×

19ம் ஆண்டு சுனாமி நினைவு தினம்; கடலில் பால் ஊற்றி மக்கள் கண்ணீர் அஞ்சலி: மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை


நாகை: தமிழக கடற்கரைகளில் இன்று 19ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. கடலில் பால் ஊற்றியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் மக்கள் அஞ்சலி செலுத்தினர். கடந்த 2004 டிசம்பர் 26ம் தேதி சுனாமி பேரழிவை ஏற்படுத்தியது. இது நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டத்துக்கு ஆறாத வடுவை உண்டாக்கியது. இதன் 19ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. நாகை நம்பியார் நகரில் சுனாமி நினைவு தின பேரணி ஏழைப்பிள்ளையார் கோயில் தெருவில் இருந்து இன்று காலை புறப்பட்டது. இதில் ஏராளமான நம்பியார் நகர் மக்கள் பங்கேற்று சமுதாய கூடம் அருகே உள்ள சுனாமி நினைவு ஸ்தூபியில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நம்பியார் நகர் கடற்கரை சென்று சுனாமியால் உயிரிழந்தவர்கள் நினைவாக தர்ப்பணம் செய்தனர். அப்போது ஏராளமான பெண்கள் கடற்கரையில் அமர்ந்து ஒப்பாரி வைத்து அழுதனர்.

கீச்சாங்குப்பம் மீனவர் கிராமத்தில் உயிரிழந்த 610 பேரின் உடலை ஒரே இடத்தில் புதைக்கப்பட்ட இடத்தில் உள்ள நினைவு மண்டபத்தில் மோட்ச தீபம் ஏற்றி, மலர்தூவி மீனவர்கள் அஞ்சலி செலுத்தினர். நாகை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சுனாமி நினைவு ஸ்தூபியில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் மற்றும் அரசு ஊழியர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதேபோல் நாகை அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தில் உள்ள சுனாமி நினைவு ஸ்தூபியில் மலர்வளையம் வைத்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். நாகை மாவட்டத்தில் உள்ள 25 மீனவ கிராமங்களில் 3 லட்சத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் தங்களது உறவினர்களுக்கு கடலில் பால் தெளித்து அஞ்சலி செலுத்தினர். இதேபோல் வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சுனாமி நினைவு நாளை அனுசரித்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரை மீன் விற்பனை நிலையத்தில் இருந்து பழைய பேருந்து நிலையம் வரை பொதுமக்கள் பங்கேற்ற மவுன ஊர்வலம் நடந்தது. பூம்புகாரில் சுனாமியின்போது உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள நினைவு ஸ்தூபியில் மீனவர்கள், பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். கடலூர் முதுநகர் சிங்காரத்தோப்பில் உள்ள சுனாமி நினைவுத்தூணுக்கு சுனாமியில் பலியானவர்களின் உறவினர்கள் மலர் வளையம் வைத்தும், மலர்தூவியும் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பாக அதன் தலைவர் சுப்பராயன் தலைமையில் பொதுமக்கள் ஊர் வலமாக சென்று கடற்கரையில் அஞ்சலி செலுத்தினர். அப்போது பெண்கள் கடலில் பால் ஊற்றியும் மலர்தூவியும், துக்கம் தாங்காமல் கதறி அழுதனர். கடற்கரை மணலில் மெழுகுவர்த்தி ஏற்றியும் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். சுனாமியால் உறவுகளை இழந்த பெண்கள் ஒருவக்கொருவர் கட்டித்தழுவி கதறி அழுதது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதேபோல் குமரியும் சுனாமி நினைவு தினம் அனுரிக்கப்பட்டது.

வேளாங்கண்ணியில் சிறப்பு திருப்பலி
வேளாங்கண்ணி பேராலயத்தில் அதிபர் இருதயராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி இன்று காலை 10 மணிக்கு நடந்தது. இதுபோல் வேளாங்கண்ணியில் சுனாமியால் உயிரிழந்த 1000க்கும் அதிகமானோரை ஒரே இடத்தில் அடக்கம் செய்த வேளாங்கண்ணியில் உள்ள சுனாமி நினைவு ஸ்தூபில் மும்மத பிரார்த்தனை நடந்தது. இதில் ஏராளமானோர் மெழுகுவர்த்தியை கையில் ஏந்தி கடற்கரையிலிருந்து அமைதி பேரணியாக வந்து அஞ்சலி செலுத்தினர். அப்போது பகவத் கீதை, குரான், விவிலியம் உள்ளிட்டவைகளில் இருந்து வாசகங்களை அந்தந்த மதத்தினர் வாசித்தனர். சுனாமி ஏற்பட்டு 19 ஆண்டுகள் கடந்து போனாலும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் பல்வேறு மாவட்டத்தில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் வந்து இருந்து வேளாங்கண்ணி நினைவு ஸ்தூபியில் மாலைகளை வைத்து இறந்தவர்களுக்கு பிடித்தமான உணவு வகைகளை வைத்து அஞ்சலி செலுத்தினர்.

The post 19ம் ஆண்டு சுனாமி நினைவு தினம்; கடலில் பால் ஊற்றி மக்கள் கண்ணீர் அஞ்சலி: மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை appeared first on Dinakaran.

Tags : 19th Tsunami Remembrance Day ,Nagai ,Remembrance Day ,Tamil Nadu ,19th ,Tsunami Memorial Day ,Dinakaran ,
× RELATED நாகையில் குடிநீர் வழங்காததைக்...