×

தேனி நகர் அழகர்சாமி காலனியில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படுமா?

*பொதுமக்கள் எதிர்பார்ப்பு

தேனி : தேனி நகரில் அழகர்சாமி காலனியில் அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.தேனி-அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட 12 வார்டில் சென்னை நகரத்து சேரிப்பகுதியை நினைவுப்படுத்தும் வகையில் ஒரு சேரிப்பகுதி உள்ளது. அழகர்சாமி காலனி எனப்படும் இக்காலனியில் குடியிருப்பு ஓரம் கழிவு நீர் ஓடையில்லாமல் கழிவுநீர் ஓடைகளுக்குள்ளேதான் வீடுகளே உள்ளன.

கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பாக தேனூர் அழகர்சாமி என்ற சாமியாரால் நடத்தப்பட்ட மடத்திற்கான இடத்தில் சாமியார் அளித்த தான நிலத்தில் சமத்துவபுரததை நினைவுபடுத்தும் வகையில் அனைத்து சமூக மக்களும் குடியிருந்து வருகின்றனர். இப்பகுதியில் சிறுசிறு குடிசைகளாக 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளதால் ஒரு வீட்டிற்கும் மற்றொரு வீட்டிற்கும் இடையே சில பகுதியில் 6 அடி அகலமும், சில பகுதிகளில் 3 அடி அகலமுமே கொண்டதாக தெருக்கள் உள்ளன. இப்பகுதியின் வழியாக அழகர் சாமி காலனிக்கு வடக்கு புறமுள்ள அல்லிநகரம் அம்பேத்கர் தெருவில் இருந்து வரும் கழிவுநீரோடை முறையாக செல்ல நகராட்சியின் கழிவுநீரோடை இல்லாததால் அழகர்சாமிகாலனி குடியிருப்புகளுக்குள் புகுந்து செல்கிறது. இப்பகுதியில் வசிப்போரே தங்கள் சிந்தனைக்கு ஏற்றவாறு சாக்கடையை அமைத்துள்ளனர்.

இக்காலனியில் சாக்கடை அள்ளும் பணியிலும், குப்பைகளை சேகரிக்கும் பணிகளும் நடப்பதில்லை. குடிநீர் விநியோகமும் இல்லை. தெருவிளக்குகள் ஆங்காங்கு மட்டும் உள்ளது. குடியிருக்கவே போதுமான இடமில்லாத நிலையில், கழிப்பறைக்கு வசதியில்லாமல் இப்பகுதியில் குடியிருப்போர் பெரியகுளம் சாலையில் உள்ள நகராட்சி கட்டணக் கழிப்பறைக்கே சென்று இயற்கை உபாதையை கழிக்கும் நிலை உள்ளது.

உடல்நலக்குறைவான காலங்களில் இயற்கை உபாதை கழிக்க காலனி மக்கள் படும்பாடு சொல்லில் அடங்காது என்கின்றனர் இப்பகுதி மக்கள்.
கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியின்போது, அப்போது நடந்த நகராட்சி உள்ளாட்சித் தேர்தலின்போதும், இப்பகுதியில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க ஏற்பாடு செய்வதாகவும், அடிப்படை வசதிகளான தெருவிளக்கு, குடிநீர் வசதி, சாக்கடை கால்வாய் வசதி பெற்றுத் தருவதாக உறுதி அளித்து வாக்குப்பெற்று ஆட்சி நிர்வாகத்திற்கு வந்தவர்கள் எந்த வசதியும் செய்யவில்லை என இப்பகுதி மக்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறும்போது, எங்கள் காலனியில் அடிப்படை வசதி என்பதே கிடையாது. மழைக்காலங்களில் இதனருகே உள்ள கரட்டு பகுதியில் இருந்து வரும் வெள்ளநீர் காலனி குடிசைகளுக்குள் புகுந்து விடுகிறது. மழைக்காலங்களில் ஒதுங்க இடமில்லாமல் தவிக்கும் நிலை உள்ளது. பட்டா இல்லாததால் நகராட்சி நிர்வாகம் அடிப்படை வசதி செய்து தர மறுக்கிறது. குடிநீருக்காகவும், கழிப்பறை வசதி கேட்டும் பலமுறை போராடி விட்டோம். ஆனால் எந்த பலனும் இல்லை.

எங்கள் பகுதியில் குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையம் கூட இல்லை. கடந்த 10 ஆண்டுகளாக எங்களுக்கு பட்டா பெற்றுத் தருவதாக சொன்னவர்கள் யாரும் பட்டா பெற்றுத் தரவில்லை, என்றனர். மேலும், அவர்கள் கூறுகையில், இப்பகுதி மக்களுக்கு பட்டா கேட்டால், இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமானது என்கின்றனர். அறநிலையத் துறையை தொடர்பு கொண்டால் மடத்துக்கு சொந்தமான இடம் என்கின்றனர். எங்கள் பகுதியில் வசிப்போருக்கு பட்டா வழங்க வேண்டும். இல்லையெனில் மறுகுடியமர்வு செய்யும் வகையில் குடியிருப்போருக்கு தலா 3 சென்ட் வீட்டுமனை ஒதுக்க வேண்டும். குடிசைமாற்று வாரியத்தின் மூலம் ரூ.2.50 லட்சம் செலுத்தி அடுக்குமாடி குடியிருப்பு பெற எங்களிடம் வசதியில்லை. எனவே, எங்களுக்கு இலவச வீட்டு மனையுடன் வீடு வழங்க வேண்டும், என்றனர்.

தேனி-அல்லிநகரம் நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: அரசுக்கு சொந்தமான புறம்போக்கு, நீர்நிலை புறம்போக்கு, இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்க முடியாத நிலை உள்ளது.அந்த வகையில், இப்பகுதியில் குடியிருப்போருக்கு பட்டா இல்லாததால் சாலை வசதி செய்ய முடியாத நில உள்ளது. அதேசமயம் சுகாதாரம் சம்பந்தமாக சுகாதார அலுவலர் மூலம் ஆய்வு நடத்தி சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பட்டா சம்பந்தமாக வருவாய்த் துறையினர்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

The post தேனி நகர் அழகர்சாமி காலனியில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படுமா? appeared first on Dinakaran.

Tags : Theni ,Nagar ,Alagarswamy Colony ,Theni Nagar ,Dinakaran ,
× RELATED போலீசிடமிருந்து மகனை மீட்டு தர கோரி கலெக்டரிடம் தாய் மனு