×

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணு 99வது பிறந்த நாள்: தலைவர்கள் வாழ்த்து

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவின் 99வது பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 99வது அமைப்பு தினத்தையொட்டி சென்னை தியாகராயநகரில் உள்ள மாநில தலைமை அலுவலகத்தில் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தலைமையில் கொடியேற்று விழா நடந்தது. மேலும் தமிழ்நாடு அரசின் தகைசால் தமிழர் விருது பெற்ற மூத்த தலைவர் இரா.நல்லகண்ணுக்கு 99-வது பிறந்த நாள் விழாவும் இணைந்து நடந்தது. கட்சி கொடியை இரா.நல்லகண்ணு ஏற்றி வைத்தார்.

நல்லக்கண்ணுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் வாழ்த்து கூறினார். மேலும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா, விசிக தலைவர் திருமாவளவன், வன்னியரசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன், செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங், மாநிலக்குழு உறுப்பினர் ராஜசேகர், நடிகர் சிவகுமார், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்பபட ஏராளமானோர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

நிறைவாக நல்லகண்ணு பேசுகையில், “அண்மையில் தமிழ்நாட்டில் பல மாவட்டங்கள் புயல், மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களில் பல பகுதிகள் தண்ணீரில் மூழ்கி மீட்கப்பட்டுள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நிவாரண நடவடிக்கைகளை விரைவாக மேற்கொண்டு வருவதை பாராட்டுகிறேன். பாஜ ஒன்றிய அரசு பேரிடர் கால நிவாரண நிதி வழங்காமல் தமிழ்நாடு அரசுக்கு எதிராக பேசுவது சரியல்ல. புயல், மழை, பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தேசிய பேரிடர் பாதிப்பாக அறிவிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு கேட்டுள்ள ரூ.21 ஆயிரம் கோடி நிதியை முழுமையாக வழங்க வேண்டும்” என்றார்.

* தகைசால் தமிழர் நல்லகண்ணு: முதல்வர் மு.க.ஸ்டாலின்
தகைசால் தமிழர் நல்லகண்ணு பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: 99வது பிறந்தநாள் கொண்டாடும் பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவர், எளிமையின் அடையாளமான தகைசால் தமிழர், தோழர் நல்லகண்ணு பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன். ஆங்கிலேய அடக்குமுறை ஆட்சியை நம் மண்ணில் இருந்து அகற்றப் போராடிய ஐயா நல்லகண்ணு, நமக்கெல்லாம் ஊக்கமாகவும் உறுதுணையாகவும் இருந்து என்றும் வழிநடத்திட வேண்டும்.

The post இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணு 99வது பிறந்த நாள்: தலைவர்கள் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Nallakannu ,Chennai ,Chief Minister ,M.K.Stalin ,Dinakaran ,
× RELATED மதவாத சக்திகளை முறியடித்து ஜனநாயக...