×

கொட்டிவாக்கம் பஞ்சாயத்தில் 1981 முதல் 2005 வரை தற்காலிக பணியில் சேர்க்கப்பட்ட 7 பேரை நிரந்தரம் செய்ய வேண்டும்: மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட கொட்டிவாக்கம், முந்தைய காலத்தில் பஞ்சாயத்து நிர்வாகமாக செயல்பட்டபோது, அங்கு பிளம்பர், மேல்நிலை தொட்டி ஆபரேட்டர், துப்புரவு பணியாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு 15 பேர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், கடந்த 1997ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை வெளியிட்டுள்ள அரசாணையில், 3 ஆண்டுகளுக்கு மேல் தற்காலிகமாக பணியில் உள்ள பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இந்த அரசாணையின்படி தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி 15 பேரும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஹரிபரந்தாமன், அனைவரையும் பணி நிரந்தரம் செய்யும்படி சென்னை மாநகராட்சிக்கு கடந்த 2013ம் ஆண்டு உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை மாநகராட்சி ஆணையர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேலமுறையீடு வழக்கு, நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநகராட்சி தரப்பில் இந்த ஊழியர்கள் அனைவரும் சென்னை மாநகராட்சி சார்பில் தற்காலிகமாக பணியில் சேர்க்கப்படவில்லை. முன்னாள் கொட்டிவாக்கம் பஞ்சாயத்து நிர்வாகம்தான் பணியில் சேர்த்துள்ளது. அதனால், சென்னை மாநகராட்சியிடம் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று இவர்கள் உரிமை கோர முடியாது.

1997ம் ஆண்டு அரசாணையில் கூட, தேவைப்பட்டால் மட்டுமே இதுபோன்ற ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது. இதை எல்லாம் தனி நீதிபதி கருத்தில் கொள்ளாமல் தீர்ப்பு வழங்கியுள்ளதால், அதை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிடப்பட்டது. மனுதாரர்கள் தரப்பில், தேவைப்பட்டால் பணி நிரந்தரம் செய்யலாம் என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளது. இந்த 15 பேரும் தொடர்ந்து பணியாற்றி வருவதால் அவர்களின் பணி மாநகராட்சிக்கு தேவைப்படுகிறது என்பது உறுதியாகிறது. இந்த 15 பேரில், 8 பேர் குடிநீர் வழங்கல் வாரியத்தில் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.

மீதமுள்ள 7 பேரை பணி நிரந்தரம் செய்ய மறுப்பது தொழிலாளர்களிடையே பாரபட்சம் காட்டுவது போல உள்ளது என்பதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தற்காலிக பணியாளர்கள் 8 பேரை மட்டும் பணி நிரந்தரம் செய்து விட்டு, மீதமுள்ள 7 பேரை பணி நிரந்தரம் செய்ய மறுப்பது பாரபட்சமானது. எனவே, இந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. எனவே, 12 வாரங்களுக்குள் 7 பேரையும் மாநகராட்சி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

The post கொட்டிவாக்கம் பஞ்சாயத்தில் 1981 முதல் 2005 வரை தற்காலிக பணியில் சேர்க்கப்பட்ட 7 பேரை நிரந்தரம் செய்ய வேண்டும்: மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Kotivakkam panchayat ,Chennai ,Kottivakkam ,Chennai Corporation ,Kottivakkam Panchayat ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...