×

காங். தலைவர் கார்கே காட்டம் வெள்ள நிவாரணம் தராமல் பிரதமர் செல்பி பூத் வைப்பதா? மக்கள் வரிப் பணத்தை வீணாக்குவதாக கண்டனம்

புதுடெல்லி: மாநிலங்களுக்கு வறட்சி, வெள்ள நிவாரணம் தராமல், ரயில் நிலையங்களில் பிரதமரின் செல்பி பூத் அமைப்பதன் மூலம் மக்கள் வரிப்பணம் வீணாக்கப்படுவதாக மல்லிகார்ஜூன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘‘ரயில் நிலையங்களில் பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் செல்பி பூத் அமைப்பது, வரி செலுத்துவோர் பணத்தை தண்டமாக வீணடிக்கும் செயல். மோடி அரசு சுய விளம்பரம் தேடுவதற்கு எல்லையே இல்லை.

இதுபோன்ற 822 செல்பி பூத்களை நிறுவ ஆயுத படைகளுக்கு உத்தரவிட்டதன் மூலம் வீரர்களின் தியாகத்தை பாஜ அரசு அரசியல் ரீதியாக பயன்படுத்தி உள்ளது. மாநிலங்களுக்கு வறட்சி மற்றும் வெள்ள நிவாரணம் தரவில்லை. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு 100 நாள் வேலை திட்ட நிதி நிலுவையில் உள்ளது. ஆனால் இந்த மலிவான தேர்தல் ஸ்டண்ட்களுக்கு மட்டும் மக்கள் வரிப்பணத்தை தாராளமாக செலவழிக்கும் துணிச்சல் அவர்களுக்கு உள்ளது’’ என கடுமையாக தாக்கி உள்ளார்.

இத்துடன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் பெறப்பட்ட பதிலின் நகலையும் கார்கே இணைத்துள்ளார். அதில், பிரதமர் மோடியின் செல்பி பூத்கள் நிறுவப்பட்ட நிலையங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதில் ஏ பிரிவு நிலையங்களில் தற்காலிக செல்பி பூத் அமைக்க தலா ரூ. 1.25 லட்சமும், சி பிரிவு நிலையங்களில் நிரந்தர செல்பி பூத் அமைக்க தலா ரூ.6.25 லட்சமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

The post காங். தலைவர் கார்கே காட்டம் வெள்ள நிவாரணம் தராமல் பிரதமர் செல்பி பூத் வைப்பதா? மக்கள் வரிப் பணத்தை வீணாக்குவதாக கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Kong ,Selby Booth ,President Kharge ,New Delhi ,Congress ,Dinakaran ,
× RELATED மக்களிடம் பயமுறுத்தும் வகையில் பாஜ...