×

மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் 487 மாணவர்களுக்கு ₹40.71 கோடி கல்வி கடன்

*அமைச்சர் சக்கரபாணி தகவல்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் 487 மாணவர்களுக்கு ரூ.40.71 கேடி கல்வி கடன் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று, சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், குழந்தைநேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், மாநிலத்தில் உள்ள 34 மாவட்டங்களில் ரூ.155.42 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 1000 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி வகுப்பறை கட்டிடங்களை இரண்டாம் கட்டமாக திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, மாவட்ட கலெக்டர் சரயு, செல்லக்குமார் எம்பி, எம்எல்ஏக்கள் பிரகாஷ், மதியழகன் முன்னிலையில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.62 லட்த்து 80 ஆயிரம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள 2 வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது: பர்கூர் ஊராட்சி ஒன்றியம் மல்லப்பாடி ஊராட்சி மரிமானப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, குழந்தைகள் நேய பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ், ரூ.30 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள இரண்டு வகுப்பறை கட்டிடங்கள், ஓசூர் ஊராட்சி ஒன்றியம் சேகவானப்பள்ளி மற்றும் கொடியாளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் ரூ.62 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள இரண்டு வகுப்பறை கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டது.

மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், குழந்தை நோய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ, பர்கூர் ஊராட்சி ஒன்றியம் மரிமானப்பள்ளி, ஓசூர் ஊராட்சி ஒன்றியம் ஈச்சங்கூர், கோபனப்பள்ளி, சேவகானப்பள்ளி, கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியம் பைரமங்கலம், குந்துமாரனப்பள்ளி, ராயக்கோட்டை, காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம் கோட்டப்பட்டி, நெடுங்கல், வாடமங்கலம், தளி ஊராட்சி ஒன்றியம் ஜவளகிரி, கெம்பட்டி, மருதனப்பள்ளி, சாரகப்பள்ளி, ஊத்தரங்கரை ஊராட்சி ஒன்றியம் காரப்பட்டி, திருவனப்பட்டி ஆகிய இடங்களில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ரூ.5 கோடியே 92 லட்சத்து 22 ஆயிரம் மதிப்பில் 36 வகுப்பறைகள் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு இணையாக அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் மிகவும் நேர்த்தியாக இரண்டு வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளது. வரும் காலங்களில் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களின் நலனிற்காக 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டம், உயர்கல்வி பயிலும் கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக மாணவர்கள் உயர்கல்வி கற்பதற்கு பணம் ஒரு தடையாக இருக்க கூடாது என்பதற்காக அனைவருக்கும் கல்விக்கடன் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மாபெரும் கல்விக் கடன் முகம்கள் நடத்தப்பட வேண்டும் என ஆணையிட்டுள்ளார். அதன்படி, இன்று நடந்த கல்வி கடன் வழங்கும் முகாமில் 41 மாணவர்களுக்கு ரூ.3 கோடியே 45 லட்சம் கல்வி கடன் வழங்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்குவது தொடர்பாக கடந்த இரு மாதங்களாக வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் வங்கி அலுவலர்களால் அனைத்து கல்லூரிகளிலும் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. நடப்பு நிதியாண்டில் இம்மாவட்டத்தில் 487 மாணவர்களுக்கு ரூ.40.71 கோடி கல்வி கடன் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் கடந்த நவம்பர் 1ம் தேதி முதல் கல்வி கடன் வழங்கும் முகாம் மூலம் இதுவரை 130 மாணவர்களுக்கு ரூ.10.42 கோடி கல்வி கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இணையதளம் வாயிலாக கல்விக்கடன் கோரி விண்ணப்பித்த 340 மாணவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. எனவே, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் தமிழ்நாடு அரசு மூலம் செயல்படுத்தி வரும் திட்டங்களை பயன்படுத்தி நல்ல முறையில் கல்வி கற்று சிறந்து விளங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், அரசு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிறப்படுத்தப்பட்டோர் நல பள்ளி, கல்லூரி மற்றும் அதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த 3896 மாணவ, மாணவிகளுக்கு ரூ.10லட்சம் மதிப்பிலான பாய், போர்வை மற்றும் தலையணைகளை அமைச்சர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், கூடுதல் கலெக்டர் வந்தனாகார்க், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) புஷ்பா, கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் (பொ) சுந்தரராஜன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், கிருஷ்ணகிரி நகர்மன்ற தலைவர் பரிதாநவாப், துணை தலைவர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, பர்கூர் பேரூராட்சி தலைவர் சந்தோஷ், ஓசூர் ஒன்றிய குழு தலைவர் சசிவெங்கடேசன், முன்னாள் எம்எல்ஏ முருகன், பிடிஏ தலைவர் நவாப் மற்றும் நிர்வாகிகள் தட்ரஅள்ளி நாகராஜ், கதிரவன், அன்பரசன், கேவிஎஸ்.சீனிவாசன், ராஜேந்திரன், அறிஞர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் 487 மாணவர்களுக்கு ₹40.71 கோடி கல்வி கடன் appeared first on Dinakaran.

Tags : Minister Chakrapani ,Krishnagiri ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும்...