×

ஆத்ம நிம்மதிக்கு ஆருத்ரா தரிசனம்

27-12-2023

இந்து மதத்தின் இரண்டு பெரும் பிரிவுகளாக சைவமும் வைணவமும் பல விஷயங்களில் ஒற்றுமையாக இருக்கும். இது பல விஷயங்களில் வெளிப்படுகின்ற சிறப்பு. பெரும்பாலான நட்சத்திரங்களும் மாதங்களும், திருவிழாக்களும் இரண்டின் சிறப்பையும் சொல்வதாகவே அமைந்திருக்கும். உதாரணமாக இந்த மார்கழி மாதம். வைணவர்களுக்கு உரிய மாதம். சைவர்களுக்கும் உரிய மாதம். அவர்கள் திருப்பாவை சொல்லுவார்கள். சைவர்கள் திருவெம்பாவையைச் சொல்லுவார்கள். அவர்களுக்கு இதே மாதத்தில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா வரும். சைவர்களுக்கு மார்கழி தரிசன திருவிழா வரும்.

திருவாதிரை திருநாள்: நட்சத்திரங்களிலே இரண்டு நட்சத்திரங்கள் `திரு’ என்கிற அடைமொழியோடு சேரும். ஒன்று திருவோணம். இரண்டு திருவாதிரை. மார்கழி மாதம் பௌர்ணமியோடு, திருவாதிரை நட்சத்திரம்கூடி வரும் நாளன்று ‘திருவாதிரை’ திருவிழா ‘ஆருத்ரா தரிசனம்’ திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரம் ‘திருவாதிரை’. ஆருத்ரா என்ற வடமொழி சொல் தமிழில் ‘ஆதிரை’ என்று அழைக்கப்படுகிறது.

அதோடு திரு என்ற அடைமொழி சேர்த்து ‘திருவாதிரை’ என்று சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். திருவாதிரை அன்று நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறும். இந்த ஆனந்தத் திருநாளில் ஆனந்தத்தாண்டவம் ஆடும் நடராஜப் பெருமானை சிதம்பரத்திற்குச் சென்று தரிசிப்பது முக்தியைத் தரும். பதஞ்சலி முனிவர் இந்த ஆடல் வல்லானின் திவ்ய தரிசனத்தை காண பல ஆண்டுகளாகத் தவம் செய்தார், தவம் நிறைவு பெறும் காலம் வந்தது. சிவபெருமான் தோன்றி திருக்காட்சி அளித்தார்.

அவரை நமஸ்காரம் செய்து வணங்கினார் பதஞ்சலி முனிவர். சிவபெருமான் அவரிடம் நீ என்னைத் தவம் செய்த நோக்கம் போலவே, வியாக்ரபாதரும் என்னை நோக்கித் தவம் செய்து காத்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் இருவரும் தில்லை வருவீர்களாக! உங்களுக்கு யாம் திருத்தாண்டவ திருக்காட்சியைக் காட்டி அருளுவோம் என்று கூறிவிட்டு மறைந்தார். பதஞ்சலி மற்றும் வியாக்ரபாத முனிவர் இருவரும் சிதம்பரம் தில்லை நட ராஜர் கோயிலுக்கு வந்து சேர்ந்தார்கள்.

இந்த உலகமானது நிலம், நீர், காற்று, ஆகாயம் மற்றும் நெருப்புகளால் ஆனது. அவை அனைத்துக்கும் ஆதாரமாக இருப்பது எம்பிரான் சிவபெருமானின் ஆனந்த நடனம்தான். ஒரு காலத்தில், திரேதாயுகா என்ற பெண் பார்வதி தேவியின் தீவிர பக்தையாக இருந்தாள். திரேதாயுகாவுக்குத் திருமணம் நடந்தது. அக்காலத்தில் திருமணமான நான்காவது நாளில்தான் சாந்தி முகூர்த்தம் நடக்கும்.

ஆனால், திருமணமான மூன்றாவது நாளிலேயே திரேதாயுகாவின் கணவன் இறந்துவிட்டான். திரேதாயுகா அலறித் துடித்து பார்வதிதேவியே உன் பக்தையான என்னை இப்படி சோதிக்கலாமா, உன்னை இவ்வளவு காலம் வணங்கி என்ன பயன் என்று கூறிக் கதறி அழுதாள். அப்போது கயிலாயத்தில் சிவன் அருகில் அமர்ந்திருந்த பார்வதி, திரேதாயுகாவின் அலறலைக் கேட்டு அவள் கணவனுக்கு உயிர்ப் பிச்சையளிக்க சபதம் செய்தாள். அவளது சபதத்தைக் கேட்டு அதிர்ந்துபோன சிவன் உடனே எமலோகத்தை ஒரு பார்வை பார்த்தார். இதைக் கண்டு பதறிப்போன எமன் திரேதாயுகாவின் கணவனுக்கு மீண்டும் உயிர் கொடுத்தார்.

