×

விதிகளை மீறி கல்வி நிறுவனம் நடத்திய புகாரில் சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் கைது: போலீஸ் அதிரடி

சேலம்: விதிகளை மீறி கல்வி நிறுவனம் நடத்திய புகாரில் சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டார். பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங்கோவன் அளித்த புகாரில் துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். துணைவேந்தர் ஜெகநாதனை கைது செய்து சேலம் கருப்பூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலி ஆவணங்கள் தயாரித்து தனியார் நிறுவனங்களிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. பெரியார் பல்கலை. துணைவேந்தராக உள்ள ஜெகநாதன் தனது கூட்டாளிகள் சிலருடன் சேர்ந்து பூட்டர் என்ற தனி நிறுவனத்தை தொடங்கியுள்ளார். அரசு செலவில் அலுவலர்களை பயன்படுத்தியது, தனி நிறுவனங்கள் தொடங்கியது உள்ளிட்ட குற்றச்சாட்டில் போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.

சர்ச்சைக்குரிய துணைவேந்தர் ஜெகநாதன் கைது:

பெரியார் பல்கலை. சார்பில் கல்வி வழங்குவதற்காக துணைவேந்தரே தனி நிறுவனம் தொடங்கியிருப்பது விதிமீறல் என புகார் தெரிவிக்கப்பட்டது. துணைவேந்தரின் செயல்பாடு பல்கலை.யை கூறுபோட்டு விற்பதற்கு சமம் என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியிருந்தார். கல்வி வளர்ச்சிக்காக ஆக்கப்பூர்வமாக எதையும் செய்யாத துணைவேந்தர் ஜெகநாதன், ஊழலில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

துணைவேந்தர் ஜெகநாதன் கைது ஏன்? புகார்கள் என்ன?:

பல்கலை.யில் பணியாற்றிக் கொண்டே அதில் புதிய நிறுவனம் தொடங்குவது சட்ட விரோதம் என்று குற்றச்சாட்டு எழுந்தது. துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல், இணை பேராசிரியர் சதீஷ், பாரதிதாசன் பல்கலை. பேராசிரியர் ராம்கணேஷ் இணைந்து அறக்கட்டளை தொடங்கினர். பல்கலைக்கழகம் வசூலிக்கும் கட்டணத்தை விட பல மடங்கு அதிக கட்டணத்தை பூட்டர் அறக்கட்டளை வசூலித்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

பல்கலை.யில் பணியாற்றிக்கொண்டே புதிய நிறுவனம்:

ஜெகநாதன் கூட்டாளிகள் 3 பேர் தனியாக இணைந்து அப்டெக்கான் ஃபோரம் என்ற மற்றொரு அமைப்பையும் உருவாக்கி உள்ளனர். பல்கலைக்கழகத்தின் துணை அமைப்புகளாக இவற்றை தொடங்காமல் அதிக லாபம் ஈட்டும் தனி நிறுவனங்களாக தொடங்கியதாக புகார் எழுந்தது. அரசின் அனுமதியைப் பெறாமல் பல்கலை.யில் பணியாற்றிக் கொண்டே தனி நிறுவனங்களை தொடங்கியதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது.

பல்கலை. கட்டமைப்பை துஷ்பிரயோகம் செய்த ஜெகநாதன்:

பல்கலைக்கழக கட்டமைப்புகளை தவறாக பயன்படுத்தி சொந்த நிறுவனங்கள் லாபமடையும் வகையில் செயல்பட்டதாக துணைவேந்தர், பதிவாளர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தில் நடந்த 13 வகையான முறைகேடுகள் குறித்து விசாரிக்க கடந்த ஜன.9-ம் தேதி உயர்நிலைக் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது.

The post விதிகளை மீறி கல்வி நிறுவனம் நடத்திய புகாரில் சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் கைது: போலீஸ் அதிரடி appeared first on Dinakaran.

Tags : SALEM PERIYAR UNIVERSITY ,JEKANATHAN ,Salem ,Jehanathan ,vice chancellor ,Periyar ,
× RELATED சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர்...