.138 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள விடுதிகள் மற்றும் கற்றல் கற்பித்தல் அறைகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், 194 கோடி ரூபாய் மதிப்பில், அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டம், தமிழ்நாடு பழங்குடியினர் பட்டியலினத்தவர் புத்தொழில் நிதியம், பழங்குடியினருக்கான வாழ்வாதார திட்டம், முதலமைச்சரின் – ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக, பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டத்தின் கீழ் கடனுதவிகள், பழங்குடியினர் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு வீடுகள் வழங்குதல், உயர்கல்வி பெற கல்வி உதவித்தொகை. கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகள் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

கட்டி முடிக்கப்பட்டுள்ள பள்ளிக் கட்டடங்கள், விடுதிகள் மற்றும் சமுதாயநலக்கூடத்தை திறந்து வைத்தல்
கடலூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், விருதுநகர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள 10 ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் 9.22 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், அறிவியல் ஆய்வுக்கூடம், சுற்றுச்சுவர், கழிவறை மற்றும் குடிநீர் வசதி; திருவள்ளூர், காஞ்சிபுரம், தருமபுரி, விருதுநகர், சிவகங்கை, கிருஷ்ணகிரி, தஞ்சாவூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் 19.84 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான 9 விடுதிகள்; திருப்பூர், ஈரோடு, மதுரை, தென்காசி மற்றும் இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 3.89 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 6 ஆதிதிராவிடர் சமுதாய நலக்கூடங்கள் என மொத்தம் ரூ.32.95 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.

புதிதாக கட்டப்படவுள்ள விடுதிகள் மற்றும் கற்றல் கற்பித்தல் அறைகளுக்கு அடிக்கல் நாட்டுதல்
ஆதிதிராவிடர் கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் மதுரை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 8 விடுதிக் கட்டடங்கள்; கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஆதிதிராவிடர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் 28 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 4 விடுதிக் கட்ட்டங்கள்; மாநிலத்தின் 16 மாவட்டங்களில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின கல்லூரி மாணவ, மாணவியர்கள் விடுதிகளில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கட்டப்படவுள்ள 22 கற்றல் கற்பித்தல் அறைகள் என மொத்தம் ரூ.138 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள விடுதிகள் மற்றும் கற்றல் கற்பித்தல் அறைகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் கடனுதவி
அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ், ரூ.79.35 கோடி திட்ட மதிப்பீட்டில் 244 பயனாளிகளுக்கு ரூ.53.94 கோடி வங்கிக் கடனுடன் ரூ.25 கோடி மானியம் வழங்குவதற்கான ஆணைகளை தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கினார்.

தமிழ்நாடு பழங்குடியினர் பட்டியலினத்தவர் புத்தொழில் நிதியத்தின் கீழ் நிறுவனங்களுக்கு பங்கு முதலீடு
தமிழ்நாடு பழங்குடியினர் பட்டியலினத்தவர் புத்தொழில் நிதியம் திட்டத்தின் கீழ், ஆதிதிராவிடர்களால் நடத்தப்படும் 3 நிறுவனங்கள் மற்றும் பழங்குடியினரால் நடத்தப்படும் 2 நிறுவனங்கள், என மொத்தம் 5 புத்தொழில் நிறுவனங்களுக்கு ரூ.6.50 கோடி பங்கு முதலீடு வழங்குவதற்கான ஒப்புதல் ஆணைகளை தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கினார்.

தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்களுக்கு வீடுகள் வழங்குதல்
தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள வீடற்ற தூய்மைப் பணியாளர் உறுப்பினர்களுக்கு, தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள பங்குத் தொகையில் பயனாளியின் பங்குத்தொகையின் 90 சதவிகிதம் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நல வாரியத்தின் மானியமாக விடுவிக்கப்பட்டு 55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 500 வீடுகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளை தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கினார்.

பழங்குடியினருக்கு வீடுகள் வழங்கும் திட்டம்
பொருளாதாரத்தில் பின்தங்கிய வீடற்ற காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சார்ந்த 443 பழங்குடியின இருளர் குடும்பங்கள் பயன்பெறும் வகையில், காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத் மற்றும் ஶ்ரீபெரும்புதூர் ஆகிய வட்டங்களில் ரூ.22.80 கோடி செலவில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள 443 வீடுகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளை தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கினார்.

முதலமைச்சரின் – ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக, பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டத்தில் வங்கிக் கடனுதவி
முதலமைச்சரின் – ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக, பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டத்தின் (CM-ARISE) கீழ், 225 பயனாளிகள் பயன்பெறும் வகையில், ரூ.16.76 கோடி திட்ட மதிப்பீட்டிலான ரூ.10.65 கோடி வங்கிக் கடனுடன் கூடிய ரூ.5.80 கோடி மானியத்திற்கான வரைவோலையை தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கினார்.

