×

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் 7 நாட்கள் ஜாமினில் விடுவிப்பு!

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் நேற்று மாலை கைது செய்யப்பட்டார். மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட ஜெகநாதன், 7 நாட்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

சேலம் அருகே பெரியார் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இதில் துணை வேந்தராக ஜெகநாதன் இருந்து வருகிறார்.பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மற்றும் முக்கிய நிர்வாகிகளை இயக்குநர்களாக கொண்ட, பூட்டர் பவுண்டேசன் என்ற கல்வி நிறுவனத்தை தொடங்க, சிண்டிகேட் கூட்டத்தில் ஒப்புதலுக்காக வைக்கப்பட்டது.

இந்நிறுவனம் தன்னிச்சையாக செயல்படுத்துப்படுவதுடன், பல்கலைக்கழக வளங்களை அவர்களுக்கு தாரைவார்ப்பதாக சர்ச்சை எழுந்தது. பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக் கொண்டே, துணைவேந்தர் மேற்கொண்ட இந்த நடவடிக்கை, பல்கலைக்கழக சாசன விதிகளுக்கும், அரசு விதிகளுக்கும் எதிரானது என பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில், பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகரும், முன்னாள் பேராசிரியருமான இளங்கோவன் (73) என்பவர், சேலம் மாநகர போலீஸ் கமிஷனருக்கு புகார் ஒன்றை அனுப்பினார். அதில், ‘சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருகிறது. பல்கலைக்கழக நிர்வாகம் சரிவர இயங்கவில்லை. சிண்டிகேட் அனுமதியில்லாமல், துணைவேந்தர் சமீபத்தில் தொடங்கிய நிறுவனத்தில், பெரியார் பல்கலைக்கழக நிதியை முதலீடு செய்துள்ளார். இதனால், பல்கலைக்கழகத்திற்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, சாதி ரீதியாகவும், ஆபாசமாகவும் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்திருந்தார். இதனையடுத்து இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க, சூரமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் நிலவழகனுக்கு, கமிஷனர் விஜயகுமாரி உத்தரவிட்டார்.

இதன்பேரில் இன்ஸ்பெக்டர் மனோன்மணி, பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனை, கருப்பூர் போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார். பின்னர் துணைவேந்தர் மீது பணமோசடி, ஆபாசமாக பேசுதல், சாதி பெயரைக்கூறி திட்டியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நேற்று மாலை அவர் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து பல்கலைக்கழக துணைவேந்தர் சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் காவல்துறையினரின் பாதுகாப்புடன் மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆஜர்படுத்தப்பட்டார்.

அங்கு இரண்டு தரப்பிலும் வாதம் வைக்கப்பட்டது. இதையடுத்து பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. 7 நாட்களுக்கு சூரமங்கலம் காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வென்று என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

The post சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் 7 நாட்கள் ஜாமினில் விடுவிப்பு! appeared first on Dinakaran.

Tags : SALEM PERIYAR UNIVERSITY VICE ,JEKANATHAN ,Salem ,Salem Periyar University ,Vice Chancellor ,Jehanathan ,Dinakaran ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...