×

முதல் நாளில் இந்தியா 208/8: ரபாடா 5 விக்கெட், ராகுல் 70* ரன்

செஞ்சுரியன்: தென் ஆப்ரிக்க அணியுடனான முதல் டெஸ்டில், மழையால் பாதிக்கப்பட்ட முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 8 விக்கெட் இழப்புக்கு 208 ரன் எடுத்துள்ளது. சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டி, மழை காரணமாக நேற்று தாமதமாகத் தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா முதலில் பந்துவீசியது. அந்த அணியில் டேவிட் பெடிங்காம், நாண்ட்ரே பர்கர் அறிமுகமாகினர். இந்திய அணியில் வேகப் பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா அறிமுகமானார். ஜெய்ஸ்வால், கேப்டன் ரோகித் இணைந்து இந்திய இன்னிங்சை தொடங்கினர். ரோகித் 5 ரன் எடுத்து ரபாடா வேகத்தில் வெளியேறினார். ஜெய்ஸ்வால் 17 ரன், கில் 2 ரன் எடுத்து பர்கர் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுக்க, இந்தியா 24 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திணறியது.

இந்த நிலையில், விராத் கோஹ்லி – ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி 4வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 68 ரன் சேர்த்தது. ஷ்ரேயாஸ் 31 ரன், கோஹ்லி 38 ரன், ஆர்.அஷ்வின் 8 ரன் எடுத்து ரபாடா பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினர். இந்தியா 35 ஓவரில் 121 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்து மீண்டும் சரிவை சந்தித்தது. கே.எல்.ராகுல் – ஷர்துல் தாகூர் இணை உறுதியாக விளையாடி 7வது விக்கெட்டுக்கு 43 ரன் சேர்த்தது. ஷர்துல் 24 ரன் எடுத்து ரபாடா வேகத்தில் எல்கர் வசம் பிடிபட்டார். பும்ரா 19 பந்தில் 1 ரன் எடுத்து மார்கோ யான்சென் வேகத்தில் கிளீன் போல்டானார். இந்தியா 59 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 208 ரன் எடுத்திருந்தபோது மழை கொட்டியதால், அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. கே.எல்.ராகுல் 70 ரன், சிராஜ் (0) களத்தில் உள்ளனர். தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் ரபாடா 5, பர்கர் 2, யான்சென் 1 விக்கெட் வீழ்த்தினர். இன்று 2வது நாள் ஆட்டம் நடக்கிறது.

The post முதல் நாளில் இந்தியா 208/8: ரபாடா 5 விக்கெட், ராகுல் 70* ரன் appeared first on Dinakaran.

Tags : India ,Rabada ,Rahul ,South Africa ,Dinakaran ,
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...