×

41 நாள் மண்டல காலம் நிறைவடைகிறது; சபரிமலையில் இன்று மண்டல பூஜை: 30ம் தேதி மீண்டும் நடை திறப்பு

திருவனந்தபுரம்: சபரிமலையில் 41 நாள் மண்டல காலம் இன்றுடன் நிறைவடைகிறது. காலையில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெற்றது. இன்றும் சபரிமலையில் கட்டுக்கடங்காத வகையில் பக்தர்கள் குவிந்து உள்ளனர். சபரிமலையில் இந்தாண்டு மண்டல பூஜைகள் நவம்பர் 17ம் தேதி தொடங்கியது. முந்தைய வருடங்களை போலவே இந்த வருடமும் மண்டல காலம் தொடங்கியவுடன் சபரிமலைக்கு பக்தர்கள் படையெடுக்க தொடங்கினர். தொடக்க நாட்களில் தினமும் சராசரியாக 60 ஆயிரம் முதல் 75 ஆயிரம் வரை பக்தர்கள் வந்தனர். வார இறுதி நாட்களில் அதிகரித்தது.

சில நாட்களில் 1 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வந்ததால் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். இதனால் பக்தர்கள் 10 முதல் 16 மணி நேரம் வரை வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இவ்வாறு பல மணி நேரம் வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு உணவு, குடிநீர், கழிப்பிடம் உள்பட எந்த வசதியும் செய்து தரப்படாததால் பக்தர்கள் கடும் அவதியடைந்தனர். இதையடுத்து கேரள உயர்நீதிமன்றம் தலையிட்டு பக்தர்களுக்கு உடனடியாக வசதிகள் செய்து கொடுக்க உத்தரவிட்டது. இந்தநிலையில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை இன்று காலை 10.30க்கு நடந்தது.

முன்னதாக ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்ட தங்க அங்கி நேற்று மாலை சன்னிதானத்தை அடைந்தது. பின்னர் தங்க அங்கி ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. மண்டல பூஜை முடிவடைந்த நிலையில் இன்றிரவு 11 மணியளவில் கோயில் நடை சாத்தப்படுகிறது. இன்றுடன் 41 நாள் நீண்ட மண்டல காலம் நிறைவடையும். மகரவிளக்கு கால பூஜைகளுக்காக டிசம்பர் 30ம் தேதி மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும். மண்டல பூஜையை முன்னிட்டு இன்றும் சபரிமலையில் கட்டுக்கடங்காமல் பக்தர்கள் குவிந்தனர். நேற்று மதியம் சபரிமலை வந்த பக்தர்களால் இன்று காலை தான் தரிசனம் செய்ய முடிந்தது.

The post 41 நாள் மண்டல காலம் நிறைவடைகிறது; சபரிமலையில் இன்று மண்டல பூஜை: 30ம் தேதி மீண்டும் நடை திறப்பு appeared first on Dinakaran.

Tags : Mandala ,Mandala Pooja ,Sabarimala ,Thiruvananthapuram ,Pooja ,Period ,
× RELATED பிரிட்ஜில் மாட்டிறைச்சி வைத்த 11 பேரின் வீடுகள் இடிப்பு