×

வத்திராயிருப்பு பகுதியில் அழிவின் விளிம்பில் நாட்டு இன மலை மாடுகள்

*மலையில் மாடுகளை மேய்க்க அனுமதி வழங்க கோரிக்கை

வத்திராயிருப்பு : மலைப்பகுதியில் மாடுகளை மேய்க்க அனுமதிக்க வேண்டும் என மாடு வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதி என்பது மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் அழகான பகுதி. வத்திராயிருப்பு மற்றும் கான்சாபுரம், வ.புதுப்பட்டி, சேதுநாராயணபுரம், நெடுங்குளம், கூமாப்பட்டி, தாணிப்பாறை, மகாராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நாட்டு இன மலை மாடுகள் ஆயிரக்கணக்கில் வளர்க்கப்பட்டு வருகின்றன.

இந்த மாடுகள் மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதிகளில் இயற்கை சூழ்நிலையில் பராமரிக்கப்படுவதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள இளைஞர்கள் மிகுந்த ஆர்வத்துடன் ஜல்லிக்கட்டுக்காக இந்த மாடுகளை வாங்கிச் செல்கின்றனர். பொதுவாக மலைப்பகுதியில் ஆறுமாத காலம் மேய்க்கப்படுகின்றன. பின்னர் இந்த மாடுகள் விளை நிலங்களுக்கு கொண்டு வரப்பட்டு, அறுவடை முடிந்த பின் வயல்களில் மேய்க்கப்படுகின்றன. இந்த மாடுகளை பயன்படுத்தி, உரத்திற்காக வயல்களில் கிடை அமர்த்துவார்கள். இந்த மாடுகள்மூலம் கிடைக்கும் இயற்கை உரத்தினால் விளைச்சல் நன்றாக இருக்கும் என விவசாயிகள் கூறுகின்றனர்.

இந்த நிலையில் நாட்டு இன மலை மாடுகளை மலைப்பகுதியில் மேய்க்க வனத்துறையினர் தற்போது தடை விதித்துள்ளனர். இதனால் மாட்டை நம்பி பிழைத்து வருபவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். வனத்துறையின் இந்த நடவடிக்கையால், நாட்டு இன மலை மாடுகள் அழிவை நோக்கி செல்வதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர். மேய்ச்சல் நிலம் இல்லாததால், நூற்றுக்கணக்கான மாடுகளை வைத்திருந்தவர்கள் தங்கள் மாடுகளின் எண்ணிக்கையை வெகுவாக குறைத்து வருகிறார்கள்.

இதனால் நாட்டுமாடுகளின் எண்ணிக்கை குறைவது ஒரு பாதிப்பு என்றால், பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு துள்ளிவரும் தகுதியான காளைகள் எண்ணிக்கை வரும்காலங்களில் குறையவும் வாய்ப்பு இருப்பதாக கவலை தெரிவிக்கிறார்கள். ஜல்லிக்கட்டு ஆர்வ வர்களும் இதுபற்றி விளக்கம் அளித்து இருக்கிறார்கள்.

இது குறித்து கூமாபட்டி மலை மாடுகள் வளர்ப்போர் நலச் சங்கத்தின் தலைவர் மாயக்கண்ணன் கூறும்பொழுது,கடந்த ஒரு சில வருடங்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நாட்டுஇன மலைமாடுகளை மேய்க்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

இதனால் மலைப்பகுதியில் மாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்ப முடியாத நிலை உள்ளது. மேலும் மலைப்பகுதிக்குள் மாடுகளை மேய்க்க சென்றால் மேய்ப்பவர்களை கைது செய்து வனத்துறையினர் சிறையில் அடைக்கிறார்கள். இதனால் எங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு கேள்விக்குறியாகி உள்ளது. மேலும் மாடுகளை வளர்க்க முடியாமல் விற்க கூடிய சூழ்நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். அரசு உடனடியாக தனிக்கவனம் செலுத்தி மலைப்பகுதியில் மலை மாடுகளை மேய்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

காப்புக்காடு என்பதால் அனுமதி இல்லை

வனத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, மேற்கு தொடர்ச்சி மலை என்பது காப்புக்காடு ஆகும். இங்கு பல்வேறு உயிரினங்கள் காணப்படுகின்றன. மேய்ச்சலுக்காக செல்லும் மாடுகளால் வனவிலங்குகளுக்கு நோய் தொற்று பரவ வாய்ப்பிருக்கிறது. மேலும் மேய்ச்சலுக்கு செல்லும் மாடுகளால் அந்த மலைப்பகுதியில் உள்ள புல்லை சாப்பிடுவதால் மண்ணின் உறுதி தன்மை குறைந்து மண்ணரிப்பு ஏற்பட்டு வனத்தின் வளம் குறைகிறது.

மேலும் தற்போது இப்பகுதி புலிகள் சரணாலயமாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால்தான் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுமதிப்பதில்லை. தடையை மீறி வனப்பகுதிக்குள் மலை மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்வதால் மேய்ச்சல் வன குற்றமாக கருதி கைது செய்யப்படுகிறார்கள். இங்கு மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இதே நிலைமைதான் என தெரிவித்தார்.

ஜல்லிக்கட்டில் துள்ளி குதிக்கும் காளைகள்

வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் வளரும் நாட்டு இன மலைமாடு கன்றுகளை ஜல்லிக்கட்டு போட்டிக்கு தயார்படுத்த மதுரை, அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு, உத்தமபாளையம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, திருச்சி, மணப்பாறை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து வாங்கி செல்கின்றனர். கன்றாக இருக்கும் பருவத்திலேயே பயிற்சி அளிக்கின்றனர். நாட்டு இன மலை மாட்டு காளைகள் ஜல்லிக்கட்டு களத்தில் துள்ளி வந்து ஏராளமான பரிசுகளையும் வென்றுள்ளன. வத்திராயிருப்பு பகுதிக்கு நற்பெயரும் வாங்கிக்கொடுத்துள்ளன.

The post வத்திராயிருப்பு பகுதியில் அழிவின் விளிம்பில் நாட்டு இன மலை மாடுகள் appeared first on Dinakaran.

Tags : Vathirayiru ,
× RELATED வத்திராயிருப்பில் நெல் கொள்முதல்...