அண்ணாநகர்: அமமுக பிரமுகர் கொலை வழக்கில், ஆந்திர எல்லையில் பதுங்கிய பிரபல ரவுடியை, துப்பாக்கி முனையில் போலீசார் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக ஒன்றிய கவுன்சிலர் ராஜேஷ் என்பவர், கடந்த 2021ம் ஆண்டு வெட்டி கொலை செய்யப்பட்டார். இதற்கு பழிக்குப்பழியாக அதே பகுதியை சேர்ந்த அமமுக பிரமுகர் ஜெகன் என்பவரை, ராஜேஷின் கூட்டாளிகள் 4 பேர், கடந்த செப்டம்பர் மாதம் 4ம் தேதி சென்னை முகப்பேர் பகுதியில் வைத்து நடுரோட்டில் வெட்டி கொலை செய்தனர். இந்த கொலை சம்பந்தமாக திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த மகேஷ் (26), சுதாகர் (39) ஆகியோர் நொளம்பூர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். இவர்கள் கொடுத்த தகவல்படி, கடந்த ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி திருச்சி மத்திய சிறையில் இருந்த பிரபல ரவுடி மந்திரமூர்த்தியை நொளம்பூர் போலீசார் கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்தினர்.
இதில் ரவுடி மந்திரமூர்த்தி (35) சிறையில் இருந்தபடி ஜெகன் கொலை வழக்கு சம்பந்தமாக பணம் உதவி செய்தார் என்பது தெரியவந்தது. இதையடுத்து, இந்த கொலை வழக்கு சம்பந்தமாக 3வது குற்றவாளியாக ரவுடி மந்திரமூர்த்தியை சேர்த்தனர்.மேலும், ஜெகன் கொலை வழக்கில் 4வது குற்றவாளியாக காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த கார் டிரைவர் சீனிவாசன் (25) கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பிரபல ரவுடி மாரி என்பவர், தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். அவரை கைது செய்வதற்கு 5 தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்தநிலையில், நேற்று ஆந்திரா எல்லையில் பிரபல ரவுடி மாரி (26) பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல்கிடைத்தது, அதன்பேரில், திருமங்கலம் உதவி ஆணையர் வரதராஜன், இன்ஸ்பெக்டர் சூரியலிங்கம் ஆகியோர் தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று அதிகாலை அங்கு விரைந்தனர். அங்கு, போலீசாரை பார்த்ததும் மாரி தப்பி ஓட முயன்றார். போலீசார் அவரை துப்பாக்கி முனையில் சுற்றிவளைத்து கைது செய்தனர். பின்னர், அவரை நொளம்பூர் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரவுடி மாரி மீது ஏற்கனவே கொலை மற்றும் கொலை முயற்சி, கஞ்சா, ஆள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
The post அமமுக பிரமுகர் கொலை வழக்கில் ஆந்திர எல்லையில் பதுங்கி இருந்த ரவுடி துப்பாக்கி முனையில் கைது appeared first on Dinakaran.