×

தஞ்சை பெரிய கோயில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆருத்ரா தரிசனம்: திரளான பக்தர்கள் தரிசனம்

தஞ்சை: தஞ்சை பெரிய கோயில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில்் இன்று காலை ஆருத்ரா தரிசனம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தஞ்சை பெரிய கோயில் உலக பிரசித்தி பெற்றதாகும். இக்கோயிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வாராகி அம்மன், நந்தியம்பெருமாள், விநாயகர், சண்டிகேஸ்வரர், முருகன், கருவூரார் சன்னதிகள் உள்ளன. பிரதோஷத்தன்று நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். அதுபோல இந்த கோயிலில் நடராஜர் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். நடராஜருக்கு மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று ஆரூத்ரா தரிசனம் நடைபெறும். அதன்படி நேற்றிரவு நடராஜருக்கு விபூதி, பால், சந்தனம், தேன், மஞ்சள், திரவியம், தயிர், எலுமிச்சை, இளநீர், கரும்புச்சாறு, வாசனை திரவியம் என 22 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

பின்னர் பெரியகோயில் அருகே உள்ள கொங்கனேஸ்வரர் கோயிலுக்கு நடராஜர் பல்லக்கு எடுத்து செல்லப்பட்டு கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து இன்று காலை நடராஜருக்கு ஆரூத்ரா தரிசனம் நடைபெற்றது. இதையொட்டி நடராஜர் மலர் அலங்காரத்தில் காட்சியளித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் நடராஜர் பல்லக்கில் ஊர்வலமாக 4 வீதிகளுக்கு எடுத்து செல்லப்பட்டார். திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆருத்ரா தரிசனம் இன்று காலை நடந்தது. இதையொட்டி அதிகாலை நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

அதேபோல் 5ம் பிரகாரத்தில் அமைந்துள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளிய சிவகாம சுந்தரி சமேத நடராஜருக்கு அதிகாலை 4 மணிக்கு பால், தயிர், சந்தனம், குங்குமம், இளநீர், தேன் மற்றும் பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. அப்போது, தீபத்திருவிழாவை முன்னிட்டு மலைமீது ஏற்றப்பட்ட மகாதீப கொப்பரையில் இருந்து பெறப்பட்ட தீப மை, நடராஜருக்கு அணிவிக்கப்பட்டது. பின்னர் சிவகாம சுந்தரி சமேத நடராஜர் அலங்கார ரூபத்தில் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு பக்தர்களுக்கு ஆருத்ரா தரிசனத்தில் காட்சி கொடுத்தார். பின்னர் திருமஞ்சன கோபுரம் வழியாக சிவகாம சுந்தரி சமேத நடராஜர் மாட வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது, மாணிக்கவாசக பெருமானும் மாட வீதியில் வலம் வந்தார். வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மண்டகப்படி செய்து சுவாமி தரிசனம் செய்தனர்.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், திருஉத்தரகோசமங்கையில் புகழ்பெற்ற மங்களேஸ்வரி அம்மன் உடனுறை மங்களநாதர்கோயில் உள்ளது. இங்கு 6 அடி உயர தெற்கு முகம் நோக்கிய பச்சை நிற மரகதக்கல்லால் ஆன நடராஜர் சிலை உள்ளது. இங்கு ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணியளவில் சுவாமிக்கு 32 வகையான அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அதிகாலை 3 மணிக்கு 51 கிலோ சந்தனத்தில் புதிய சந்தனக்காப்பு அலங்காரம் நடந்தது. 4 மணிக்கு ஆருத்ரா, மகா தீபராதனை நடந்தது. புதிய சந்தன காப்பு அலங்காரத்தை பொதுமக்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

சிதம்பரத்தில் பிற்பகலில் நடக்கிறது
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ர தரிசன கடந்த 18ம் தேதி கோயிலில் கொடி ஏற்றப்பட்டு திருவிழா நடந்து வருகிறது. நேற்று தேர் திருவிழா நடைபெற்றது. தொடர்ந்து இன்று காலை ஆயிரங்கால் மண்டபம் முகப்பில், சிவகாமசுந்தரி சமேத மந் நடராஜ மூர்த்திக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. இதில் பால், தயிர், விபூதி, பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், பழச்சார், தேன், சந்தனம், மற்றும் சொர்ணாபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

உள்ளூர், வெளியூர், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலம், வெளிநாட்டை சேர்ந்த பக்தர்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சாமி தரிசனம் செய்தனர். இன்று காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பின்னர் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடந்தது. பிற்பகல் 2 மணிக்கு மேல் மார்கழி மாத ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது. இதில் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாளுடன் 3 முறை முன்னும், பின்னும் ஆடி பக்தர்களுக்கு காட்சி அளித்தபடி கோயிலுக்குள் செல்கிறார். தொடர்ந்து இரவு பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கு வீதி உலாவுடன் உற்சவம் முடிவடைகிறது.

The post தஞ்சை பெரிய கோயில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆருத்ரா தரிசனம்: திரளான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Arudra ,Thanjavur Big Temple ,Tiruvannamalai Annamalaiyar Temple ,Tanjore ,Tanjore Periya Temple ,Thiruvannamalai Annamalaiyar Temple ,Thanjai Periya Temple ,
× RELATED ஆருத்ரா கோல்ட் நிறுவன மோசடி வழக்கு;...