×

குடவாசல் பேரூராட்சி பகுதியில் நீர் நிலைகளில் கொட்டப்படும் குப்பைகளால் சீர்கேடு

*விழிப்புணர்வு ஏற்படுத்த பொதுமக்கள் கோரிக்கை

வலங்கைமான் : குடவாசல் பேரூராட்சி பகுதியில் நீர் நிலைகளில் கொட்டப்படும் குப்பைகளால் சீர்கேடு ஏற்படுகிறது. இதற்கு உடனடியாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.குடவாசல் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. அனைத்து வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள், சேங்காலிபுரத்தில் சாலையில் உள்ள பேரூராட்சி குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டு, குப்பைகள் தரம் பிரிக்கப்படுகின்றன. இந்நிலையில், வாரத்தில் ஓரிரு நாட்கள் குப்பை சேகரிக்கும் பணியாளர்கள் வராத நாட்கள் மற்றும தாமதமாக வரும் நாட்களில் பொதுமக்கள் தங்கள் அருகாமையில் உள்ள நீர் நிலங்களில் குப்பையை கொட்டி விடுகிறார்கள்.

குறிப்பாக, குடவாசல் ஏர்ந்தவாடி தலைப்பு வாய்களில் இருந்து பிரியும் பாசன குடவாசல் வாய்க்காலில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டி விடுகிறார்கள்.குறிப்பாக, பேருந்து நிலையம் எதிர்புறம் உள்ள ஏ ஜே கே நகர் உள்ள பாலாஜி நகர் அருகே செல்லும் பாசன வாய்க்கால் பகுதியில் மற்றும் அரசு மருத்துவமனை அருகே அத்திக்கடை பகுதி பாசன வாய்க்காலிலும், மேல அடிச்சேரிதெரு குளத்தை சுற்றியும் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு நிலவுகிறது.

இதுகுறித்து உரிய விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்த வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தமிழ்நாடு விவசாய சங்கத்தின் குடவாசல் நகர செயலாளர் சரவணன் கூறுகையில், நீர் நிலைகள், பாசன வாய்க்கால்கள்களை முறையாக தொடர்ந்து பராமரிக்க வேண்டும். விவசாய காலங்களில் நீர் வயலுக்கு முறையாக செல்வதில்லை. மேலும் குப்பைகள் கொட்டுவதால் நீர் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. எனவே உடனடியாக குப்பைகளை அள்ளி சீர் செய்ய வேண்டும் என்றார்.

குடவாசல் பேரூராட்சி செயல் அலுவலர் பரமேஸ்வரி கூறுகையில், மகளிர் சுய உதவிக் குழுவினர் மூலமாக 250 வீடுகளுக்கு ஒருவர் என்கிற அடிப்படையில் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்த பணி கடந்த 3 மாத காலமாக நடைபெற்று வருகிறது. வீடு, வீடாக குப்பைகளை கையாள்வது குறித்து மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் பேரூராட்சி பணியாளர்களைக் கொண்டு ஏற்கனவே விழிப்புணர்வு ஏற்படுத்தி இருந்தாலும், பொதுமக்கள் அதனை பின்பற்றுவதில்லை. கூடுதல் விழிப்புணர்வு தேவை என்பதால் ஓரிரு நாட்களில், விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை செய்யவுள்ளோம். முதல் கட்டமாக அனைத்து நீர்நிலைகளிலும் உள்ள குப்பைகள் அகற்றப்படும் என தெரிவித்தார்.

The post குடவாசல் பேரூராட்சி பகுதியில் நீர் நிலைகளில் கொட்டப்படும் குப்பைகளால் சீர்கேடு appeared first on Dinakaran.

Tags : Gudavasal municipality ,Valangaiman ,Kudavasal ,Dinakaran ,
× RELATED ஆதிச்சமங்களம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி அமைப்பு