×

தர்மபுரி மாவட்டத்தில் ரூ.13.45 கோடி மதிப்பில் 92 புதிய வகுப்பறை கட்டிடங்கள்

தர்மபுரி : சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், ஊரக வளர்ச்சி துறை சார்பில், தர்மபுரி மாவட்டத்தில் ரூ.13.45 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 92 புதிய வகுப்பறை கட்டிடங்கள், அங்கன்வாடி மையங்கள், ஊராட்சி மன்றக் கட்டிடங்கள், உணவு தானிய கிடங்குகள், ரேஷன் கடைகள், மகளிர் சுயஉதவிக்குழு கட்டிடங்கள் ஆகியவற்றை காணொலி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், குழந்தைநேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.155.42 கோடி மதிப்பீட்டில் கட்டிய, 1000 புதிய வகுப்பறை கட்டிடங்கள், மாநிலத்தின் 21 மாவட்டங்களில் ரூ.20.54 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 50 கிராம ஊராட்சி செயலக கட்டிடங்கள்.
அனைத்து மாவட்டங்களிலும் ரூ.24.39 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 102 ஊராட்சி மன்ற கட்டிடங்கள் மற்றும் ரூ.15.46 கோடி மதிப்பில் கட்டிய 5 ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடங்களின் திறப்பு விழா காணொலிக் காட்சி மூலம் நேற்று நடந்தது.

முதல்வர் மு.க ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக, இந்த புதிய கட்டிடங்களை பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். அதன்படி தர்மபுரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ரூ.6.01 கோடி மதிப்பீட்டில், 51 புதிய அங்கன்வாடி மையங்கள், ரூ.2.14 கோடி மதிப்பீட்டில், 9 புதிய ஊராட்சி மன்ற கட்டிடங்கள், ரூ.1.37 கோடி மதிப்பீட்டில் 8 புதிய உணவு தானிய கிடங்குகள், ரூ.1.67 கோடி மதிப்பீட்டில் 16 ரேஷன் கடைகள், ரூ.9.60 லட்சம் மதிப்பீட்டில் மகளிர் சுயஉதவிக்குழு கட்டிடங்கள், ரூ.2.16 கோடி மதிப்பீட்டில் 7 புதிய வகுப்பறை கட்டடங்கள் என மொத்தம் ரூ.13.45 கோடி மதிப்பிலான 92 புதிய கட்டிடங்களை முதல்வர் மு.க ஸ்டாலின், காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

தொடர்ந்து நல்லம்பள்ளி ஒன்றியம், மாதேமங்கலம் ஊராட்சியில் ரூ.14.31 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தில், மாவட்ட கலெக்டர் சாந்தி குத்துவிளக்கேற்றி வைத்தார். பின்னர் அவர், ஏமகுட்டியூர் ரேஷன் கடையை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் தரம் குறிந்து கேட்டறிந்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூகநல அலுவலர் பவித்ரா, நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகம், உதவி பொறியாளர் சுகுணா, மாதேமங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் சங்கர், துணைத்தலைவர் மகாலட்சுமி, வார்டு உறுப்பினர் கஸ்தூரி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

The post தர்மபுரி மாவட்டத்தில் ரூ.13.45 கோடி மதிப்பில் 92 புதிய வகுப்பறை கட்டிடங்கள் appeared first on Dinakaran.

Tags : Dharmapuri district ,Dharmapuri ,Chennai Chief Secretariat ,Tamil Nadu ,Chief Minister ,M.K. Stalin ,Rural Development Department ,Dinakaran ,
× RELATED தர்மபுரி அருகே மாஜி ராணுவ வீரர் மர்மச்சாவு உடலை மீட்டு விசாரணை