×

அதிநவீன ஆயுதங்கள், சென்சார் கொண்ட ஐஎன்எஸ் இம்பால் போர்க்கப்பல் இந்திய கடற்படையில் சேர்ப்பு: நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத் சிங்

மும்பை: கடல்சார் பாதுகாப்பில் இந்தியாவின் பலத்தை மேலும் அதிரிக்கும் வகையில், அதிநவீன ஆயுதங்கள், சென்சார்களை கொண்ட ஐஎன்எஸ் இம்பால் போர்க்கப்பல் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டது. ப்ராஜெக்ட் 15பி திட்டத்தின் கீழ், இந்திய கடற்படையின் வார்ஷிப் டிசைன் ப்யூரோவின் உள்நாட்டு வடிவமைப்புடனும் அதிநவீன அம்சங்களுடனும் ஐஎன்எஸ் இம்பால் ஏவுகணை அழிப்பு போர்க்கப்பல் பாதுகாப்பு துறையின் பொதுத்துறை நிறுவனமான மும்பையின் மசகான் கப்பல் கட்டும் தளத்தில் உருவாக்கப்பட்டது. பல்வேறு சோதனைகள் முடிந்து, ஐஎன்எஸ் இம்பால் போர்க்கப்பலை இந்திய கடற்படையில் இணைக்கும் நிகழ்ச்சி மும்பையில் நேற்று நடந்தது.

இதில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், கப்பலை கடற்படையில் இணைத்தார். அவருடன் கடற்படை தளபதி அட்மிரல் ஆர்.ஹரிகுமார், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 163 மீட்டர் நீளம், 7,400 டன் எடை கொண்ட இந்த கப்பல் 75 சதவீதம் உள்நாட்டு தளவாடங்களுடன் உருவாக்கப்பட்டது. இதில், நவீன கண்காணிப்பு ரேடார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் உள்ள அதிநவீன ஆயுதங்கள் சென்சார்கள், தரையிலிருந்து தரை இலக்கு தாக்கும் ஏவுகணைகளையும், வானிலிருந்து தரை இலக்கை தாக்கும் ஏவுகணையும், நீர்மூழ்கிக் கப்பலின் ஏவுகணைகளையும் சென்சார் மூலம் துல்லியமாக கண்டறிந்து அழிக்கும் திறன் கொண்டது.

மேலும், இந்த கப்பலில் இருந்து, வரம்பு நீட்டிக்கப்பட்ட பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையையும் ஏவ முடியும். அதோடு, அணு ஆயுதங்கள், உயிரி மற்றும் ரசாயன ஆயுதங்களையும் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. சமீபத்தில் அரபிக்கடல் பகுதியில் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த வணிக கப்பல் மீதும், செங்கடலில் இந்தியாவுக்கு வந்த வணிக கப்பல் மீது டிரோன் தாக்கல் நடத்தப்பட்டது. இந்த சூழலில் ஐஎன்எஸ் இம்பால் கடற்படையில் சேர்க்கப்பட்டதன் மூலம் இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பு பலம் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

* வடகிழக்கு மாநிலத்தின் பெயரில் முதல் கப்பல்
சுதந்திர போராட்டத்தில் மணிப்பூர் மக்களின் தியாகத்தை போற்றும் வகையில், அம்மாநிலத்தின் முக்கிய மாவட்டமான இம்பாலின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. போர்க்கப்பலுக்கு வடகிழக்கு மாநிலத்தில் உள்ள நகரின் பெயர் சூட்டப்பட்டிருப்பது இதுவே முதல் முறை. இதற்கான ஒப்புதல் கடந்த 2019ல் தரப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த 2017ல் இந்த கப்பல் கட்டும் பணி தொடங்கப்பட்டு 2019 ஏப்ரல் 20ல் வெள்ளோட்டம் விடப்பட்டது.

கடந்த ஏப்ரல் 28ல் முதல் கடல் பயிற்சியை வெற்றிகரமாக முடித்தது. அனைத்து சோதனைப் பணிகளும் முடிந்து கடந்த அக்டோபர் 20ல் கடற்படையிடம் வழங்கப்பட்டது. இதுவரை இவ்வளவு குறுகிய காலத்தில் எந்த போர்க்கப்பலும் தயாரிக்கப்பட்டதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

* ஆழ்கடலில் பதுங்கி இருந்தாலும் விடமாட்டோம்
நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், ‘‘அரபிக்கடலில் கெம் புளூட்டோ மற்றும் செங்கடலில் சாய்பாபா ஆகிய வணிக கப்பல் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தை அரசு தீவிரமாக விசாரிக்கிறது. கடற்படையும் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளது. இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ஆழ்கடலில் பதுங்கியிருந்தாலும் விடமாட்டோம். அவர்களை நீதியின் முன் நிறுத்துவோம்’’ என சூளுரைத்துள்ளார்.

The post அதிநவீன ஆயுதங்கள், சென்சார் கொண்ட ஐஎன்எஸ் இம்பால் போர்க்கப்பல் இந்திய கடற்படையில் சேர்ப்பு: நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத் சிங் appeared first on Dinakaran.

Tags : INS ,Indian Navy ,Rajnath Singh ,Mumbai ,India ,
× RELATED அமைச்சர் ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான...