×

பழவேற்காடு வைரவன்குப்பம் கடற்கரையில் 19ம் ஆண்டு சுனாமி தினம் அனுசரிப்பு: மெழுகுவர்த்தி ஏற்றி கண்ணீர் அஞ்சலி

பொன்னேரி: பழவேற்காடு வைரவன் குப்பம் கடற்கரையில், 19ம் ஆண்டு சுனாமி தினம் அனுசரிக்கப்பட்டது. மீனவ மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீருடன் கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினர். கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26 அன்று ஏற்பட்ட சுனாமியால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். உறவினர்களை பறிகொடுத்தவர்களின் துயரம் இன்னும் நீங்காமல் நீடிக்கிறது. இதை தொடர்ந்து, கடற்கரையில் சுனாமியால் இறந்தவர்களின் ஆத்மாக்களுக்கு ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. சுனாமி கோர தாண்டவம் ஆடிய தினம் நிகழ்ந்து 19 ஆண்டுகள் ஆகியும் இன்னும் ஆறாத வடுக்களாகவே பொதுமக்களை வாட்டி வருகிறது.

இந்நிலையில், பழவேற்காடு வைரவன் குப்பம் கடற்கரையில் நேற்று சுனாமியால் இறந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி செலுத்திய பிறகு கடலில் பால் ஊற்றியும், மலர் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது. இதில், வைரவன் குப்பம் கிராம நிர்வாகிகள், கூட்டுறவு சங்க தலைவர் ஞானமூர்த்தி, கிராம மக்கள் மற்றும் திருவள்ளூர் மாவட்ட பாரம்பரிய ஐக்கிய மீனவர் சங்க தலைவர் எத்திராஜ், பொதுச் செயலாளர் மகேந்திரன், செய்தி தொடர்பாளர் முத்து உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

திருவொற்றியூர்: திமுக மீனவரணி சார்பில் 19ம் ஆண்டு சுனாமி தின அனுசரிப்பு நிகழ்ச்சி, மாநில துணை தலைவர் கே.பி.சங்கர் எம்எல்ஏ தலைமையில், திருவொற்றியூர் கே.வி.கே.குப்பத்தில் நேற்று நடந்தது. இதில், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கலாநிதி வீராசாமி எம்பி, மாவட்ட செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ ஆகியோர் படவேட்டம்மன் ஆலயத்திலிருந்து ஊர்வலமாக வந்து கடலில் பால் ஊற்றி, மலர் தூவி, சுனாமியில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அப்போது, அங்கு திரண்ட உறவினர்கள், இறந்தவர்களின் புகைப்படங்களை வைத்து கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து பொதுமக்கள் 2 ஆயிரம் பேருக்கு திமுக சார்பில் அரிசி, மளிகைபொருட்கள், வேட்டி, சேலை போன்ற நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நிகழ்வில், கவுன்சிலர்கள் கே.பி.சொக்கலிங்கம், பானுமதி சந்தர், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் மதன் குமார், நிர்வாகிகள் ராமநாதன், பால உமாபதி, சைலஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஸ்ரீ சமத்துவ மக்கள் கழகம் சார்பில், அதன் நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன் தலைமையில் எர்ணாவூர் பாரதியார் நகர் பகுதி கடற்கரையில் நிர்வாகிகள் தங்கமுத்து, மதுரை வீரன், பாஸ்கர் மற்றும் 100க்கும் மேற்பட்டோர் சுனாமியால் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

The post பழவேற்காடு வைரவன்குப்பம் கடற்கரையில் 19ம் ஆண்டு சுனாமி தினம் அனுசரிப்பு: மெழுகுவர்த்தி ஏற்றி கண்ணீர் அஞ்சலி appeared first on Dinakaran.

Tags : 19th Tsunami Day ,Vairavankuppam Beach ,Palavekadu ,Ponneri ,Vairavan Kuppam beach ,
× RELATED எம்எல்ஏக்கள் டி.ஜெ.கோவிந்தராஜன்,...