×

கொரோனா தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் எடியூரப்பா ஆட்சியில் ரூ.40 ஆயிரம் கோடி முறைகேடு: பாஜ எம்எல்ஏ அதிரடி புகார்

பெங்களூரு: மாநிலத்தில் எடியூரப்பா முதல்வராக இருந்தபோது கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை வழங்கியதில் ரூ.40 ஆயிரம் கோடி வரை முறைகேடு நடந்துள்ளதாக பாஜ பேரவை உறுப்பினரும் முன்னாள் ஒன்றிய அமைச்சருமான பசனகவுடா பாட்டீல் யத்னால் குற்றம்சாட்டினார். இது குறித்து விஜயபுரா நகரில் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் இருந்த சமயத்தில் மாநில முதல்வராக எடியூரப்பா இருந்தார். அப்போது கொரோனா தொற்று பரவல் தடுப்பு உபகரணங்கள் வாங்கியதில் ரூ.40 முதல் 45 ஆயிரம் கோடி வரை முறைகேடு நடந்துள்ளது. ரூ.45 மதிப்புள்ள முக கவசம் (மாஸ்க்) ரூ.485க்கு வாங்கியதாக பில் போடப்பட்டுள்ளது. பெங்களூருவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10 ஆயிரம் படுக்கைகள் தயார் செய்ததாக கூறப்பட்டது. ஆனால் தனியார் நிறுவனங்களிடம் வாடகை அடிப்படையில் படுக்கைகள் பெற்று, அதிலும் சில ஆயிரம் கோடிகள் முறைகேடு நடந்துள்ளது.

தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஒருவருக்கு ரூ.8 முதல் 10 லட்சம் வரை செலவு செய்ததாக பில் போடப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் நானும் பாதிக்கப்பட்டேன். எனது சிகிச்சைக்கு ரூ.5.80 லட்சம் பில் வாங்கினர். இப்படி கொரோனா காலத்தில், ரூ.40 முதல் 45 ஆயிரம் கோடி வரை முறைகேடு செய்துள்ளது உண்மை. இதை நான் பகிரங்கப்படுத்துவதால் கட்சி தலைமை என்ன நடவடிக்கை எடுத்தாலும் சந்திக்க தயாராக உள்ளேன். எனக்கு மாதம் ரூ.2 லட்சம் ஊதியம், கமிட்டி கூட்டங்களுக்கு சென்று வந்தால் ரூ.65 ஆயிரம் படி கிடைக்கிறது. இவ்வளவு வசதிகள் பெறும் நான், மருத்துவ செலவுக்கு அரசாங்கத்திடம் பணம் பெற்றால், நான் மனிதனா? மாநிலத்தில் எங்கள் கட்சி ஆட்சியில் கொரோனா பெயரில் கொள்ளை அடிக்கப்பட்டது திருட்டு தானே. உண்மையை சொல்வதில் என்ன தவறு உள்ளது. அனைவரும் திருடர்களாகி விட்டால் நாட்டையும், மாநிலத்தையும் காப்பாற்றுவது யார்? என்றார்.

The post கொரோனா தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் எடியூரப்பா ஆட்சியில் ரூ.40 ஆயிரம் கோடி முறைகேடு: பாஜ எம்எல்ஏ அதிரடி புகார் appeared first on Dinakaran.

Tags : Yeddyurappa ,BJP MLA ,Bengaluru ,Chief Minister ,
× RELATED குஜராத்தில் பாஜவுக்கு எதிர்ப்பு...