அதன்பின் பார்வதியும் பரமசிவனும் திரேதாயுகாவுக்கும், அவள் கணவனுக்கும் தரிசனகாட்சி கொடுத்து ஆசீர்வதித்தார்கள். இந்த நிகழ்ச்சி ஒரு மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் நடந்தது. இந்த தரிசனத்துக்கு ஆருத்ரா தரிசனம் என்று பெயர் ஏற்பட்டது. இன்னொரு கதையும் உண்டு. தாருகாவனத்து முனிவர்கள் சிவபெருமானை எதிர்த்து ஒரு வேள்வி நடத்தினர். சிவபெருமானை அழிப்பதற்காக அவர்கள் வேள்வித்தீயில் மதயானை மான் முயலகன் தீப்பிழம்பு ஆகியவற்றை தருவித்து சிவபெருமான் மீது ஏவி விட்டார்கள் அந்த சிவபெருமான் மதயானையைக் கொன்று அதன் தோலை உடுத்திக் கொண்டார். மான் உடுக்கை அக்னி அனைத்தையும் தானே தன் கையில் ஏந்திக் கொண்டார்.

முயலகன் மேல் வலது காலை ஊன்றி இடது காலைத் தூக்கியபடி நடனமாடி முனிவர்களுக்கு, தான் யார் என்கிற உண்மையை அறியச்செய்தார். இது நடந்தது மார்கழி மாதம். திருவாதிரை நாள் அன்று. இதுவே ஆருத்ரா தரிசனம் என்றும் ஒரு கதை உண்டு. இறைவன் அசைவதால்தான் உலகமே அசைகிறது. ‘நான் அசைந்தால் அசையும் அகிலம் எல்லாமே’ என்பதைப்போல் எம்பிரானின் நடனம்தான் உலகை வாழ்விக்கிறது. நடராஜரின் நடனம் மட்டும் மொத்தம் 108. இதில் சிவபெருமான் மட்டும் தனித்து ஆடியது 48.

அங்கு இரண்டு முனிவர்களும் எம்பிரான் சிவபெருமானின் நடராஜரின் ஆனந்தத் தாண்டவத்தைக் கண்டு மகிழ்ந்தார்கள். மார்கழி திருவாதிரையான அன்று எம்பிரான் ஆடல்வல்லான் நடராஜரின் தரிசனத்தைக் கண்டால் தீராத நோய்களும், பாவங்களும் விலகும். தில்லையில் சிவபெருமானின் நடனத்தைப் பார்க்க முக்தி கிடைக்கும். இதே திருவிழாவில்தான் எளிய பக்தனான சேந்தனாரின் பக்தியை வெளிப்படுத்த அவர் ஆக்கித்தந்த எளிமையான களி பிரசாதத்தை ஏற்றுக்கொண்டான்.

அவர் பல்லாண்டு கேட்டுவிட்டே என் தேர் நகரும் என்றான், எம்பிரான் அடியவர்கள் மீது வைத்திருந்த கருணை. இதன் காரணமாக திருவாதிரை அன்று களி உண்ண வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அன்றைய தினத்தில் ஆடல்வல்லானின் அனைத்துத் திருத்தலங்களிலும் களி படைக்கப்படுகிறது. அதனால்தான் ‘திருவாதிரை அன்று ஒருவாய்க்களி’ பழமொழி வந்தது. ஆதிரை முதல்வனுக்கு களி செய்து வணங்கி அவரின் திருவடியை அடைவோமாக!

திருவாதிரைக் களி செய்வது எப்படி?

தேவையானவை

அரிசி ஒரு கப், பொடித்த வெல்லம் ஒன்றரை கப், தண்ணீர் இரண்டரை கப், கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு தலா ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் ஒரு கப் முந்திரி, ஏலக்காய்த்தூள், நெய் சிறிதளவு.

