×

குட்டிச்சுவரில் நின்று போஸ் கொடுத்தது, கிராமமே சூழ்ந்த போதும் சற்றும் அஞ்சாத பெண் புலி: உபியில் விநோத சம்பவம்

பிலிபிட்: கிராமமே சூழ்ந்து நின்ற போதும், கூட்டத்தை பார்த்து சற்றும் பயப்படாத, மிரளாத பெண் புலி வீடியோ, போட்டோவுக்கு போஸ் கொடுத்த விநோத சம்பவம் உபியில் நடந்துள்ளது. பொதுவாக வனத்தை ஒட்டிய கிராமங்களில் வனவிலங்குகள் தவறுதலாக வருவது வழக்கம். அவ்வாறு வரும் விலங்குகள் மனிதர்களை பார்த்து மிரளும். சில சமயம் மனிதர்களை, கால்நடைகளை தாக்கும். மனித-விலங்கு மோதல்கள் பெரும்பாலும் இப்படித்தான் அமையும். ஆனால், உத்தரப்பிரதேச மாநிலத்தில் இதற்கு நேர்மாறாக விநோத சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள அத்கோனா கிராமத்தில் நேற்று அதிகாலை பெண் புலி ஒன்று வழிதவறி வந்துள்ளது. காலை 10 மணி அளவில் குட்டிச் சுவர் ஒன்றில் பெண் புலி இருப்பதை பார்த்த கிராம மக்கள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். புலியை பார்க்க ஒட்டுமொத்த கிராமமே அங்கு கூடியது.

குட்டிச் சுவரை சுற்றி உள்ள வீடுகளின் மொட்டை மாடியிலும், தடுப்பு வேலிக்கு வெளியிலும் மக்கள் கூட்டம் கூடியது. கிராமமே கூடிய போதும் அந்த புலி சற்றும் பயப்படவில்லை. அதே சுவரில் ஒய்யாரமாக நடந்து உட்கார்ந்து ஓய்வெடுத்தது. இதனை கிராமமக்கள் தங்கள் செல்போனில் வீடியோ, போட்டோ எடுத்து சமூக ஊடகங்களில் வைரலாக்கினர். பின்னர் வனத்துறை அதிகாரிகள் வந்து புலியை மயக்க ஊசி செலுத்தி பிடித்து, பிலிபிட் புலிகள் காப்பகத்திற்கு கொண்டு சென்றனர். இது குறித்து பிலிபிட் புலிகள் காப்பக துணை இயக்குநர் நவீன் கந்தேல்வால் கூறுகையில், ‘‘பிடிபட்ட பெண் புலி 2 அல்லது 3 வயதுடையது. இளம் வயது புலி என்பதாலும், மக்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே அதன் வாழ்விடம் அமைந்திருப்பதாலும், அது மக்களை பார்த்து மிரளாமல் இருந்திருக்கலாம். அந்த புலி நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளது’’ என்றார்.

The post குட்டிச்சுவரில் நின்று போஸ் கொடுத்தது, கிராமமே சூழ்ந்த போதும் சற்றும் அஞ்சாத பெண் புலி: உபியில் விநோத சம்பவம் appeared first on Dinakaran.

Tags : UP. ,Bilibid ,Upi ,
× RELATED பூத் ஏஜெண்டுகளுக்கு கொடுக்கப்பட்ட...