×

நெல்லை மாவட்டத்தில் 8 தாலுகாவில் வெள்ள நிவாரண டோக்கன் விநியோகம் இன்று தொடங்கியது: 29ம் தேதி முதல் நிவாரண தொகை பெறலாம்


நெல்லை: நெல்லை மாவட்டத்தில் மழை, வெள்ள பாதிப்பிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த ரூ.6 ஆயிரம் நிவாரண தொகைக்கு டோக்கன் வழங்கும் பணி இன்று காலை தொடங்கியது. 29ம் தேதி காலை முதல் ரேஷன் கடைகளில் நிவாரண தொகை ெபற்று கொள்ளலாம். நெல்லை மாவட்டத்தில் கடந்த 17ம் தேதி கொட்டிய கனமழை பல குடியிருப்புகளை சூழ்ந்தது. வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வீட்டில் இருந்த உடைமைகள், வீடுகள், கால்நடைகளை இழந்து பொதுமக்கள் தவிக்கின்றனர். விவசாய பயிர்களும் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இந்நிலையில் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் வெள்ள சேதங்களை பார்வையிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், கடுமையாக பாதிக்கப்பட்ட தாலுகாக்களுக்கு ரூ.6 ஆயிரம் வெள்ள நிவாரணமும், பிற தாலுகாக்களுக்கு ரூ.1000 வெள்ள நிவாரணமும் அறிவித்தார்.

இந்த நிவாரண தொகையை பொதுமக்களுக்கு வழங்குவதற்காக ரேஷன் கடைகள் மூலம் டோக்கன் விநியோகம் இன்று காலை தொடங்கியது. நெல்லை மாவட்டத்தில் உள்ள 796 ரேஷன் கடைகள் மூலம் இந்த டோக்கன் வழங்கப்படுகிறது. பாளையங்கோட்டை, நெல்லை, சேரன்மகாதேவி தாலுகாக்களில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும், அம்பை தாலுகாவில் 16 கிராமங்கள், ராதாபுரம் தாலுகாவில் 12 கிராமங்கள், நாங்குநேரி தாலுகாவில் 30 கிராமங்கள், மானூர் தாலுகாவில் 17 கிராமங்கள், திசையன்விளை தாலுகாவில் 11 கிராமங்களுக்கு தலா ரூ.6 ஆயிரம் நிவாரண தொகை வழங்கப்படுகிறது. இதன் மூலம் 3 லட்சத்து 58 ஆயிரத்து 815 ரேஷன் கார்டுகளுக்கு தலா ரூ.6 ஆயிரம் நிவாரண ெதாகை வழங்கப்படுகிறது.

5 தாலுகாவில் உள்ள மற்ற கிராமங்களில் ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 542 ரேஷன் கார்டுகளுக்கு தலா ரூ.1000 நிவாரண தொகை வழங்கப்படுகிறது. இதற்கான டோக்கன் விநியோகம் 796 ரேஷன் கடைகள் மூலம் இன்று காலை தொடங்கியது. இன்று, நாளை, நாளை மறுநாள் என 3 நாட்கள் தொடர்ந்து டோக்கன் வழங்கப்படுகிறது. பொதுமக்கள் டோக்கன் பெற்று கொள்ளலாம். 29ம் தேதி காலை முதல் அரசின் நிவாரண தொகை ரூ.6 ஆயிரம், ரூ.1000 ரேஷன் கடைகளில் பெற்று கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post நெல்லை மாவட்டத்தில் 8 தாலுகாவில் வெள்ள நிவாரண டோக்கன் விநியோகம் இன்று தொடங்கியது: 29ம் தேதி முதல் நிவாரண தொகை பெறலாம் appeared first on Dinakaran.

Tags : Nellai district ,Nellai ,Chief Minister ,M.K.Stalin ,Dinakaran ,
× RELATED ஜெயக்குமார் மரணம் தொடர்பாக நெல்லை...