பழங்குடியினருக்கான வாழ்வாதார திட்டம்
பழங்குடியினருக்கான வாழ்வாதார திட்டத்தின் கீழ், பழங்குடியினரின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக, பிரத்யேகமான வருவாய் ஈட்டும் திட்டங்களை அரசு சாரா தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்தும் வகையில், வேளாண் பொறியியல் இயந்திரங்கள் வழங்குதல், சூரியமின் சக்தியுடன் இயங்கும் அரவை இயந்திரங்கள் வழங்குதல் மற்றும் அரியலூர் மாவட்ட இருளர் இன பழங்குடியின மக்களுக்கு முந்திரி சேகரம் செய்து கொள்ளும் உரிமைக்கான ஆணைகள், என மொத்தம் ரூ.1 கோடியில், 5 பழங்குடியின சங்கங்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் சங்க நிர்வாகிகளுக்கு ஆணைகளை வழங்கினார்.

புதிரை வண்ணார் பயனாளிகளுக்கு வங்கிக் கடனுதவி
விளிம்பு நிலையில் உள்ள புதிரை வண்ணார் இன மக்களுக்கான, அடிப்படை சமூக பொருளாதார கணக்கெடுப்பு பணி தொடங்கப்பட்டு, அதன் மூலம் கண்டறியப்பட்ட 10 புதிரை வண்ணார் பயனாளிகளுக்கு ரூ. 44.16 இலட்சம் திட்ட மதிப்பிற்கான, ரூ.27.98 இலட்சம் வங்கிக் கடனுதவியுடன் கூடிய ரூ.15.45 இலட்சம் மானியத்திற்கான ஆணைகளை தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கினார்.

கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகள் வழங்குதல்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின் கீழ், மாநில அரசு வகுக்கும் எதிர்பாரா திட்டத்தின்படி (Model Contigency Plan) தீவிர வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களின் 50 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர், சமையலர் ஆகிய பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கினார்.

அரசு சட்டக் கல்லூரிகளில் பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு உட்பயிற்சி உதவித்தொகை வழங்குதல்
அரசு சட்டக் கல்லூரிகளில் இறுதி ஆண்டு பயின்று வரும் 1000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு உட்பயிற்சி (Internship) காலங்களுக்கான உதவித்தொகை ரூ. 1 கோடி தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கினார்.

வெளிநாடுகளில் உள்ள தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயில கல்வி உதவித் தொகை வழங்குதல்
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவராக மதம்மாறிய ஆதிதிராவிட மாணவ, மாணவியர்கள் வெளிநாடுகளில் கல்வி பயில்வோருக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு ரூ.8 இலட்சதுக்கு குறைவாக வருமானம் உள்ள குடும்பங்களின் மாணவர்களுக்கு ரூ.36 இலட்சத்துக்கு மிகாமலும், ஆண்டுக்கு ரூ. 8 இலட்சத்துக்கு மேல் ரூ. 12 இலட்சத்துக்கு குறைவாக வருமானம் உள்ள குடும்பங்களின் மாணவர்களுக்கு ரூ.24 இலட்சத்துக்கு மிகாமலும் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், வெளிநாட்டில் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயில்வதற்காக இந்த ஆண்டு 30 மாணவ, மாணவியர்களுக்கு அனுமதி ஆணைகளை தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கினார்.

முழுநேர முனைவர் ஆராய்ச்சி படிப்பிற்கான ஊக்கத்தொகை வழங்குதல்
முழுநேர முனைவர் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், 60 மாணவ, மாணவியர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் ஊக்கத் தொகைக்கான காசோலைகளை முதலமைச்சர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன், ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, எஸ். ஸ்டாலின் குமார், கு. செல்வப்பெருந்தகை, எஸ்.எஸ். பாலாஜி, எம். பன்னீர்செல்வம், கே. சிவகாமசுந்தரி, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் க. லட்சுமி பிரியா, இ.ஆ.ப., தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் உ.மதிவாணன், ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் த.ஆனந்த், இ.ஆ.ப., தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் எல்.நிர்மல்ராஜ், இ.ஆ.ப., பழங்குடியினர் நல இயக்குநர் எஸ். அண்ணாதுரை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ரூ.171 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Aadiravidar and Tribal Welfare Department ,K. Stalin ,Chennai ,Chief Minister ,Tamil Nadu ,Kalaivanar ,Arena ,Adhiravidar and ,Tribal Welfare Department ,Aditravidar and Tribal Welfare Department ,Dinakaran ,
× RELATED கோடைகாலத்தில் குடிநீர் தேவையை கருதி...