×

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் ரூ.171 கோடி முடிவுற்ற திட்டப்பணிகள் முதல்வர் இன்று திறந்து வைக்கிறார்

சென்னை: சென்னை, கலைவாணர் அரங்கில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் இன்று நடைபெறவுள்ள விழாவில், ரூ.171 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை ஆகிய துறைகளின் சார்பில் மொத்தம் ரூ.184 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கவுள்ளார்.

கடலூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், விருதுநகர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 10 ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் ரூ.9.22 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டிடங்கள், அறிவியல் ஆய்வுக்கூடம், சுற்றுச்சுவர், கழிவறை மற்றும் குடிநீர் வசதி. திருவள்ளூர், காஞ்சிபுரம், தருமபுரி, விருதுநகர், சிவகங்கை, கிருஷ்ணகிரி, தஞ்சாவூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ரூ.19.84 கோடியில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான 9 விடுதிகள், திருப்பூர், ஈரோடு, மதுரை, தென்காசி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஆதிதிராவிடர் சமுதாய நலக்கூடங்கள் என ரூ.32.95 கோடியில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை திறந்து வைக்கவுள்ளார்.

அதேபோல் மதுரை, கோயம்புத்தூர், திருச்சி மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ரூ.100 கோடியில் 8 விடுதிக் கட்டடங்கள், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஆதிதிராவிடர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ரூ.28 கோடியில் 4 விடுதிக் கட்டிடங்கள், 16 மாவட்டங்களில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின கல்லூரி மாணவர்கள் விடுதிகளில்நவீன வசதிகளுடன் கட்டப்படவுள்ள 22 கற்றல் கற்பித்தல் அறைகள் என மொத்தம் ரூ.138 கோடியில் கட்டப்படவுள்ள விடுதிகள் மற்றும் கற்றல் கற்பித்தல் அறைகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சார்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய வீடற்ற 443 பழங்குடியின இருளர் குடும்பங்கள் பயன்பெறும் வகையில், காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய வட்டங்களில் ரூ.22.80 கோடியில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள 443 வீடுகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கவுள்ளார்.

The post ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் ரூ.171 கோடி முடிவுற்ற திட்டப்பணிகள் முதல்வர் இன்று திறந்து வைக்கிறார் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Adi Dravidian and Tribal Welfare Department ,Chennai ,Kalaiwanar Arena ,Adi Dravidar and ,Tribal Welfare Department ,Micro, Small and Medium Enterprises ,Dinakaran ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...