×

நள்ளிரவில் ஏற்பட்ட வாயுக் கசிவால் மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது: அமைச்சர் மெய்யநாதன்

சென்னை: வாயுக்கசிவு ஏற்பட்ட கோரமண்டல் ஆலையின் செயல்பாடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது எனவும் நள்ளிரவில் ஏற்பட்ட வாயுக் கசிவால் மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

சென்னை எண்ணூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான உர தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த ஆலை கடற்கரையிலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு குழாய் பதிக்கப்பட்டுள்ளது. கடலுக்குள் அடியில் 500 மீட்டர் ஆழத்தில் இந்த குழாய் உள்ளது. கப்பல்களில் மூலம் திரவ அமோனியா ரசாயனம் கொண்டு வரப்பட்டு கிடங்கில் சேமிக்கப்படுகிறது.

இதையடுத்து நேற்று கடலுக்கடியில் உள்ள குழாய்களில் விரிசல் ஏற்பட்டு அமோனியா திரவம் கடலில் கலந்து காற்றில் பரவியதால் சின்னகுப்பம், பெரிய குப்பம், நேதாஜி நகர், பர்மா நகர் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மூச்சுத்திணறல், மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் நள்ளிரவு வேறு இடங்களுக்கு வெளியேறினர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு முதாய நலக் கூடங்கள், தேவாலயங்களில் தங்க வைத்தனர். மூச்சுத்திணறலால் 30க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து கோரமண்டல் நிறுவனத்தை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் சென்னை எண்ணூரில் அம்மோனியா வாயுக் கசிவை அடுத்து கோரமண்டல் ஆலையை தற்காலிகமாக மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் “வாயுக்கசிவு ஏற்பட்ட கோரமண்டல் ஆலையின் செயல்பாடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசால் அமைக்கப்பட்ட குழு ஆலையில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும். நள்ளிரவில் ஏற்பட்ட வாயுக் கசிவால் மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலினை பொறுத்தவரை மக்களின் சுற்றுசூழலை பாதுகாப்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார். அதனடிப்படையில் மக்களின் சுகாதார பாதுகாப்பு, இயற்கை பாதுகாப்பு என இரண்டையும் கருத்தில் கொண்டு இதுபோன்ற சம்பவம் நிகழாதவாறு ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்படும்” என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

The post நள்ளிரவில் ஏற்பட்ட வாயுக் கசிவால் மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது: அமைச்சர் மெய்யநாதன் appeared first on Dinakaran.

Tags : Minister ,Meiyanathan ,Chennai ,Coromandel ,
× RELATED காவேரி கூக்குரல் சார்பில் ஒரே நாளில் 4...