×

செங்கல்பட்டு தொழுநோய் ஆராய்ச்சி மையத்திற்கு சொந்தமான 75 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பிலிருந்து ஒன்றிய அரசு விரைந்து மீட்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை: செங்கல்பட்டு தொழுநோய் ஆராய்ச்சி மருத்துவமனை மற்றும் மருத்துவனைக்கு சொந்தமான ரூ.60 கோடி மதிப்புள்ள 75 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பிலிருந்து விரைந்து மீட்குமாறு ஒன்றிய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் டாக்டர் அம்பேத்கர் சட்ட ஆதரவு அறக்கட்டளை சார்பில் டி.தமிழ்வாணன் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில், செங்கல்பட்டு மாவட்டம், திருமணியில் ஒன்றிய அரசுக்கு சொந்தமான தொழுநோய் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் உள்ளது. மருத்துவமனையுடன் கூடிய இந்த ஆராய்ச்சி மையத்திற்கு சுமார் 550 ஏக்கர் நிலம் திருமணி, ஆலப்பாக்கம், மேல்மணியூர் ஆகிய கிராமங்களில் உள்ளன.

அதில் சுமார் ரூ.60 கோடி மதிப்புள்ள 75 ஏக்கர் நிலத்தை ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றியவர்கள், உறவினர்கள் உள்ளிட்டோர் ஆக்கிரமித்து பல அடுக்கு வீடு உள்ளிட்ட கட்டிடங்களை கட்டியுள்ளனர். தற்போது, அந்த நிலங்களை விற்பனை செய்யவும் ஆக்கிரமிப்பாளர்கள் ஆரம்பித்துள்ளனர். இது குறித்து ஆண்டு தோறும் நடைபெறும் தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்படுகிறது. அதன்படி, ஆக்கிரமிப்பாளர்களுக்கு பெயரளவில் நோட்டீசும் அனுப்பப்படுகிறது. ஆனால், ஆக்கிரமிப்பை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குநர்கள், உயர் அதிகாரிகள், ஊழியர்கள் என்று பலர் பெருமளவு நிலத்தை ஆக்கிரமித்துள்ளதால் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. இதுகுறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட கமிட்டியும், விரிவாக விசாரித்து யார் யார் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர் என்ற அறிக்கையை கொடுத்துள்ளது. ஆக்கிரமிப்பை அகற்ற முற்பட்டால் ஆக்கிரமிப்பாளர்கள் போராட்டம் நடத்தி பிரச்னையை திசை திருப்பிவிடுகிறார்கள். எனவே, இந்த நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்தி, நிலத்தை மீட்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வால, நீதிபதி ஏ.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வக்கீல் ஜி.கிருஷ்ணமூர்த்தி ஆஜராகி வாதிட்டார். ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் எம்.சத்தியன், இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு உயர் மட்ட அதிகாரக் குழு ஒன்றை அமைக்கும்படி கடந்த பிப்ரவரி 23ம் தேதி ஒன்றிய அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது என்றார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆக்கிரமிப்புகளை அகற்ற இது சரியான தருணம். எனவே, இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற சட்டப்படியான நடவடிக்கையை ஒன்றிய அரசு விரைந்து எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

The post செங்கல்பட்டு தொழுநோய் ஆராய்ச்சி மையத்திற்கு சொந்தமான 75 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பிலிருந்து ஒன்றிய அரசு விரைந்து மீட்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Union Government ,Chengalpattu Leprosy Research Center ,Madras High Court ,Chennai ,Chengalpattu Leprosy Research Hospital ,
× RELATED கோமா நிலையில் உள்ள ஒருவரை கவனிப்பது...