×

திருஉத்தரகோசமங்கையில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி மரகத நடராஜருக்கு சந்தனக்காப்பு களைதல் கோலாகலம்: 32 வகையான அபிஷேகம்: பக்தர்கள் குவிந்து தரிசனம்


ராமநாதபுரம்: ஆருத்ரா தரிசனத்தையொட்டி திருஉத்தரகோசமங்கையில் ஒற்றைக்கல்லால் ஆன மரகத நடராஜருக்கு சாத்தப்பட்டிருந்த சந்தனக்காப்பு இன்று காலை களையப்பட்டு 32 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் மூலிகை தைலம் சாத்தப்பட்டு பொதுமக்கள் தரிசனம் செய்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம், திருஉத்தரகோசமங்கையில் புகழ்பெற்ற மங்களேஸ்வரி அம்மன் உடனுறை மங்களநாதர் கோயில் உள்ளது. இங்கு சிவன் பச்சை நிற மரகதக்கல்லாலான நடராஜராக, சுயம்புவாக தெற்கு நோக்கி காட்சியளிக்கிறார். சுமார் 6 அடி உயரமுள்ள இந்த ஒற்றை மரகதக்கல் நடராஜர் சிலை கலை நுணுக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. பாலாபிஷேகம் செய்யும்போது, சிலையில் வடிவமைக்கப்பட்டுள்ள நரம்புகள் தெளிவாக தெரியும்.

இதனால், ஒலி, ஒளியால் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக சுமார் 25 கிலோ எடையுள்ள தூய சந்தனம் பூசப்பட்டு, ஆண்டிற்கு ஒரு நாள் மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்தில் ஆருத்ரா தரிசனத்தன்று களைவது வழக்கம். இந்த சந்தனம் நோய் தீர்க்கும் மருந்தாகவும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் நம்பிக்கையுடன் சாப்பிடும் மருந்தாகவும் உள்ளது. மரகத நடராஜருக்கு தினசரி அபிஷேகம், பூஜைகள் செய்ய முடியாது என்பதற்காக வருடத்தில் 364 நாட்கள் சிறிய வடிவிலாக ஸ்படிக லிங்கத்திற்கும், மரகதலிங்கத்திற்கும் அபிஷேகம் நடக்கும். இந்த நிலையில் கோயிலில் ஆருத்ரா தரிசன திருவிழா கடந்த 18ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அன்று முதல் தினசரி பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.

சந்தனக் காப்பு களைதல் நிகழ்ச்சி
இந்நிலையில், இன்று காலை 8.30 மணியளவில் ராமநாதபுரம் சமஸ்தான மகாராணி ராஜராஜேஸ்வரி நாச்சியார் சார்பில், அவரது குடும்பத்தினர் முன்னிலையில், மங்களநாதர் கோயிலில் புஷ்பாஞ்சலி பூஜைகள் செய்யப்பட்டு, திருநடை திறக்கப்பட்டது. பிறகு திருவாசகம், சிவபுராணம் வேதமந்திரங்கள் ஓதப்பட்டு, சந்தனக்காப்பு களையும் நிகழ்ச்சி நடந்தது. இதை தொடர்ந்து நடராஜர் சிலைக்கு மஞ்சள், பால், சந்தனம், விபூதி, திருமஞ்சனம், நெல்லிப் பொடி, பழம் வகைகள், பஞ்சாமிர்தம், தாழம்பூ உள்ளிட்ட மலர் உள்ளிட்ட 32 வகை பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபராதனை செய்யப்பட்டது. பிறகு மூலிகை திரவியங்கள் பூசப்பட்டு நிலையில் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.

இன்று இரவு 10 மணிக்கு மூலவர் கூத்தர் கல்மண்டபத்தில் எழுந்தருளுதல் நடைபெறுகிறது. 10.30 மணிக்கு இரண்டாம் கால அபிஷேகம், சிறப்பு பூஜைகள், வழிபாடு அதனை தொடர்ந்து தீபராதனை நடக்கிறது. நாளை அதிகாலை ஒரு மணிக்கு திருநடை சாத்தப்படும். அதிகாலை 2 மணி முதல் மகா அபிஷேகம் செய்யப்பட்டு 3 மணிக்கு புதிய சந்தனம் காப்பிடுதல், 4 மணிக்கு ஆருத்ரா, மகா தீபராதணை நடக்கிறது. சந்தனம் பூசப்பட்ட நிலையில் பொதுமக்கள் தரிசனம் நடக்கும். மாலை 5 மணிக்கு பஞ்சமூர்த்திகள் அபிஷேகம், மாணிக்கவாசகருக்கு காட்சியளித்து சுவாமி புறப்பாடு, வெள்ளி ரிசப வாகன புறப்பாடு ஊர்வலம் நடத்தப்பட்டு இரவு நடை சாத்தப்படும். விழா ஏற்பாடுகளை சமஸ்தானம் திவான் பழனிவேல்பாண்டியன் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது. எஸ்.பி தங்கத்துரை தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

உள்ளூர் விடுமுறை: சிறப்பு பஸ்கள் இயக்கம்
ஆருத்ரா தரிசன நிகழ்ச்சியையொட்டி அரசு சார்பில் மதுரை, பரமக்குடி, கடலாடி, கமுதி, முதுகுளத்தூர், ராமநாதபுரம் ஆகிய ஊர்களிலிருந்து உத்தரகோசமங்கைக்கு 50 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

The post திருஉத்தரகோசமங்கையில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி மரகத நடராஜருக்கு சந்தனக்காப்பு களைதல் கோலாகலம்: 32 வகையான அபிஷேகம்: பக்தர்கள் குவிந்து தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Thiruuttarakosamangai ,Ramanathapuram ,Nataraja ,
× RELATED திருஉத்தரகோசமங்கையில் சித்திரை திருவிழா தேரோட்டம்