×

எண்ணூரில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஒன்றிய அரசு பார்வையிட வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்

திருவொற்றியூர்: மிக்ஜாம் புயல், கனமழையின்போது, புழல் ஏரி உபரி நீரில் கலந்து வந்த கச்சா எண்ணெய் கழிவுகளால் எண்ணூர் பகுதியில் உள்ள நெட்டுகுப்பம், தாழங்குப்பம், காட்டுகுப்பம் போன்ற பல கிராம மக்கள் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக, தோல் நோய், காய்ச்சல், சளி, இருமல் போன்ற பிரச்னையால் பலர் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு மாநகராட்சி மற்றும் சிபிசிஎல் நிறுவனம் சார்பில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில், எண்ணூர் பகுதியில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு, பசுமை தாயகம் அமைப்பு சார்பில் நேற்று மருத்துவ முகாம், சிவன்படை வீதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் நடந்தது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று, பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தார். அப்போது, எண்ணெய் படலத்தில் ஏற்பட்ட உபாதைகள் குறித்து கேட்டறிந்து ஆலோசனை, மருந்து, மாத்திரைகளை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: எண்ணூரில் மீனவர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எண்ணெயை முழுமையாக அகற்றி விட்டோம், சுத்தப்படுத்தி விட்டோம் என்று கூறுகிறார்கள். ஆனால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதற்கு யார் காரணம் என்று கண்டறிய வேண்டும். இதற்காக, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் தமிழக அரசு ஒரு ஆணையமும், குழுவும் அமைக்க வேண்டும். இங்குள்ள 25க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களில் 17 நிறுவனங்கள் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள். சில நிறுவனங்கள் மழை காலத்தில் தங்களது கழிவுகளை வேண்டுமென்றே தண்ணீரில் கலந்து விடுவார்கள். அதுபோல், இதுவும் நடந்ததா என சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். இந்த பகுதியை 2022ம் ஆண்டு பாதுகாக்கப்பட்ட சதுப்பு நில பகுதியாக அறிவிக்க வேண்டும் என பசுமை தீர்ப்பாயம் அறிவித்தது. ஆனால், இதுவரை எந்த அறிவிப்பும் அறிவிக்கப்படவில்லை.

கொசஸ்தலை ஆறு, அடையாறு ஆறு, கூவம் ஆறு, பள்ளிக்கரணை சதுப்பு நிலம் சென்னைக்கு கிடைத்த வரம். அதை பாதுகாக்க வேண்டும். மழைநீரில் எண்ணெய் கழிவுகளை கலந்தவர்களிடம் ரூ.1000 கோடி இழப்பீடு கேட்க வேண்டும். இனி வரும் காலங்களில் பெரும் புயல், வெள்ளம் அடிக்கடி சந்திக்க வேண்டி இருக்கும். இதையெல்லாம் தடுக்க முடியாது. அதனால் பாதிப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒன்றிய அரசு சார்பில் எண்ணூருக்கு வந்து, பாதிப்புகளை பார்வையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அனைத்து சாலைகளும் பழுதாகி உள்ளது.

உலகில் வாழ்கின்ற அத்தனை தமிழர்களுக்கும் அன்பான வேண்டுகோள். தூத்துக்குடி மக்களுக்கு உதவி செய்யுங்கள், அவர்களுக்கு தேவையான வீடு கட்டி கொடுப்பது, கால்நடைகளை வாங்கிக் கொடுப்பது, வாழ்வாதாரம் பெருகத்துக்கு தேவையான உதவிகளை செய்யுங்கள். பாதிக்கப்பட்டுள்ள மீனவ மக்களுக்கு 2 ஆண்டு காலத்துக்கு வாழ்வாதாரமே இல்லை. எனவே, பாதிக்கபட்ட ஒரு குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி உதவி கொடுக்க வேண்டும், யார் சுற்றுச்சூழல் மாசு படுத்துகிறார்களோ அவர்கள் தான் காசு கொடுக்க வேண்டும். சென்னைக்கு அருகாமையில் 10 ஏரிகளை உருவாக்குங்கள். இல்லையென்றால், 10 ஆண்டுகளுக்குப் பிறகு குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

The post எண்ணூரில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஒன்றிய அரசு பார்வையிட வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Union Government ,Ennoor ,BAMAK ,President ,Anbumani ,Tiruvottiyur ,Mijam ,Puzhal Lake ,Ennore ,PAMC ,Dinakaran ,
× RELATED 2ஜி தீர்ப்பில் தெளிவு தேவை என்ற...