செய்முறை

அரிசி, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பை தனித் தனியாக வறுத்துக் கொள்ளவும். அரிசியை ரவை போல் உடைத்துக் கொள்ளவும். அரிசி ரவையில் தண்ணீர் தெளித்துப் பிசிறி, ஆவியில் வேகவைக்கவும். கடலைப்பருப்பு, பாசிப்பருப்புடன் நீர் சேர்த்து, குக்கரில் வைத்து 2 விசில் வந்ததும் இறக்கவும். வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்துக் காய வைத்து வடிகட்டி, கொதிக்கவிடவும். கொதிக்கும் பாகில் அரிசி ரவை, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, தேங்காய் துருவல் சேர்த்து, கொஞ்சம் நெய்விட்டு கிளறவும். இது வெந்ததும், நெய்யில் முந்திரியை வறுத்து சேர்த்து, ஏலக்காய்த்தூளை தூவிக் கலந்து இறக்கவும். இதைத் திருவாதிரை அன்று சிவபெருமானுக்கு உபவாசம் இருந்து, களியைப் படைத்துவிட்டுப் பின்புதான் உண்ண வேண்டும்.

திருஉத்திரகோசமங்கை

முதன் முதலில் ஆருத்ராதரிசனம் கொண்டாடப்பட்ட தலம் எது தெரியுமா?. ‘திருஉத்திரகோசமங்கை’ இங்குதான் முதன்முதலில் ஆருத்ரா தரிசனம் கொண்டாடப்பட்டது. நவரத்தினங்களில் ஒன்றான பச்சை மரகதம் இயற்கையாகவே மென்மையானது. ஒலி, ஒளி அதிர்வுகளைத் தாங்க முடியாத தன்மை கொண்டது. ‘மத்தளம் முழங்க மரகதம் உடைபடும்’ என்ற சொல்லிற்கு ஏற்ப, ஒலி ஒளி அதிர்வுகளில் இருந்து இந்த சிலையைப் பாதுகாக்கிறார்கள். ஆண்டுக்கு ஒருமுறை திருவாதிரை திருநாளில் மட்டும் பக்தர்களின் தரிசனத்திற்காக சந்தனம் களையப்பட்டு அன்று இரவே மீண்டும் சந்தனம் பூசுவது வழக்கமாக இருக்கிறது. இன்றைய தினம் திருஉத்திரகோசமங்கையில் சந்தனம் களையப்பட்ட நிலையில் மரகத நடராஜரைத் தரிசனம் பண்ணலாம்.

ஆருத்ரா தரிசனம் முன்னிட்டு காலை 32 வகையான அபிஷேகங்கள் செய்யப்படும். 32 வகையான அபிஷேகம் முடிந்ததும் தீபாராதனை நடைபெறும். அதன்பின் வேறு எங்குமே நடைபெறாத வகையில் சிறப்பாக ஒன்று நடைபெறும். அது என்னவெனில்? 32 வகையான அபிஷேகம் செய்ததும் சுவாமிக்கு பசி எடுத்து விடுமாம். இதனால் சுவாமிக்கு முதலில் நைவேத்தியம் சமர்ப்பிக்கிறார்கள். அதன்பின்பு அலங்காரம் நடைபெறும்.

பஞ்சபூத ஸ்தலங்களுக்கு யாத்திரை செல்பவர்கள் முதலில் சிதம்பரம், அடுத்து காளகஸ்தி, அடுத்து திருவண்ணாமலை, அடுத்து திருவானைக்கோவில், அடுத்து காஞ்சிபுரம், அல்லது திருவாரூர் என முடிக்க வேண்டும். ஆருத்ரா தரிசனம் அன்று களி மற்றும் ஏழு கறி கூட்டு செய்து நடராஜப் பெருமானுக்கு நிவேதனம் சமர்ப்பித்து சிவ ஸ்தோத்திரங்களை கூறவேண்டும். நோன்பு மேற்கொண்டு இருப்பவர்கள் மார்கழித் திருவாதிரையில் நோன்பைத் தொடங்கி ஒவ்வொரு மாதமும் திருவாதிரை நட்சத்திரம் அன்று நோன்பு மேற்கொண்டு ஒரு வருட காலத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். இதன் மூலம் பாவங்கள் தொலைந்து நல் வாழ்வுகிட்டும்.

தொகுப்பு: விஜயலட்சுமி

The post ஆத்ம நிம்மதிக்கு ஆருத்ரா தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Saivism ,Vaishnavism ,Hinduism ,
× RELATED சரணம்… சரணம்… சரணம் காணும் சரணாலய புகலூர்