×

விடுமுறையையொட்டி மூணாறில் மூச்சு முட்டும் போக்குவரத்து நெரிசல்-முறைப்படுத்த சுற்றுலா பயணிகள் கோரிக்கை

மூணாறு/கூடலூர் : விடுமுறையையொட்டி மூணாறில் சுற்றுலாப் பயணிகள் குவிவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். இவற்றை சீரமைக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு தென்னகத்து காஷ்மீர் என அழைக்கப்படுகிறது. பிரசித்தி பெற்ற இந்த சுற்றுலாத் தலத்திற்கு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும், வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்கின்றனர். இந்நிலையில், கிறிஸ்துமஸ், புத்தாண்டு தொடர் விடுமுறையால் சுற்றுலாப்பயணிகள் குவிந்து வருகின்றனர். இதனால், நகரில் உள்ள சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். தற்போது பனிக்காலம் என்பதால், மூணாறில் குளிர்ந்த சீசனை அனுபவிக்க சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. குறிப்பாக கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் பள்ளிவாசல் எஸ்டேட், மாட்டுப்பட்டி, எக்கோ பாய்ன்ட், இரவிகுளம் தேசியப் பூங்கா, குண்டளை, டாப் ஸ்டேஷன் உட்பட பல்வேறு சுற்றுலாப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதனால், சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிப்படுகின்றனர். இதனால், சுற்றுலாப் பயணிகள் குறிப்பிட்ட நேரத்தில் தாங்கள் விரும்பிய நேரத்துக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.

எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள், மூணாறு பகுதியில் போக்குவரத்து நெரிசலை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கம்பம்மெட்டிலும் கடும் நெரிசல்

* சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை இன்று நடைபெற உள்ளது. இதனால் வழக்கத்தை விட நேற்று முதல் கோயிலுக்கு அதிக பக்தர்கள் சென்று கொண்டிருக்கின்றனர். கம்பத்திலிருந்து கம்பம்மெட்டு மலைச்சாலையில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் கம்பம்மெட்டு மலைச்சாலையில், கீழிருந்து மேல் நோக்கிச் செல்லும் ஐயப்ப பக்தர்களின் வாகனங்களும், கட்டப்பனை, நெடுங்கண்டம், கம்பம்மெட்டு பகுதியில் இருந்து தமிழகம் நோக்கி வரும் வாகனங்களும் சாலை குறுகலான இடங்களில் எதிர் எதிரே வந்து விடுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

கம்பம் போக்குவரத்து போலீசார்கள் கம்பம்மெட்டு பைபாஸ் சந்திப்பு, கம்பம் நகர் நத்திப்பு சாலை, மெயின்ரோடு சிக்னல் பகுதிகளில் பணியிலுள்ளதால் மலைச்சாலையில் போக்குவரத்தை சீர்செய்ய போலீஸ் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே மலைச்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இடங்களில் போலீசார்களை நியமித்து போக்குவரத்தை சீர்செய்யவேண்டும் என அய்யப்ப பக்தர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாடகை வாகனங்களுக்கு கடும் கிராக்கி

சபரிமலைக்கு தமிழக மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருடம்தோறும் வருகை தருகின்றனர். வருடத்திற்கு தமிழகத்தில் இருந்து மட்டும் சுமார் 15 லட்சம் பக்தர்கள் சபரிமலைக்கு வருகின்றனர். இதில் பெரும்பாலும் வாடகை வாகனங்களான பஸ் வேன் மற்றும் கார்களில் சபரிமலைக்கு மாலை அணிந்து வருகின்றன ர். இதனால் 65 நாட்களுக்கு அனைத்து விதமான வாடகை வாகனங்களும் பதிவாகி விடுகிறது.

இந்நிலையில் தற்சமயம் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு நிறைவு பெற்று விடுமுறை தொடங்கியுள்ளது. இதனால் பள்ளி விடுமுறையை ஒட்டி குடும்பத்துடன் வெளியூர் டூர் செல்பவர்களுக்கும், முகூர்த்த வெளியூர் கல்யாணத்திற்கு செல்வதற்கும் வாடகைக்கு வாகனங்கள் கிடைக்காமல் பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர். அப்படியே ஒன்றிரண்டு வாகனங்கள் கிடைத்தாலும் வழக்கத்தை விட அதிகமான வாடகை கேட்பதாக பொதுமக்கள் புலம்பி வருகின்றனர். சபரிமலை சீசன் முடிந்தால் தான் வாடகை வாகனங்களுக்கு உள்ள கிராக்கி மாறும்.

The post விடுமுறையையொட்டி மூணாறில் மூச்சு முட்டும் போக்குவரத்து நெரிசல்-முறைப்படுத்த சுற்றுலா பயணிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Munnar ,Kudalur ,Dinakaran ,
× RELATED பயிர்களை அழிக்கும் படையப்பா மூணாறு விவசாயிகள், மக்கள் பீதி