×

இந்திய சமூகநீதிப் போரில் முதல் களம் வைக்கம் போராட்டம் நூற்றாண்டு சிறப்பு விழா; தமிழ்நாடு, கேரள முதல்வர்கள் பங்கேற்பு

சென்னை: சென்னை வர்த்தக மையத்தில் நாளை (28.12.2023) இந்திய சமூகநீதிப் போரில் முதல் களம் வைக்கம் போராட்டம் நூற்றாண்டு சிறப்பு விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

கேரள மாநிலம் வைக்கத்தில் மகாதேவர் கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் தாழ்த்தப்பட்டவர்கள் நடந்து செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து, 1924-ஆம் ஆண்டு அங்கு மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்ட நிலையில் போராட்டம் தொடர்ந்து நடைபெற முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது, கேரள போராட்டத் தலைவர்கள் தந்தை பெரியார் அவர்களுக்கு கடிதம் எழுதி, இந்தப் போராட்டத்திற்கு நீங்கள் வந்துதான் உயிர்கொடுக்க வேண்டும், உடனே புறப்பட்டு வாருங்கள் என்று கோரினர். கடிதம் கிடைத்ததும், உடனே, தந்தை பெரியார் அவர்கள் தமிழ்நாட்டிலிருந்து புறப்பட்டு வந்து. வைக்கம் போராட்டத்தை தலைமையேற்று நடத்தி மக்களிடையே மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தினார். போராட்டம் தீவிரமடைந்தது. மக்கள் திரண்டு போராட்டத்திற்கு ஆதரவு அளித்தனர்.

அதனால் தந்தை பெரியார் அவர்கள் இரண்டு முறை கைது செய்யப்பட்டார்கள். முதல் முறை ஒரு மாதமும், இரண்டாம் முறை ஆறு மாதமும் அவருக்கு தண்டனை அளிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் கால்களிலும், கைகளிலும் சங்கிலியால் பிணைக்கப்பட்டு அவர் சிரமப்படுத்தப்பட்டார். இடையில் திருவாங்கூர் மகாராஜா இயற்கை எய்திடவே, ராணியார் அனைவரையும் விடுதலை செய்தார். தந்தை பெரியாருடன் சமாதானம் நடைபெற்று, வைக்கம் தெருவில் நடக்கக்கூடாது என்ற தடையை ராணி நீக்கினார். இதனால், தந்தை பெரியார் அவர்களின் போராட்டம் மகத்தான வெற்றியில் முடிந்து வைக்கம் வீரர் என்று அழைக்கப்பட்டார்.

இந்தியாவில் சமூக அளவில் சாதி காரணமாக நிலவிய ஏற்றத் தாழ்வுகளை ஒழித்திட நடைபெற்ற முதல் போராட்டம் இந்த வைக்கம் போராட்டம் ஆகும். இந்தப் போராட்ட வெற்றியின் 100-ஆம் ஆண்டினை குறிக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் 110-விதியின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அந்த அறிவிப்புகளின் தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசின் சார்பில் வைக்கம் போராட்டம் நூற்றாண்டு சிறப்பு விழா 28.12.2023 அன்று வியாழன் காலை 11.15 மணியளவில் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும்.

இந்த விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வைக்கம் போராட்டம் நூற்றாண்டு மலரை வெளியிட்டு விழாப் பேருரை நிகழ்த்துகிறார்கள். கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் பெரியாரும் வைக்கம் போராட்டமும்” என்ற நூலை வெளியிட்டு முன்னிலையுரை ஆற்றுகிறார்கள். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி விழாச் சிறப்புரையாற்றுகிறார்கள். இவ்விழாவின்போது செய்தி மக்கள் தொடர்புத்துறை தயாரித்துள்ள வைக்கம் போராட்டம் குறித்த ஆவணப்படம் திரையிடப்பட உள்ளது. மேலும், பள்ளி மாணவர்கள் சார்பில் சமத்துவக் கொண்டாட்டம் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

The post இந்திய சமூகநீதிப் போரில் முதல் களம் வைக்கம் போராட்டம் நூற்றாண்டு சிறப்பு விழா; தமிழ்நாடு, கேரள முதல்வர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : First Field Fight Centennial Special Ceremony in ,Indian War of Social Justice ,Tamil Nadu ,Kerala ,Chennai ,Indian social justice war ,Chennai Trade Centre ,First Field Sikam Struggle Centennial Special Festival ,Indian War for Social Justice ,Tamil Nadu, ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...