×

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ரூ.149 கோடி மதிப்பில் நலத்திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னை, கலைவாணர் அரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் கல்வி, சுயதொழில், உட்கட்டமைப்பு மேம்பாடு பன்முகச் சிறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ₹149 கோடி மதிப்பில் நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ரூ.32.95 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடங்கள், விடுதிகள் மற்றும் சமுதாயநலக்கூடத்தை திறந்து வைத்து, ரூ.138 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள விடுதிகள் மற்றும் கற்றல் கற்பித்தல் அறைகளுக்கு அடிக்கல் நாட்டினார். நிலமற்றோருக்கு விவசாய நிலம் வாங்க தாட்கோ மூலம் ₹10 கோடி மானியத்துடன் கடன் உதவி வழங்கியதுடன் தூய்மைப் பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்கள் மற்றும் இருளர் பழங்குடியினருக்கு 943 புதிய வீடுகளை வழங்கினார். பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் 776 பயனாளிகளுக்கு ₹62 கோடி மதிப்பிலான உதவிகள் மற்றும் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன், ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் க. லட்சுமி பிரியா, இ.ஆ.ப, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் உமதிவாணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ரூ.149 கோடி மதிப்பில் நலத்திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Adi Dravidar and ,Tribal Welfare Department ,Chennai ,Adi Dravidar and Tribal Welfare Department ,Kalaivanar Arena ,Dinakaran ,
× RELATED டாப்-10 தரவரிசையில் நுழைந்த செஸ் வீரர்...