×

சுசீந்திரம் கோயில் தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

சுசீந்திரம்: சுசீந்திரம் தாணுமாலயன்சுவாமி கோயில், மார்கழி திருவிழா கடந்த 18ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா காட்சிகள் நடந்து வருகிறது. 3ம் திருவிழாவான 20ம் தேதி கோட்டாறு வலம்புரி விநாயகர், மருங்கூர் சுப்பிரமணிய சுவாமி, வேளிமலை குமாரசாமி ஆகியோர் தங்கள் தாய்- தந்தையரான சிவன், பார்வதி தேவியை சந்தித்து வலம் வரும் மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. 5ம் திருவிழாவான 22ம் தேதி காலை கருட தரிசனம் நடைபெற்றது. 8ம் திருவிழாவான நேற்று காலை 5 மணிக்கு சிதம்பரேஸ்வரர் திருவீதியுலா வரும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பேரம்பலம் திருக்கோயில் முன்பு நடராஜ பெருமான், ஆனந்த திருநடனமாடும் காட்சி நடந்தது.

காலை 10 மணிக்கும், மாலை 4 மணிக்கும் தாணுமாலயன் சுவாமி கோயில் நடராஜ பெருமான் மற்றும் சிவகாமி அம்பாளுக்கு அலங்கார மண்டபத்தில் வைத்து அஷ்டாபிஷேகம் நடந்தது. இரவு 8 மணிக்கு சிதம்பரேஸ்வரர் திருவீதியுலா நடைபெற்றது. மார்கழி மாத திருவிழாவின் முக்கிய நாளான 9ம் திருவிழாவான இன்று அதிகாலை 4 மணிக்கு கங்காளநாதர் பிட்சாதனராக திருவீதியுலா வரும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் விநாயகர், சுவாமி, அம்பாள் ஆகியோர் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தனர். அதன் பிறகு இன்று காலை 9 மணியளவில் விநாயகர் தேரில் விநாயகர், சுவாமி தேரில் சுவாமி-அம்பாள், அம்பாள் தேரில் அம்பாளையும் அமர செய்து ரதவீதியை சுற்றி வரும் தேரோட்டம் நடந்தது.

முன்னதாக தேர் சக்கரத்திற்கு தேங்காய் உடைத்து சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் விஜய் வசந்த் எம்பி, குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மேயர் மகேஷ், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ரெமோன் மனோதங்கராஜ், கோயில்களின் இணை ஆணையர் ரத்னவேல் பாண்டியன், அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். விநாயகர் தேர் மற்றும் சுவாமி தேரை பத்கர்கள் வடம்பிடித்து இழுக்க, அம்பாள் தேரை பெண்கள் மட்டும் வடம்பிடித்து இழுத்தனர். வழிநெடுகிலும் பக்தர்களின் வெள்ளத்தில் தேர் ஆடி அசைந்து வந்த காட்சி காண்போரை கண்குளிர செய்தது. விண்ணதிர பக்தி கரகோஷம் எங்கும் ஒலித்தது. இந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்ததோடு, சாமி தரிசனமும் செய்தனர்.

திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு, சுசீந்திரம் பேரூராட்சி தலைவர் அனுசுயா, செயல் அலுவலர் கமலேஸ்வரி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அருண் காந்த், சுசீந்திரம் பேரூர் செயலாளர் சுதை சுந்தர், திமுக 8வது வார்டு உறுப்பினர் கதிரேசன், சுசீந்திரம் 8வது வார்டு அமைப்பாளர் அழகு தாமோதரன், திருவாடுதுறை ஆதீனம் வீரநாதன், வள்ளலார் பேரவை பத்மாநந்த சுவாமி, சுசீந்திரம் எஸ்.எம்.எஸ்.எம் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணன், அதிமுக பொறுப்பாளர் ஆறுமுகம், பாஜக மாவட்ட செயலாளர் ராஜ, வடக்கு ஒன்றிய செயலாளர் மாதவன் பிள்ளை மற்றும் பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதையடுத்து மாலை 6 மணிக்கு சுவாமி தங்க பல்லக்கில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 11 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி திருவீதியுலா வருதல், இரவு 12 மணிக்கு தனது தாய்-தந்தையரின் விழாவில் கலந்துகொள்ள வந்த மருங்கூர் சுப்பிரமணியசுவாமி, வேளிமலை குமாரசாமி, கோட்டார் வலம்புரி விநாயகர் ஆகியோர் விழாவை முடித்துக்கொண்டு தாய்-தந்தையரை மீண்டும் 3 முறை வலம் வந்து பிரிந்து செல்லும் சப்தவர்ண காட்சி நடக்கிறது.
இந்த காட்சியை திருமணமாகாதவர்கள் கண்டால் விரைவில் திருமணமாகும், திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும், முதியவர்களுக்கு சிறந்த முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.

10ம் திருவிழாவான நாளை அதிகாலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனம், மாலை 5 மணிக்கு நடராஜர் திருவீதியுலா வருதல், இரவு 9 மணிக்கு மூலவருக்கு அலங்கார அபிஷேகம் மற்றும் திருஆராட்டு ஆகியவை நடக்கிறது. இத்துடன் மார்கழி மாத திருவிழா நிறைவடைகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில்களின் இணை ஆணையர் ரத்னவேல் பாண்டியன், அறங்காவலர் குழு உறுப்பினர் பிரபா ராமகிருஷ்ணன், கண்காணிப்பாளர் ஆனந்த், கணக்கர் கண்ணன், அறங்காவலர் குழு உறுபினர்கள் ராஜேஷ், ஜோதி குமார், சுந்தரி, துளசிதரன் நாயர், தாணுமாலயன் சுவாமி பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து செய்தனர்.

The post சுசீந்திரம் கோயில் தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Susintharam Temple ,Terotam ,Susindram ,Marghazi festival ,Susindram Tanumalayansuwami Temple ,Susinthram Temple ,
× RELATED ராசிபுரம் ஸ்ரீ பொன் வரதராஜ பெருமாள்...